சினிமா
Published:Updated:

என்னங்க சார் உங்க சட்டம் - சினிமா விமர்சனம்

என்னங்க சார் உங்க சட்டம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
என்னங்க சார் உங்க சட்டம் - சினிமா விமர்சனம்

தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கும் வெளி அனைவருக்கும் இருக்கிறதுதான். ஆனால் ...

நெடுங்காலமாய் விவாதப் பொருளாகவே இருக்கும் இடஒதுக்கீட்டை அரசியல் போதாமைகளோடு சினிமாவாக பேச முயன்றிருக்கும் படமே ‘என்னங்க சார் உங்க சட்டம்?’

தயாரிப்பாளர் ஒருவருக்குக் கதை சொல்லச் செல்கிறார் இளைஞர் ஒருவர். வெட்டியாய்ச் சுற்றும் ஒருவனின் காதல் அத்தியாயங்கள் பற்றிய முதல் கதை தயாரிப்பாளருக்குப் பிடிக்காமல் போக, இடஒதுக்கீடு மூன்று தனிநபர்களின் வாழ்க்கையில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதாய் நகரும் இரண்டாவது கதையாவது தயாரிப்பாளரை ஈர்த்ததா இல்லையா என்பதுதான் இறுதிக்கட்டம்.

ஹீரோவாய் நடித்திருக்கும் ஆர்.எஸ் கார்த்திக் நகைச்சுவைக் காட்சிகளில் மட்டும் தேறுகிறார். ரோகிணியும், பக்ஸும் படத்தில் தோன்றுகிறார்கள். பேசுகிறார்கள். போகிறார்கள். குணா பாலசுப்ரமணியத்தின் இசையில் ‘ஜீரக பிரியாணி’ பாடல் கேட்கும் ரகம். அருண்கிருஷ்ணா ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவில் புதிதாய் எதுவுமில்லை. முன்பின்னாய் அலையும் குழப்பமான கதையை இன்னமும் குழப்புகிறது பிரகாஷ் கருணாநிதியின் படத்தொகுப்பு.

என்னங்க சார் உங்க சட்டம் - சினிமா விமர்சனம்

முதல் பாதியில் வரும் காதல் கதையில் சில காட்சிகள் சிரிக்கவைத்தாலும், பெண்களைப் பற்றிய மோசமான பார்வையும் சாதிவெறி குறித்த சிறுபிள்ளைத்தனமான பதிவுகளும் எரிச்சல்.

முந்தைய கதையைவிட பெரிய அபத்தமும் ஆபத்தும் இரண்டாவது கதைதான். எல்லாத்தரப்பு நியாயங்களையும் பேசுவதுபோன்ற பாவனையில் ஆதிக்கத்துக்கு ஆதரவான கருத்தையே பதிவுசெய்கிறது. அனைத்துச்சாதியினர் அர்ச்சகர் நியமனம் அறநிலையத்துறை அதிகாரிகள்மூலம் நடப்பது என்கிற அடிப்படையே தெரியாமல் தலைமை அர்ச்சகர் தேர்ந்தெடுப்பது போன்ற காட்சிகளில் விஷத்தை விதைத்திருக்கிறார்.

கல்வி மறுக்கப்படுவதற்கும் கல்வி கற்காமல் இருப்பதற்குமான அடிப்படை வித்தியாசம் பற்றிய புரிதலே இல்லாமல் இடஒதுக்கீடு குறித்து இயக்குநர் பாடமெடுப்பதுதான் ஆபத்தான போக்கு. ஆதிக்கச்சாதியில் ஒரு பிரிவினர் ஒடுக்கப்பட்டால் அவர்கள் போராட வேண்டியது தங்களை ஒடுக்குபவர்களையும் அதற்குக் காரணமான சாதியமைப்பையும் என்பதை விட்டுவிட்டு, இட ஒதுக்கீட்டை வறுமை ஒழிப்புத் திட்டமாகக் கருதி அதன்மீது பழிபோடுவது சிறுபிள்ளைத்தனம். ‘சாதிய படிநிலையில் மேலடுக்கில் இருப்பவர்கள் கருணையே உருவானவர்கள். ஒடுக்கப்படுபவர்கள்தான் பிரச்னை’ என்கிற தொனியில் கதை நகர்வதுதான் பெரிய சிக்கல்.

என்னங்க சார் உங்க சட்டம் - சினிமா விமர்சனம்

தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கும் வெளி அனைவருக்கும் இருக்கிறதுதான். ஆனால் வரலாற்றுப்புரிதல் இல்லாத வாதங்களை வரலாறே புறக்கணிக்கும் என்பதை இயக்குநர் புரிந்துகொள்ள வேண்டும்.