சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

"தமிழ் மொழியிலேயே கிக் இருக்கு!"

வெங்கடேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
வெங்கடேஷ்

டோலிவுட்ல எல்லோரும் சால ஹேப்பி

மிழின் சூப்பர்ஹிட் படங்களுக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா மசாலா தூவி தெலுங்கு சினிமாவாக்கி மாஸ் ஹிட் அடிப்பது ‘விக்ட்ரி’ வெங்கடேஷின் வழக்கம். ‘சின்னதம்பி’யில் ரீமேக் பயணத்தைத் தொடங்கியவர் `அசுரன்’ வரை வந்திருக்கிறார். ‘நாரப்பா’வாகக் கோவில்பட்டியில் ஷூட்டிங்கில் இருந்தவரைச் சந்தித்தோம்.

“நான் எந்தப் படம் பார்த்தாலும் சினிமா ரசிகனாதான் பார்ப்பேன். ‘அசுரன்’ செம கதை, அருமையான எமோஷன், நேர்த்தியான பர்ஃபாமன்ஸ். இந்தக் கதையை ஸ்கிரீன்ல விஷுவலா பார்க்கும்போது ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சு. ஆனா, பிசினஸ் பத்தியும் யோசிக்கணும்ல. தயாரிப்பாளர் குடும்பத்துல இருந்து வந்ததால சினிமா பிசினஸ் பத்தியும் கொஞ்சம் சென்ஸ் இருக்கு. அதனால, அதை மனசுல வெச்சு இந்த விஷயங்களெல்லாம் இருக்கா, என் கரியர்ல இந்த மாதிரி படம் பண்ணியிருக்கேனா, ஆடியன்ஸுக்குப் புதுசா இருக்குமான்னு செக் பண்ணினேன். இருந்தது. இப்போ அதை நடைமுறைப்படுத்த உழைச்சுக்கிட்டு இருக்கேன்” - செம கேஷுவலாக ஆரம்பிக்கிறார் வெங்கடேஷ்.

‘` ‘அசுரன்’ல தனுஷ் நடிப்பு எப்படி இருந்தது?’’

“சிவசாமி தன் பையனோடு நடந்து வர்ற முதல் சீன்லயே தனுஷ் எல்லோரையும் இம்ப்ரஸ் பண்ணிட்டார். அதுதான் ‘நாரப்பா’வுல எனக்கான சேலஞ்ச். நிறைய பேர் ‘அசுரன்’ ஆர்ட் ஃபிலிம்னு நினைக்கிறாங்க. அது பக்கா கமர்ஷியல் படம். அதுல இருந்ததுக்கு மேல என்ன மாஸ், எமோஷன், ரிவென்ஜ் இருக்க முடியும்? நான் ஒரு த்ரில்லோடவே ‘நாரப்பா’வுல வேலை செஞ்சுட்டு இருக்கேன். ரொம்ப நாள் கழிச்சு, ஒவ்வொரு ஷாட்டையும் ரசிச்சு ரசிச்சுப் பண்றேன். ஆந்திராவில் அனந்தபூர் பகுதியில நடக்குற மாதிரி கதை. அதனால அந்த ஊர்ல வீடெல்லாம் எப்படி இருக்குமோ அதுக்குத் தகுந்த மாதிரி கோவில்பட்டில செட் போட்டிருக் கோம். என் ரசிகர்கள் இதுவரை இந்த மாதிரி ஒரு கேரக்டர்ல என்னைப் பார்த்ததில்லை. அதனாலதான் ‘நாரப்பா’வுடைய லுக் வந்தவுடன் அவ்ளோ ரெஸ்பான்ஸ். இந்த அளவு ரெஸ்பான்ஸ் என் கரியர்ல வேறெந்தப் படத்துடைய லுக்குக்கும் வந்ததில்லை. ‘என்னடா இதுல வெங்கி வித்தியாசமா இருக்கானே’ன்னு ஷாக்காகிட்டாங்க. டோலிவுட்ல எல்லோரும் சால ஹேப்பி. ஏற்கெனவே என்னை வைத்து ‘சீத்தம்மா வாக்கெட்லோ சிரிமல்ல செட்டு’னு ஒரு சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த ஶ்ரீகாந்த் அடாலாதான் இந்தப் படத்தின் இயக்குநர்.’’

வெங்கடேஷ்
வெங்கடேஷ்

‘` ‘அசுரன்’ அடிப்படையில் சாதிக்கு எதிரான படம். தெலுங்குல எப்படிப் பண்ணியிருக்கீங்க?’’

“ `நாரப்பா’வுல சாதியெல்லாம் பேசலை. பணம் இருக்கிறவன், பணம் இல்லாதவன்னுதான் இருக்கும். இதைப் பார்க்கும்போதே மக்களுக்குப் புரிஞ்சுடும். எந்தச் சமூகத்தையும் குறிப்பிட்டுக் காட்டலை. சாதிக்குள்ளேயே போகலை.”

25 படங்கள்
ரீமேக்தான்

‘`உங்க கரியர்ல கிட்டத்தட்ட 25 படங்கள் ரீமேக்தான். அதுல என்ன அப்படியொரு ஆர்வம்?’’

“ `சின்னதம்பி’, ‘சின்னக் கவுண்டர்’, ‘அண்ணாமலை’, ‘சூர்யவம்சம்’, ‘ஆனந்தம்’, ‘காக்க காக்க’, ‘ஜெமினி’, ‘இறுதிச்சுற்று’ன்னு இத்தனை தமிழ்ப் படங்களுடைய தெலுங்கு வெர்ஷன்லயும் நடிச்சிருக்கேன். எல்லாம் சூப்பர் ஹிட். யாருக்குக் கிடைக்கும் இதெல்லாம்? இந்தியிலும் நிறைய முன்னணி நடிகர்கள் நடிச்ச கேரக்டர்கள்ல நடிச்சிருக்கேன். பல நடிகர்கள் நடிச்ச அந்தக் கேரக்டர்களை உள்வாங்கி எனக்குள்ள கொண்டுவர்றது சவாலான காரியம். அந்தச் சவால் எனக்குப் பிடிச்சிருக்கு. சந்தோஷமா பண்றேன்.”

வெங்கடேஷ்
வெங்கடேஷ்

‘`இத்தனை ரீமேக் படங்கள்ல நடிச்சிருக்கீங்க. இருந்தாலும் இந்தக் கதையில நடிச்சிருக்கலாமேன்னு நீங்கள் மிஸ் பண்ணுன படங்கள் இருக்கா?’’

“ ‘நாயகன்’, ‘பாட்ஷா’, ‘பருத்திவீரன்’ இந்தப் படங்களைப் பார்க்கும்போது மிஸ் பண்ணிட்டோம்னு தோணுச்சு.’’

“மோகன்லால், கமல்ஹாசன் என மிகப்பெரிய நடிகர்கள் நடித்த ‘த்ரிஷ்யம்’ பட ரீ-மேக்கில் நடித்தபோது உங்களுக்கான சவால் என்னவாக இருந்தது?’’

“கமல் சாருடைய பெரிய ரசிகன் நான். நடிக்கும்போது எமோஷனல் சீன் நடிக்க வரலைனா அவர் நடிச்ச எமோஷன் சீனைப் பார்த்துட்டு அப்புறம்போய் நடிப்பேன். ‘மருதநாயகம்’ படத்துல முக்கியமான கேரக்டர்ல அவர் என்னை நடிக்கக் கூப்பிட்டதும் அவ்ளோ சந்தோஷப்பட்டேன். லுக் டெஸ்ட் எல்லாம் பண்ணினோம். ஆனா, படம் நடக்கலை. எப்போவாவது அவர்கூட முழுப்படம் நடிக்கணும்னு ரொம்ப ஆசை. சினிமாவில் ஒரே ஒரு மோகன்லால்தான். மோகன்லால் சாருடைய நிறைய படங்களைத் தெலுங்குல ரீமேக் பண்ணக் கேட்டாங்க. ‘என்னால முடியாது’ன்னு சொல்லிட்டேன். அவர் ஸ்டைல், பாடி லாங்குவேஜ் எல்லாமே தனித்துவமா இருக்கும். அவர் மேஜிக் வேற. அவர் நடிப்பு மேல மிகப்பெரிய மரியாதை எனக்கு இருக்கு.”

‘`இப்போதைய தமிழ் சினிமாவில் உங்களைக் கவர்ந்த நடிகர் யார்?’’

“ஒருத்தரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ‘அசுரன்’ ஒண்ணு போதும் தனுஷ் யார்னு புரிஞ்சிக்கலாம். ஷங்கர் சார் படங்கள்ல விக்ரம் நடிப்பு பிரமிக்கிற மாதிரி இருக்கும். விஜய் ரொம்ப மாஸா, ஸ்மூத்தா ஸ்கோர் பண்றார். சூர்யா அந்தக் கேரக்டருக்குள்ள தன்னைப் புகுத்திக்க எவ்ளோ தீவிரம் காட்டுறார்னு படம் பார்க்கும் போதே தெரியும். அஜித் செம கெத்தா இருக்கார். விஜய் சேதுபதி வேற ரூட்ல போயிட்டிருக்கார். யாரும் ஒரே மாதிரி பண்றதில்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கு. விஜய், அஜித்துக்கு இந்த அளவுக்குப் பெரிய பிசினஸ் இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்த பிசினஸ் எல்லாம் சாதாரணமா வராது. இன்னொன்னு, தமிழ்மொழியிலேயே தனி ‘கிக்’ இருக்குப்பா.”

திருவண்ணாமலையில்...
என் தேடலுக்கான தெளிவு கிடைச்சது
வெங்கடேஷ்
வெங்கடேஷ்

‘`உங்களோட 75-வது படத்துக்கான வேலைகள் ஆரம்பிச்சிட்டதா சொல்றாங்க... எப்படி இருக்குது இந்தப் பயணம்?’’

“எதையுமே பிளான் பண்ணலை. அமெரிக்காவுல படிச்சு முடிச்சுட்டு வந்தவுடன், ஏதாவது பிசினஸ் பண்ணலாம்னு இருந்தேன். அந்த நேரத்துல அப்பா தெலுங்குல பெரிய பெரிய நட்சத்திரங்களை வெச்சுப் படம் தயாரிச்சிட்டு இருந்தார். திடீர்னு ஒரு நாள் அவரே முடிவு பண்ணி ராகவேந்திரா சாரைக் கூப்பிட்டு ‘என் பையனை வெச்சு ஒரு படம் பண்ணிடலாம்’னு சொல்லிட்டார். எனக்கு ரொம்ப பயம். அமெரிக்காவுல இருந்து வந்ததால தெலுங்குகூட அவ்ளோ சரளமா வராது. ஆனா, முதல் படமே (கலியுக பன்டவுலு) சூப்பர் ஹிட். அப்புறம், நாலஞ்சு படம் தொடர்ந்து ஃப்ளாப். நிறைய முறை ‘சினிமா வேண்டாம், ஃபாரின் போயிடலாம்’னு யோசனை வந்திருக்கு. ஒரு கட்டத்துல, வேலை செய்யும்போது எனக்கே தெரியாமல் அதிகமா உழைக்க ஆரம்பிச்சுட்டேன். அந்த எனர்ஜி எங்கிருந்து வந்ததுன்னு தெரியலை. ‘என்னடா இது இவ்ளோ சின்சியரா இருக்கேன், இது வெங்கி இல்லையே!’ன்னு எனக்கே தோணும். கடவுள் கொடுக்கிற அந்த எனர்ஜியை நான் மதிக்கிறேன். ஒருகட்டத்துல அந்த எனர்ஜியைத் தேட ஆரம்பிச்சு அந்த குரு, இந்த குருன்னு நிறைய இடங்கள் சுத்தி இமயமலைப் பக்கமே போயிட்டு வந்தேன். கடைசியா திருவண்ணாமலையில் என் தேடலுக்கான தெளிவு கிடைச்சது.”

‘`ஷூட்டிங் இல்லாத சமயத்துல உங்கள் பொழுதுபோக்கு என்ன?’’

“ஆன்மிகத்துல பெரிய ஆர்வம். ஜீவ சமாதி தொடர்பான புத்தகங்கள் படிக்கிறது, அவங்களுடைய சமாதிகளுக்குப் போறதுன்னு நிறைய ட்ராவல் பண்ணுவேன். கோயில்களை விட சமாதிகளுக்குத்தான் அதிகம் போயிருக்கேன். என் வாழ்க்கையே குடும்பம், சினிமா, ஆன்மிகம் அவ்ளோதான்.’’

‘`ரஜினி, கமல், சிரஞ்சீவி, பவன் கல்யாண் மாதிரி நடிகர்கள் அரசியலுக்கு வர்றதை எப்படிப் பார்க்குறீங்க?’’

“அது அவங்களுடைய விருப்பம், பயணம். அது அவங்க வாழ்க்கை. என்னைப் பொறுத்தவரை அங்க ஒண்ணுமேயில்லை. தூங்கும்போது இருக்கிற மாயை அது. இதுல குழப்பிக்க எதுவும் கிடையாது. வீட்ல ஒரு ரோல், ஆபீஸ்ல ஒரு ரோல், அப்பாவா ஒரு ரோல், மனைவிகிட்ட கணவனா ஒரு ரோல்னு ஒவ்வொருத்தரும் வாழ்க்கையில பல ரோல்கள் பண்ணிக்கிட்டிருக்கோம். அப்போ எல்லோரும் நடிகர்கள்தான். அந்த ரோல்களை எவ்வளவு சரியா செய்றோம்ங்கிறதுதான் முக்கியம். அந்த மாதிரி அரசியல்வாதிங்கிறதும் ஒரு ரோல் அவ்ளோதான்.”

‘`உங்கள் அண்ணன் மகன் ராணாவின் வளர்ச்சியை எப்படிப் பார்க்குறீங்க?’’

“தனக்குன்னு வித்தியாசமான ரூட் எடுத்திருக்கான். ‘காடன்’ பார்க்கும்போது பிரமிப்பா இருக்கு. பிரபு சாலமன் அவனுக்கு அற்புதமான கேரக்டர் கொடுத்திருக்கார். சின்ன வயசுலயே ‘பாகுபலி’, ‘காஸி’, ‘காடன்’னு டாப் கியர்ல போறான். எல்லோர்கூடவும் ரொம்ப ஃபிரண்ட்லி. அஜித் கூப்பிட்டார், ரன்பீர் கூப்பிட்டார்னு யார் கூப்பிட்டாலும் ஃபிரண்ட்லியா போய் நடிச்சுட்டு வருவான். அவன் இன்னும் நல்லா வரணும்.”