Published:Updated:

``இலக்கை எட்டும் நிலையில் நாங்கள் வேண்டுவது அன்பும் ஆதரவுமே..!" - உருகிய தயாரிப்பாளர் #ENPT

படத்துக்கு ஏற்கெனவே நீதிமன்றம் விதித்திருந்த தடையும் தொடர்கிறது. இந்த வழக்கின் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் எனச் சொல்லப்பட்டது. இதையடுத்து படத்தின் மீதான பிரச்னைகள் இன்னும் முடியவில்லையென தற்போது தெரிகிறது.

enai nokki paayum thotta
enai nokki paayum thotta

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடித்திருக்கும் படம், `எனை நோக்கி பாயும் தோட்டா'. இப்படத்தை நோக்கி அடுத்தடுத்து பிரச்னைகள் பாய்ந்துகொண்டே இருக்கின்றன. படத்தின் ஃபைனான்ஸியர்கள் எல்லோரும் இணைந்து ஒரு முடிவுக்கு வந்து எந்தத் தடையுமின்றி வெளியிட ஓர் ஒப்பந்தம் செய்ததாக ஒரு வாரத்துக்கு முன்பு சொல்லப்பட்டது. அதன்படி, இனி வெளியாகும் எல்லா கெளதம் மேனன் படங்களிலும் வரும் லாபத்தை வைத்து அவர் வாங்கியுள்ள கடனை அடைக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

Escape Artist
Escape Artist
Enai nokki paayum thotta

தற்போது, படத்தின் விநியோகஸ்தரான ஆர்க்கா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதில் வரும் வசூலை எப்படிப் பகிரப்போகிறார்கள் என்பது குறித்த எந்தத் தெளிவும் தயாரிப்பாளர்களால் தரப்படவில்லை என்பதால், தடையில்லாச் சான்றிதழ் (NOC) கொடுக்கவில்லை என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் சொல்கின்றன. இதனால், படத்துக்கு ஏற்கெனவே நீதிமன்றம் விதித்திருந்த தடையும் தொடர்கிறது. இந்த வழக்கின் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் எனச் சொல்லப்பட்டது. இதையடுத்து படத்தின் மீதான பிரச்னைகள் இன்னும் முடியவில்லையென தற்போது தெரிகிறது.

படத்தின் தயாரிப்பாளரான எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், அவரது தரப்பிலிருந்து ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகவிருந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை எங்களால் வெளியிட முடியவில்லை. பெரும் முயற்சியோடு இப்படத்தை வெளியிட முயற்சி செய்த எங்களுக்கு இது பெரிய ஏமாற்றம் என்பதை உணர்ந்து வருகிறோம். மிக, விரைவில், அடுத்து சில தினங்களில் படத்தை வெளியிட மேலும் உழைத்துக்கொண்டிருக்கிறோம். இந்தத் தாமதத்தினால் உங்களுக்கு ஏற்படும் ஏமாற்றமும், விரக்தியும் அதன் காரணமாக நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளையும் நாங்கள் அறிவோம். எல்லாக் கருத்துகளையும் கணக்கில்கொண்டே எங்களது பயணமும் அமைந்துள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால், இலக்கை எட்டும் நிலையில் நாங்கள் வேண்டுவது உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே" என்று வருத்தத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது படக்குழு.

Enai Noki Paayum
Enai Noki Paayum

கடைசியாக, ``இந்த நிலையில் நீங்கள் பொறுமையுடன் எங்களையும் இந்தத் திரைப்படத்தையும் ஆதரிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் படத்தை நீங்கள் திரையரங்கில் பார்க்கும்போது உங்களது இத்தனை காத்திருப்பையும் இப்படைப்பு நியாயம் செய்யும் என உளமார நம்புகிறோம்'' என்றும் குறிப்பிட்டிருந்தது. மொத்தத்தில் சொன்ன தேதியான 6-ம் தேதியில் படம் வெளிவரவில்லையென்று தற்போது தெரிகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி மேலும் தள்ளிப்போவதாக தெரிகிறது. பொதுவாக, வாராவாரம் பல்வேறு படங்கள் ரிலீஸ் ஆகிக்கொண்டே இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதியை நிர்ணயம் செய்வதுதான் படக்குழுவினருக்கு இருக்கும் உச்சபட்ச சவாலாக உள்ளது. இப்படத்திற்குச் சட்டரீதியாக ஏற்பட்டிருக்கும் பிரச்னை விரைவில் தீர்ந்து படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.