பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“ஸ்பீல்பெர்க்கால்கூட எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது!”

 ஜீவா.
பிரீமியம் ஸ்டோரி
News
ஜீவா.

“செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நடந்தே ரெண்டு வருஷமாகிடுச்சு. இப்போ மறுபடியும் ஆரம்பிக்கப்போறதா சொல்றாங்க.

இந்த ஆண்டை உற்சாகத்தோடு தொடங்கியிருக்கும் ஜீவாவுக்கு‘சீறு’, ‘ஜிப்ஸி’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘83’ என அடுத்தடுத்து படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. தமிழ்ப் படங்கள் முதல் பாலிவுட் படமான ‘83’ அனுபவம் வரை பலவற்றை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் ஜீவா.

ரத்னசிவா இயக்கத்துல ‘சீறு’ படத்துல நடிச்சது பற்றி...

“அந்தக் கதையை என்கிட்ட அவர் சொன்னவுடனேயே ரொம்பக் கேள்வியெல்லாம் கேட்காம ஓகே சொல்லிட்டேன். ஆனா, யார் தயாரிப்பாளர்னு முடிவாகலை. கதை சொன்ன அன்னிக்கு ஈவினிங் என் பையனுடைய பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிக்குப் போக வேண்டியிருந்தது. அது ஐசரி கணேஷ் சார் நடத்துற ஸ்கூல்.

 ஜீவா.
ஜீவா.

அந்த நிகழ்ச்சிக்குப் போனப்போ அவர் என்னைப் பார்த்து நலம் விசாரிச்சுட்டு, ‘நல்ல கதை ஏதாவது இருந்தா சொல்லுங்க. நாம பண்ணலாம்’னு சொன்னார். ‘இன்னிக்குதான் ரத்னசிவா ஒரு கதை சொல்லியிருக்கார். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது’னு சொன்னேன். ‘சூப்பர். அவரை நம்ம ஆபீஸுக்கு வரச் சொல்லுங்க’னு சொன்னார். அப்புறம் ரத்னசிவாவும் அவரை மீட் பண்ணி, கதை சொல்லி ஓகே பண்ணிட்டார். அப்படி ஆரம்பிச்ச படம்தான் ‘சீறு.’ என் பையன் ஸ்கூல் நிகழ்ச்சிக்கு போய் தயாரிப்பாளரைப் பிடிச்சுட்டு வந்துட்டேன்.”

‘83’ படம் பற்றி கேட்கவே பிரமிப்பா இருக்கு. உங்களுக்கு நடிக்கிறப்போ எப்படி இருந்தது.

“இந்தியாவே எதிர்பார்த்துக்கிட்டிருக்கிற படம் அது. சின்ன தப்பு பண்ணினாக்கூட பெரிய தப்பாத் தெரியும். எல்லாரும் எப்படி அந்தந்த பிளேயர்ஸுடைய கேரக்டர்ல நடிக்கப்போறோம்னு எப்பவும் பயமா இருக்கும். எனக்கு பர்சனலா கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும்கிறதால நான் ஆழமா உள்ளே போயிட்டேன். ரன்வீர் மட்டுமல்ல... எல்லாருமே செம ஜாலியான நபர்கள். ‘83’ நாள்கள் என் வாழ்க்கையில ரொம்பவே ஸ்பெஷல்.”

தன்னுடைய கேரக்டர்ல நடிக்கிறதுக்காக உங்களுக்கு ஸ்ரீகாந்த் ஏதாவது டிப்ஸ் கொடுத்தாரா?

“இந்தப் படத்துக்கான ஆடிஷன் போயிட்டு திரும்பி வரும்போது மும்பை ஏர்போர்ட்ல எல்.சிவராமகிருஷ்ணன் சாரைப் பார்த்தேன். ‘என்ன ஜீவா இந்தப் பக்கம்?’னு கேட்டார். நான் விஷயத்தைச் சொன்னேன். உடனே அவர் ஸ்ரீகாந்த் சாருக்கு போன் பண்ணி, ‘உன் கேரக்டர்ல நம்ம ஜீவாதான்பா நடிக்கிறான்’னு சொன்னதும், அவர் ‘யார் ஜீவா?’னு கேட்டுட்டார். அப்புறம் நான் போனை வாங்கிப் பேசினதும் கண்டுபிடிச்சுட்டார்.

 ஜீவா.
ஜீவா.

‘நல்லா பண்ணுப்பா. சென்னை வந்ததும் வீட்டுக்கு வா, சூடா காபி குடிச்சுக்கிட்டே பேசலாம்’னு அவர் ஸ்டைல்ல வேகமாகச் சொன்னார். அவர் வீட்டுக்குப் போய் அவரைப் பார்த்து பேசினப்போ நிறைய விஷயங்களை ஷேர் பண்ணினார். நானும் அவருடைய மேனரிஸத்தை கவனிச்சுக்கிட்டேன். அவர் நான் விளையாடுறதைப் பார்க்கலை. ஆனா, கபில்தேவ் சார் என் ஸ்ட்ரோக்ஸ் பார்த்துட்டுப் பாராட்டினார். அவ்ளோ பெரிய கிரிக்கெட் லெஜெண்ட் பாராட்டினது எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ஸ்பாட்டுக்கு சுனில் கவாஸ்கர் சார் வந்திருந்தபோது, ‘யாரு அந்தப் பையன் ஸ்ரீகாந்த் மாதிரியே இருக்கான்?’னு கேட்டார். அப்புறம் என்னை அறிமுகப்படுத்திவெச்சாங்க.”

கபில்தேவ், கவாஸ்கர், ஸ்ரீகாந்த்னு ஜாம்பவான்கள்கிட்ட பயிற்சி எடுத்துட்டு வந்திருக்கீங்க. சிசிஎல்ல உங்ககிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கலாம்?

“செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நடந்தே ரெண்டு வருஷமாகிடுச்சு. இப்போ மறுபடியும் ஆரம்பிக்கப்போறதா சொல்றாங்க. அப்படி இருந்தா நான்தான் கேப்டன். நிச்சயம் கப் நம்ம சென்னை ரைனோஸ் டீமுக்குத்தான். அந்த மாதிரியான லெஜண்ட்ஸ்கிட்ட ப்ராக்டீஸ் பண்ணிட்டு கப் ஜெயிக்கலைனா எப்படி?”

 ஜீவா.
ஜீவா.

சினிமாவுல இருக்கும் உங்க கிரிக்கெட் நண்பர்கள் என்ன சொன்னாங்க?

“இப்போ வரை ஒருத்தன் போன் பண்ணலை. `கார்ப்பரேஷன் கிரவுண்டுல விளையாடிட்டு இருந்தவன் லார்ட்ஸ் கிரவுண்டுல விளையாடுறான்’னு நிச்சயமா பொறாமைப் பட்டிருப்பாங்க. அவனுங்களுக் கெல்லாம் சிசிஎல் கிரவுண்டுல இருக்கு...”

பாலிவுட் சினிமா எப்படி இருக்கு?

“நமக்கும் பாலிவுட்டுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. அவங்க ரொம்ப முறையா செயல்படுறாங்க. நம்ம ஊர் டெக்னீஷியன்கள்தான் அங்கே இருக்காங்க. எப்படி நம்ம ஊர்ல நல்லா படிச்சு, ஃபாரினுக்கு வேலைக்குப் போயிடுறாங்களோ அது மாதிரி இங்கே நல்லா ட்ரெயின் ஆகிட்டு மும்பைக்குப் போயிடுறாங்க.

 ஜீவா.
ஜீவா.

நம்ம ஊர்லதான் தயாரிப்பாளர் சங்கப் பிரச்னை, படங்கள் ரிலீஸ் ஆகுறதில்லை, ரிலீஸ் தேதி கிடைக்கலை இந்த மாதிரி நிறைய பிரச்னைகள் இருக்கு. அங்கேயும் பிரச்னைகள் இருக்கும். இருந்தாலும் அவங்க ரொம்ப முறையா இருக்கிறதுனால பெரிசாகறதில்லை. இக்கரைக்கு அக்கரை பச்சைதானே!”

உங்க கரியர்ல ஒருமுறை வொர்க் பண்ண இயக்குநர்கள்கூட மறுபடியும் பண்ணலையே ஏன்?

“தெரியலைங்க. அப்படி பண்ணியிருந்தால் இன்னும் பெரிய ஹீரோ ஆகியிருப்பேன்னு நினைக்கிறேன். அப்படி அமையலை.”

 ஜீவா.
ஜீவா.

அமீர், ராம், மிஷ்கின், ஜனநாதன், ஷங்கர், கெளதம் வாசுதேவ் மேனன்னு முக்கிய இயக்குநர்கள் எல்லாருடைய படத்திலும் நடிச்சிட்டீங்க. இருந்தாலும் உங்க கரியர்ல எதோ மிஸ் ஆகுதுனு நினைக்கிறீங்களா?

“என் கரியர் இன்னும் முடியலையே. இப்போதான் 35 படங்கள் பண்ணியிருக்கேன். இது எல்லாமே ஒரு பயணம் அவ்ளோதான். இதுல வருத்தப்பட ஒண்ணுமில்லைனு நினைக்கிறேன்”

காமெடி, லவ், சூப்பர் ஹீரோ, ஆக்‌ஷன், ரீமேக், மல்டி ஹீரோ, டூயல் ஹீரோ, டபுள் ஆக்‌ஷன்னு எல்லாமே முயற்சி பண்ணிப் பார்த்துட்டீங்க. இருந்தும் இந்த ஜானர்ல நடிக்கணும்னு ஆசை எதாவது இருக்கா?

“கிரிக்கெட் படம் ஒண்ணு பண்ணனும்னு ஆசை இருந்தது. அதுவும் ‘83’ மூலமா நிறைவேறிடுச்சு. ஒரே ஒரு வரலாற்றுப் படம் பண்ணணும்னு ஆசை இருக்கு.”

நமக்கு தாடி இருந்தா நல்லாயிருந்திருக்குமோ, நமக்கு இன்னும் தாடி இல்லையேனு வருத்தப்பட்டிருக்கீங்களா?

“ஆண்டவன் என்ன கொடுத்திருக்கானோ அதைவெச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எதிர்பார்ப்புகள் கடல் மாதிரி இருக்கும். தாடி இருந்தால் படம் ஓடும். இல்லைனா ஓடாதுனு இல்லை. நான் இப்போ சின்னப் பையனா இருக்கேன். அதுக்குள்ள என்ன அவசரம்... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, தாடி வந்துடும்.”

‘ஜிப்ஸி’ அனுபவம் எப்படி இருந்தது?

“ராஜு முருகன் இயக்கத்துல நடிச்சது ரொம்பவே அழகான அனுபவம். நல்ல படங்கள்ல நடிக்கணும்னு பார்க்கிறேன். ஆனா, இன்னும் ரிலீஸாக மாட்டேங்குது. `ஜிப்ஸி’ பார்த்த பிறகு ஒவ்வொரு நடிகருக்கும் இந்த மாதிரி ஒரு படம் பண்ணலையேனு வருத்தம் இருக்கும். ‘ஜிப்ஸி’ என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான படம். `அறிவுள்ள, திமிருள்ள உங்க தயவெல்லாம் எனக்கு தேவையே இல்லை’னு இயற்கையையும் தன் குதிரையையும்வெச்சுகிட்டு சந்தோஷமா இருக்கிற ஒரு கேரக்டர்தான் ஜிப்ஸி. அவனுக்கு இருக்கிற அந்தத் திமிர் எல்லா மனிதனுக்கும் வரணும். முதல்ல மனிதம்தான். அப்புறம்தான் அரசியல், அது இது எல்லாம். இதைத்தான் ஜிப்ஸி சொல்றான்.”

சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 50-வது படம் உங்க அறிமுகப் படம், ‘ஆசை ஆசையாய்.’ நீங்க நடிச்சிருக்கிற ‘களத்தில் சந்திப்போம்’ 90-வது படம். இந்தப் பயணத்துல ஜீவா யார்னு உங்களுக்கு ஒரு ஐடியா வந்திருக்கும்ல?

“அதைத்தாங்க நானும் தேடிக்கிட்டே இருக்கேன். எல்லா நடிகருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். எனக்குத்தான் ஸ்டைலே இல்லை. என்னைப் பொறுத்தவரை நான் புதுசா முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கணும். அதை ஏத்துக்கிறதுக்கு ரெண்டு மூணு வருஷமாகும். அது வரைக்கும் நான் பதில் சொல்லணும் பாருங்க... சமீபத்துல ஒரு பிரச்னையைச் சந்திக்கிறேன். 20 வயசுப் பசங்களுக்குப் பதில் சொல்றது ரொம்ப சிரமமா இருக்கு. ஏன்னா நான் அவங்களுக்குப் படம் பண்றதில்லை. ‘சிவா மனசுல சக்தி’ இருபது வயசுப் பசங்களுக்கான படம். அப்புறம் மெச்சூர்டான ஆடியன்ஸுக்கு படம் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.

 ஜீவா.
ஜீவா.

நீங்க சொல்ற ‘ராம்’, ‘கற்றது தமிழ்’, ‘ஈ’ எதுவும் சரியா ஓடலை. எவ்ளோ நாள்தான், `விமர்சனரீதியா பாராட்டப்பட்ட படம்’ பண்றது... படம் ஓட வேண்டாமா... கமர்ஷியலும் வேணும்ல. ‘தெனாவட்டு’, ‘கோ’, ‘கச்சேரி’, ‘கலகலப்பு 2’ இந்த மாதிரி படங்களும்தான் இப்போ நான் இங்கே உட்கார்ந்திருக்கக் காரணம். அதுக்குனு தனி ஆடியன்ஸ் இருக்காங்க. மதுரை, திருநெல்வேலி மாதிரியான ஊர்கள்ல இருக்கறவங்க எப்போ ‘தெனாவட்டு’ மாதிரி படம் பண்ணப்போறீங்கனு கேட்கறாங்க. எல்லாரையும் சமாளிக்கிறது சவாலா இருக்கு. `ஜீவா இந்த மாதிரிப் படங்கள்தான் பண்ணுவார்’னு எந்த வட்டத்துக்குள்ளேயும் சிக்கிடக் கூடாது. எல்லாரையும் திருப்திபடுத்துற மாதிரியான படத்தை ஸ்பீல்பெர்க்கால்கூட பண்ண முடியாது.”