சினிமா
Published:Updated:

எதற்கும் துணிந்தவன் - சினிமா விமர்சனம்

சூர்யா - பிரியங்கா மோகன்
பிரீமியம் ஸ்டோரி
News
சூர்யா - பிரியங்கா மோகன்

வினய்யின் வில்லத்தனம் ஓகேதான். ஆனால் வித்தியாசமாகக் காட்டுகிறேன் என வலிந்து திணிக்கப்பட்டுள்ள அவரின் கதாபாத்திர வரைவு ஒட்டவில்லை.

பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள், அவர்களுக்கான நீதிக்காகப் போராடும் ஹீரோ... இதுவே ‘எதற்கும் துணிந்தவன்.’

ஊரின் முக்கியப் புள்ளி சத்யராஜ். வழக்கறிஞர் மகன் சூர்யா. இவர்களுக்கு ஆகாத எதிர்த்தரப்பான வினய்யும் அவரின் நண்பர்களும் அந்த வட்டாரப் பெண்களுக்குத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் தருவது தெரியவர, வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்குகிறார் சூர்யா. இதனால் தனிப்பட்ட முறையில் பாதிப்புக்குள்ளாகும் சூர்யா, அதிலிருந்து மீண்டு வில்லன்களை வதம் செய்தாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

மாஸும் க்ளாஸும் சேர்ந்த கலவையாக சூர்யா. ஒரு இடைவெளிக்குப் பின் கமர்ஷியல் ரூட்டுக்குத் திரும்பியிருப்பவர், பார்ப்பவர்களின் பல்ஸ் புரிந்து சரியாக ஸ்கோர் செய்திருக்கிறார். என்ன ஜானர் படமாக இருந்தாலும் அதில் மற்ற முன்னணி ஹீரோக்கள் பேசியிராத சமூகக் கருத்துகளைப் பேச முன்வருவது வரவேற்புக்குரியது. பாராட்டுகள் சூர்யா!

எதற்கும் துணிந்தவன் - சினிமா விமர்சனம்

பிரியங்கா மோகன். முன்பாதியில் நாம் ஏற்கெனவே பலமுறை பார்த்திருக்கும் வெகுளிப் பெண் கதாபாத்திரம்தான் என்றாலும், இரண்டாம் பாதியின் முக்கியக் காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிக்காட்டுகிறார். சத்யராஜ், சரண்யா, இளவரசு, தேவதர்ஷினி, எம்.எஸ் பாஸ்கர் - முந்தைய படங்களில் என்ன செய்தார்களோ அதை அப்படியே செய்திருக்கிறார்கள் இப்படத்திலும். வினய்யின் வில்லத்தனம் ஓகேதான். ஆனால் வித்தியாசமாகக் காட்டுகிறேன் என வலிந்து திணிக்கப்பட்டுள்ள அவரின் கதாபாத்திர வரைவு ஒட்டவில்லை.

ரத்னவேலுவின் ஒளிப்பதிவு வறண்ட நிலப்பரப்பையும் அழகாய்க் காட்டுகிறது. இமான் இசையில் ‘சும்மா சுர்ர்ருனு’ தியேட்டர் மீட்டரில் அதிரடிக்கிறது.

பாலியல் குற்றங்கள் குறித்த படங்களில் பெண்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் தமிழ் சினிமா ‘பண்பாட்டில்’ ஒரு மாறுபட்ட, மிக அவசியமான உரையாடலைத் தொடக்கி வைத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். வெகுஜன சினிமாக்களில் நிர்வாணம், பெண்ணுடல்மீதான ஆதிக்கம் குறித்த காட்சியமைப்புகளும், ‘எடுத்தவனும் பார்த்தவனும் நல்லாருக்க, பாதிக்கப்பட்டவங்க ஏன் தண்டனை அனுபவிக்கணும்’ போன்ற வசனங்களும் காலத்தின் தேவை.

எதற்கும் துணிந்தவன் - சினிமா விமர்சனம்

இரண்டாம்பாதியின் பெரும்பகுதி க்ளைமாக்ஸே எனச் சொல்லுமளவிற்கு அந்தக் காட்சிகள் நீளம். முடிவாய் முன்வைக்கப்படும் தீர்ப்பும் விவாதத்திற்குரியதே.

வழக்கமான சினிமா வரையறைக்குள் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்வதால் கவனிக்க வைக்கிறது ‘எதற்கும் துணிந்தவன்.’