Published:Updated:

எனிமி - சினிமா விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு

ஆக்‌ஷன் கதாபாத்திரங்களைப் பலமுறை நடித்து விஷாலுக்கும் பழகிவிட்டது. பார்க்கும் நமக்கும் பழகிவிட்டது. உறுத்தல்கள் என எதுவுமில்லை

பிரீமியம் ஸ்டோரி

நட்பும் ஈகோவும் எதிரெதிர் முனைகளில் நின்றுகொண்டு முரண்டுபிடித்தால் அதுதான் இந்த ‘எனிமி.'

‘இருக்குற இடம் தெரியாம இருந்துட்டுப் போய்டணும்' என வாழ்க்கையில் ரிஸ்க்கே எடுக்கத் துணியாத தம்பி ராமையாவின் மகன் விஷால்; அப்பாவுக்கு அப்படியே நேரெதிர். பக்கத்துவீட்டில் கட்டுப்பாடான முன்னாள் சி.பி.ஐ அதிகாரி பிரகாஷ் ராஜும் அவரின் மகன் ஆர்யாவும். தன் மகனுக்குக் கற்றுக்கொடுப்பதையெல்லாம் விஷாலுக்கும் பிரகாஷ் ராஜ் கற்றுக்கொடுக்க, இயல்பாகவே அவர்களிருவருக்குள்ளும் போட்டி மனப்பான்மை வந்துவிடுகிறது. வளர்ந்தபின் அந்தப் போட்டி மனப்பான்மை அவர்கள் இருவரையும் எவ்வளவு சிக்கலுக்கு உள்ளாக்குகிறது என்பதுதான் கதை.

ஆக்‌ஷன் கதாபாத்திரங்களைப் பலமுறை நடித்து விஷாலுக்கும் பழகிவிட்டது. பார்க்கும் நமக்கும் பழகிவிட்டது. உறுத்தல்கள் என எதுவுமில்லை. மறுமுனையில் உணர்ச்சிகளைப் பெரிதாக வெளிக்காட்ட வேண்டிய வேலையில்லாததால் ஆர்யாவுமே தப்பித்துவிடுகிறார். கமர்ஷியல் படங்களுக்கேயுரிய ஹீரோயின்களாக வந்துபோகிறார்கள் மிருணாளினியும் மம்தாவும். எதைப் பார்த்தாலும் பயப்படும் தம்பி ராமையாவைப் பார்த்துக் கடைசியில் நாம் பயப்படுமளவிற்கான மிகை நடிப்பு இரண்டாம் பாதியில். கருணாகரன் காமெடி - மிஸ்ஸிங்!

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு மட்டுமே இந்த நீளமான கண்ணாமூச்சி ஆட்டத்தைத் தாக்குப்பிடிக்க வைக்கிறது. அவருக்கு ஓரளவு ஒத்துழைக்கிறது சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை. தமனின் பாடல்களில் ‘டும் டும்’ மட்டும் துள்ளல். தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய ஆக்‌ஷன் ஹீரோக்கள் மோதுவதை முடிந்த அளவிற்கு சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் ஸ்டன்ட் டைரக்டர் ரவி வர்மா. கதைதான் அதற்கான தேவையை அவருக்கு நிறைய வழங்கவில்லை.

எனிமி - சினிமா விமர்சனம்

சாதாரண மளிகைக் கடைக்காரரான விஷாலுக்கு உலகின் முன்னணி டெக்னாலஜிகள் அனைத்துமே பயன்படுத்தக் கிடைக்கின்றன. அவ்வளவு ஏன், மிக மிக முக்கியமான ஒருவரையே சட்டெனத் துப்பாக்கியைப் பிடுங்கிச் சுடுகிறார் விஷால். ஆனால் காவல்துறையோ, ‘அவரு நல்லவரு. கண்டிப்பா காரணமிருக்கும்' என சல்யூட் அடிக்கிறது. மற்றொரு பக்கம் உலகின் அதிபுத்திசாலி கிரிமினலான ஆர்யாவோ, தன்னை யார் பின்தொடர்கிறார் என்பதைத் திரும்பிப் பார்க்கக்கூடத் தோன்றாத எளிமை குணம் படைத்த எனிமியாக இருக்கிறார்.

போதாக்குறைக்கு இருவருமே மாறி மாறி, ‘நீ புத்திசாலி’, ‘நீ புத்திசாலி' எனச் சொல்லிக்கொள்கிறார்களே தவிர இறுதிவரை புத்திசாலித்தனமாக எதுவுமே செய்யமாட்டேன் என்கிறார்கள். சீன - இந்திய அரசியல், புலம்பெயர்ந்தவர்கள் வலி என எல்லாவற்றையும் தொட்டு அப்படியே அந்தரத்தில் விட்டுச் செல்கிறார் இயக்குநர் ஆனந்த ஷங்கர். அதுவும் இறுதியாய் வரும் அந்தக் கடத்தல் காட்சியமைப்பு - நம் பொறுமையின் எல்லையை நாமே தெரிந்துகொள்ள உதவுகிறது.

எனிமி - சினிமா விமர்சனம்

ஹீரோவும் சண்டைக் காட்சிகளும் இருந்தால் படம் த்ரில்லராகிவிடும் என்கிற எண்ணத்தை விடுத்து, கதையில் கவனம் செலுத்தியிருந்தால் எனிமி பயமுறுத்தியிருப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு