Published:Updated:

இளையராஜா 75 - “ஆர்மோனியம் வாசித்து அடிவாங்கினேன்!”

Exclusive Interview Music Director Ilaiyaraaja
பிரீமியம் ஸ்டோரி
Exclusive Interview Music Director Ilaiyaraaja

ராஜாவின் இசை ஆர்வம், இசை அறிவாக மாறிய அந்தத் தருணம்...

இளையராஜா 75 - “ஆர்மோனியம் வாசித்து அடிவாங்கினேன்!”

ராஜாவின் இசை ஆர்வம், இசை அறிவாக மாறிய அந்தத் தருணம்...

Published:Updated:
Exclusive Interview Music Director Ilaiyaraaja
பிரீமியம் ஸ்டோரி
Exclusive Interview Music Director Ilaiyaraaja

பெத்த பிள்ளைக்கு ‘ராசய்யா’ என்று பெயர் வைத்த அந்த பண்ணைபுரத்துப் பெற்றோர், ‘இசையய்யா’ என்றே பெயர் வைத்திருக்கலாம். இந்த இசைக்குழந்தைக்கு 75 வயது என்றால் நம்புவது கடினம்தான். இந்த வயதிலும் தசை முழுக்க இசையாய் நடமாடுகிறார் இசைஞானி. கொடும் வெயில் சூழ்ந்த வெப்ப நேரத்தில் அந்த ராகப் பனிமலைக்குள் செல்லும் போது ஆர்மோனியத்தால் அபிஷேகம் செய்கிறது ராஜாவின் குரல்.

ஜூன் 2, அவர் முக்கால் நூற்றாண்டை எட்டிப்பிடிக்கிறார்.‘‘75 என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது” என்றால், ‘‘எனக்கு இல்லை’’ என்கிறார். ‘‘ஆமாம்! சர்ட்டிபிகேட் பார்த்து வாழ்பவர்களுக்குத்தானே வயது?” என்றோம். சின்னச்சிரிப்பை சிந்தவிட்ட அவர் சொல்கிறார்: ‘‘அதுவாக ஆகிவிட்டால் வயது இல்லை”. ஆமாம்! இசைக்கு ஏது வயது? இளையராஜாவுக்கு ஏது வயது? எங்களைப் பார்க்கிறார். ஆனால் பண்ணைபுரத்தை நோக்கிப் பயணம் செய்கின்றன அவரது கண்களும் மனதும்.

Exclusive Interview Music Director Ilaiyaraaja
Exclusive Interview Music Director Ilaiyaraaja

‘‘இளையராஜாவை உலகம் அறியும். ஆனால் ராசய்யாவின் உலகம் எப்படி இருந்தது?”

‘‘இன்று  இளையராஜாவின் பாட்டை உலகம் பாடிக்கொண்டிருக்கிறது. அன்று, உலகத்தின் பாட்டைப் பாடிக்கொண்டிருந்தான் ராசய்யா. பண்ணைபுரத்தில் சுண்ணாம்புக் காரையால் ஆன அந்த வீடு மேற்குத்தொடர்ச்சி மலையைத் தொட்டுக் கொண்டிருந்தது. மலையைத் தொட்டால் மனசுக்கு எப்படி இதமாய் இருக்கும் என்பது வாழ்ந்து பார்த்த மனசுக்குத்தான் தெரியும். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வடிவேல் கவுண்டர், குமரவேல் கவுண்டர் ஆகிய இருவருக்குமான தென்னந்தோப்பு இருந்தது. வீட்டுத் திண்ணையிலோ, அல்லது தெருவிலோ நான் படுத்திருக்கும்போது அந்தத் தோட்டத்தில் இருந்து மிதந்து வந்த குயில்களின் ஓசை, எனக்குள் இனம்புரியாத உணர்வை ஏற்படுத்தின. மல்லாக்கப்படுத்து வானில் மிதந்து செல்லும் மேகத்தைப் பார்த்துக்கொண்டு என் கண்கள் அசைய, காதுக்குள் குயில் தனது குரலைப் பாய்ச்சும்போது மனதில் ஓடிய எண்ணவோட்டங்கள்தான் ராசய்யாவை அந்த வயதில் ரசிக்கவும் வைத்தது; வாழவும் வைத்தது.

பாஸ்கர் நாலாம் வகுப்பு. நான் மூணாம் வகுப்பு. ரெண்டு பேரும் 'லைலா மஜ்னு' படத்துக்குப் போனோம். கயஸ் தனது சிலேட்டில் லைலா, லைலா என்று எழுதிவைத்து வகுப்பில் அடிவாங்குவான். மறுநாள் நானும் வகுப்பில் சிலேட்டில் லைலா, லைலா என்று எழுதி அடிவாங்கினேன். சி.ஆர்.சுப்பராமனின் இசையில் அமைந்த அந்தப் பாடல்கள் என்னைப் பரிபூரணமாக ஆக்கிரமித்தன. மாலையிலிருந்து காத்திருந்த கயஸ், வராத லைலாவுக்காக விடியும்வேளையில்  பூபாள ராகத்தில் பாடிய ‘வாராயோ...என்னை மறந்தனையோ’ என்ற பாடலும் மற்ற பாடல்களும் என்னை எனக்கே உணர்த்தின.

கோம்பையில் எட்டாம் வகுப்பு முடித்ததும், ஒன்பதாம் வகுப்புப் படிக்க தேவாரத்துக்குப் போக வேண்டும். அப்போது பள்ளிக் கட்டணம் கட்ட அம்மாவிடம் 25 ரூபாய் இல்லை. படிக்கணும், எப்படியாவது படிக்கணும் என்ற ஆசை மட்டும் எனக்கு இருந்தது. பணம் கட்டாமல் படிக்க முடியாது. பணத்துக்காக வேலை பார்க்கச் சென்றேன். அப்போது வைகை அணை கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. என் அத்தான் அங்கே என்னை வேலைக்குச் சேர்த்துவிட்டார். ஹோஸ் பைப் வைத்து, பூக்களுக்கும் புல்வெளிக்கும்  தண்ணீர் பாய்ச்ச வேண்டியது என்னுடைய வேலை.  அப்போதுதான் நானாக சினிமா பாடல்களைப் பாடுவேன். தண்ணீருடன் சேர்ந்து இசையும் பாய்ந்தது பூக்களுக்கும் புல்வெளிக்கும்.

அப்போது என் அண்ணன் பாவலர் வரதராஜன் மிக முக்கியமான கவிஞராக, பாடகராக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வளர்ந்து வந்து கொண்டிருந்தார். சினிமா பாடல்கள் பாடிக்கொண்டு இருந்த ராசய்யாவின் காதுகளில் சமூகப் பாடல்கள் நுழைய ஆரம்பித்தன!”

Exclusive Interview Music Director Ilaiyaraaja
Exclusive Interview Music Director Ilaiyaraaja

‘‘பாவலரோடு பயணப்பட்ட காலங்களில் மறக்க முடியாதது..?”

‘‘ஓர் இயக்கம் ஒரு கலைஞனை எப்படிக் கொண்டாடியது என்பதை நேரடியாகப் பார்த்தேன். அது பெருமையாக இருந்தது. அவர் என் அண்ணனாகவும் இருந்தது கூடுதல் பெருமையாக இருந்தது.

தேவிகுளம், பீர்மேடு தொகுதியில் தேர்தல். கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரோசம்மா புன்னூஸ். அவருக்காகப் பிரசாரம் செய்ய டாங்கே, ரணதிவே, அஜாய் கோஷ், ராஜேஸ்வரராவ், ஜீவா, பின்னாளில் மேற்குவங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு ஆகிய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர்கள் அனைவருமே வந்திருந்தார்கள். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களும் வந்திருந்தார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதிக்குப் பிரசாரம் செய்ய வரப் போகிறார்கள். இது தொடர்பாக நிர்வாகிகளிடம் அறிவிக்கப்பட்டபோது சிறு பையனாக நானும் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். ‘எங்களுக்கு பாவலர் வரதராசனை மட்டும் அனுப்புங்கள். நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம்’ என்று தோழர்கள் ஒட்டுமொத்தமாகச் சொன்னார்கள். அந்தத் தொகுதி முழுவதும் காங்கிரஸின் காளைமாடு சின்னத்துக்கு எதிராகவும் கம்யூனிஸ்ட் கட்சியின் கதிர் அரிவாள் சின்னத்துக்கு ஆதரவாகவும் பாடினார் பாவலர். தேயிலைத் தோட்டம் முழுக்கவே பாவலர் பாட்டு மிதந்தது. இறுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

50 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் கூடிய தேர்தல் வெற்றிவிழாக் கூட்டத்துக்கு, முதல் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவை அமைத்து கேரள முதல்வரான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் வந்திருந்தார். அவருக்குப் போட  மாலை கொண்டு வந்தார்கள்.

‘இவிட பாவலர் வரதராஜன் யாரானு?’ என்றார் அவர். கூட்டம் ஆரவாரிக்க, அண்ணன் முன்னே போனார். ‘இந்த வெற்றி பாவலர் வரதராசனின் வெற்றி’ என்று அறிவித்துப் பாவலருக்கு மாலை அணிவித்தார் இ.எம்.எஸ். இதுதான் ஒரு கலைஞனுக்கு ஒரு உண்மையான தலைவன், உண்மையான இயக்கம் தரும் மரியாதை. இந்தக் காட்சிதான் என்னையும் அண்ணனோடு சேர்ந்து அலையத் தூண்டியது.

திருச்சி திருவெறும்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு. பாவலருக்குக் காய்ச்சல். அதனால் அவர் போக இயலவில்லை. ஆனால் அவரை அழைத்துச் செல்ல கார் கொண்டு வந்து விட்டார்கள். என் அம்மாதான், ‘இந்த உடல்நிலையில் போகிறாயே, தம்பியையும் அழைச்சிட்டுப் போயேன்யா! அவனும் ரெண்டு பாட்டுப் பாடட்டும்’ என்றார். சிறுவயதில் என் குரல் பெண் குரலைப்போல இருக்கும். அந்த மாநாட்டில் தான் முதன் முதலாக ‘மண்ணுக்கு மரம் பாரமா' மெட்டில் 'செங்கொடி பறந்தாடுது' பாடலைப் பாடினேன். ஆனாலும் நான் முழுநேரப் பாடகனாக வேண்டாம் என்று அண்ணன் நினைத்தார்போலும்.

வீட்டில் அவர் வைத்திருந்த ஆர்மோனியத்தை எடுத்து, அவர் இல்லாத நேரம் நான் வாசிக்க ஆரம்பித்தேன். அது அவருக்குத் தெரிந்துவிட்டது. பூஜை அறையில் அப்பா வைத்திருந்த சாமி பிரம்பை வைத்து என் கையில் அடித்தார்.ஒருநாள் காலையில், ‘என்னய்யா நேத்து ஆர்மோனியம் வாசிக்கிற மாதிரிக் கனவு கண்டியா?’ என்று என் அம்மா கேட்டார். ‘ஏன்மா?’ என்றேன்.

‘ராத்திரி தூக்கத்தில் ஆர்மோனியம் வாசிக்கிற மாதிரி நெஞ்சில் கைவைத்து முன்னும் பின்னும் சைகை பண்ணினியேப்பா!’ என்றார்கள். அந்தளவுக்கு எனக்கு ஆர்மோனியப் பித்து பிடித்திருந்தது. அண்ணனின் கச்சேரியில் அப்போது சங்கரதாஸ் என்பவர்தான் ஆர்மோனியம் வாசிப்பார். எனது அந்தக் காலத்தில் முதல் லட்சியமே, ‘சங்கரதாஸ் மாதிரி ஆர்மோனியம் வாசிக்கணும்’ என்பதுதான்.

Exclusive Interview Music Director Ilaiyaraaja
Exclusive Interview Music Director Ilaiyaraaja

ஒரு தடவை கம்பத்தில் கச்சேரி. அண்ணனுக்கும் சங்கரதாஸூக்கும் ஏதோ மனவருத்தம் ஏற்பட்டது. புதிதாக ஒருவரை அழைத்து வந்து, அவருக்கு அனைத்தையும் சொல்லி அழைத்துச் செல்வது சிரமம் என்று அண்ணன் யோசனையில் இருந்தார். அப்போதுதான் அம்மா, ‘தம்பியை அழைச்சிட்டுப் போயேன். அவனும்தான் நல்லா வாசிக்கிறானே?’ என்றார். முதல் கச்சேரி கம்பத்தில். அரை டிராயர் போட்டு சின்னப் பையனாக மேடையில் உட்கார்ந்து வாசித்தேன்.

சின்னப்பையன் வாசிக்கிறானே என்று மக்கள் உற்சாகப்படுத்தினார்கள். அதைவிட ஆச்சர்யம் என் அண்ணனுக்குத்தான். இப்படியெல்லாம் நான் வாசிப்பேன் என்றே அவருக்குத் தெரியாதே! ‘தப்பும் தவறுமாக வாசிப்பதற்கே இவ்வளவு கைதட்டல்கள் கிடைத்தனவே, சரியாக வாசித்தால் எவ்வளவு கைதட்டல்கள் வாங்கலாம்’ என்று தோன்ற, தினமும் ஆர்மோனியம் வாசித்துப் பயிற்சி செய்தேன்.

அன்று முதல் பாவலர் அண்ணனோடு பயணம் சென்றேன். 365 நாளில் 250 நாட்கள் கச்சேரி. போகாத ஊர் இல்லை; பாடாத தெரு இல்லை. கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தான் தங்குவோம். அந்தக் காலக்கட்டத்தில் தான் என் மனமும் அறிவும் ‘ஓப்பன்’ ஆச்சு. ஜெயகாந்தனைப் பார்த்தேன். டார்வின் தியரி, வால்காவில் இருந்து  கங்கை வரை என்று தொடரும் உரையாடல்களையும் விவாதங்களையும் நாங்கள் சாட்சியாக இருந்து பார்த்துக்கொண்டிருந்தோம்”

‘‘இசை ஆர்வம் என்பது இசை அறிவாக எப்போது மாறியது?”

‘‘எங்கு சென்றாலும் மேடையில் நான் வாசித்த இசைக்குக் கூட்டம் கைதட்டியது. வரவேற்பு கிடைத்தது. ஆனால் இது என்னுடைய இசையா, இல்லையே? யாரோ போட்ட மியூஸிக். அதை நான் வாசிக்க, மக்கள் கைதட்டுகிறார்கள்.

நாமே சொந்தமா மியூஸிக் போட்டா என்ன என்ற யோசனை அப்போதுதான் வந்தது. ட்யூன் போட்டுப் பார்த்தேன். கேட்கவே எனக்கு கண்றாவியாக இருந்தது... (கண்களை மூடிக்கொண்டு சிரிக்கிறார் ராஜா) ஒரு நோட்டை வைத்துக் கொண்டு அமர் கவிதை எழுதிக்கொண்டே இருப்பான். அதற்கு ட்யூன் போடுவேன். பாரதியின் பாடல்களுக்கும் இசையமைக்க முயற்சிப்பேன். ஆனால் எதுவுமே சரிவராது.

பாரதியின் ‘காற்று வெளியிடை கண்ணம்மா’ பாடலுக்கு ஜி.ராமநாதன் போட்ட ட்யூன் என்னை அசத்தியது. மிகப் பிரமாதமான பாடல் அது. ஆனால் ‘சின்னஞ்சிறு கிளியே' பாடலைப் போல, எளிதில் இசையமைக்க முடியாத பாடல் ‘காற்று வெளியிடைக் கண்ணம்மா’. அப்படிப்பட்ட பாடலுக்கு அற்புதமாக மெட்டமைத்திருந்தார் ஜி.ராமநாதன். அதுபோன்று இசையமைக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். ஆனால் எதுவுமே எனக்குத் திருப்தியாக வரவில்லை!” 

- ப.திருமாவேலன், ரீ.சிவக்குமார்

படங்கள்: கே.ராஜசேகரன்

(06.06.2018 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism