Published:Updated:

சினிமா விமர்சனம்: எனை நோக்கி பாயும் தோட்டா

விகடன் விமர்சனக்குழு

தனுஷுக்கு இது ‘துள்ளுவதோ இளமை’க்கு அடுத்த படம் என்று சொன்னால் கூகுளிடாமல் நம்பலாம்.

பிரீமியம் ஸ்டோரி

ன்னை நோக்கிப் பாயும் தோட்டாவுக்குப் பின்னாலிருக்கும் துப்பாக்கிக் கரங்களைத் தேடி வேட்டையாடும் தனுஷின் ஆட்டமே ‘எனை நோக்கி பாயும் தோட்டா.’

கையில் காப்பு, லினன் ஷர்ட், டெனிம் ஜீன்ஸ் என கூல் ப்ரோவாக தனுஷ். கல்லூரிக்குள் ஷூட்டிங்குக்காக வரும் சினிமா ஹீரோயின் மேகா. வழக்கமான மேனன் பட ஹீரோ இலக்கணப்படி பார்த்ததும் காதல் கொள்கிறார் தனுஷ். நடிப்பின் மேல் ஆர்வம் இல்லாமல் இருக்கும் மேகாவும் ‘முதல் நீ முடிவும் நீ’ என தனுஷுக் காகக் கசிந்துருக, தொடங்குகிறது காதல் அத்தியாயம். தொடங்கிய வேகத்தில் குறுக்கே வந்து கொடூர முகம் காட்டுகிறார் மேகாவின் பாதுகாவலர் செந்தில் வீராசாமி. சிறுவயதில் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்துபோன அண்ணன் சசிகுமாருக்கு, மும்பையில் ஆபத்து என்று அறிந்ததும் அங்கே செல்கிறார் தனுஷ். சசிகுமாருக்கு என்ன ஆபத்து, காதலியுடன் இணைந்தாரா என்பதை டைட்டில் போட்டதில் இருந்து எண்டு கார்டு வரைக்கும் காது வலிக்க வலிக்கக் கதை சொல்லியிருக்கிறார்கள்.

தனுஷுக்கு இது ‘துள்ளுவதோ இளமை’க்கு அடுத்த படம் என்று சொன்னால் கூகுளிடாமல் நம்பலாம். அவ்வளவு அழகு, அவ்வளவு இளமை! நடிப்பிலும் தனித்துத் தெரிகிறார் தனுஷ். குனிந்திருக்கும் காட்சியில்கூடப் புருவ நெறிப்புகளால் உணர்ச்சிகளைக் கொட்டுவது, மார்ச்சுவரியில் மரணச்செய்தி கேட்டதும் முகத்தில் உணர்வுகளின் தாண்டவம், பிரிவின் துயர் தாங்கி அழும் அந்த இரண்டு நிமிடங்கள் என ஒவ்வொரு காட்சியிலும் உச்சம் தொடுகிறார்.

Enai Noki Paayum Thota
Enai Noki Paayum Thota

க்யூட் குளோப்ஜாமூனாக மேகா ஆகாஷ். அழகில் அசரடிக்கிறார். நடிப்பு மட்டும் தொடக்கநிலை. ஒயிட் காலர் வில்லனாக செந்தில் வீராசாமி. வசன உச்சரிப்பிலும், நக்கல் சிரிப்பிலும் மிரட்டுகிறார். கதைக்கு ஆதாரமான அண்ணன் கதாபாத்திரம் சரியாக எழுதப்படாததும் அதற்கு சசிகுமார் சரியாகப் பொருந்தாததுமே படத்தின் பல மைனஸ்களில் முக்கியமானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தர்புகா சிவாவின் பாடல்கள் மூன்றாண்டுகள் தாண்டியும் மக்களை தியேட்டருக்கு வரவழைக்கிற தென்றால் பின்னணி இசை, வந்தவர்களைக் கட்டிப்போடுவதே காரணம். சித்ஸ்ரீராமின் உருகும் குரலில் ‘மறுவார்த்தை’யும், ‘விசிறி’ பாடலும் நம்மை மிதக்கவைக்கின்றன. ஜோமோன் டி.ஜான் - மனோஜ் பரமஹம்ஸாவின் கேமரா கண்கள் காதலில் மயிலிறகு; ஆக்‌ஷனில் வெடிச்சிதறல்! உத்தரா மேனனின் ஆடைத்தேர்வு தனுஷுக்கும் மேகாவுக்கும் அழகுசேர்க்கின்றன. `நான் பிழைப்பேனோ’ நடன அமைப்பு - ரசனை!

Dhanush, Megha Akash
Dhanush, Megha Akash

கெளதமின் காதல் எபிசோடு இன்னமும் செம ஃப்ரெஷ்ஷாக இருப்பது படத்தின் ப்ளஸ். ஆனால் கதை, அதே முந்தைய படங்கள்தான் என்பது பெரிய மைனஸ். ‘பயணிகளின் கனிவான கவனத்துக்கு’ என ரயில்நிலைய அறிவிப்புபோல படம் நெடுக வரும் வாய்ஸ் ஓவர் ரொம்பவே ஓவர். ஒருபுறம் பெண்களை மரியாதையாகச் சித்திரித்துக்கொண்டே இன்னொருபுறம் ஹீரோ, வில்லன் என அனைவரும் பெண்களைக் கொச்சைப்படுத்தும் வார்த்தைகளைத் தாராளமாக உச்சரிக்கிறார்கள்.

கெளதம் மேனன் தன் வளையத்திலிருந்து வெளியே வந்து ட்ரிக்கரை இழுத்திருந்தால் தோட்டா நிச்சயம் இலக்கைத் துளைத்திருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு