Published:Updated:

“என் வாழ்க்கையில் பல ஆச்சர்யங்கள்!”

சரத்பாபு
பிரீமியம் ஸ்டோரி
சரத்பாபு

சரத்பாபு

“என் வாழ்க்கையில் பல ஆச்சர்யங்கள்!”

சரத்பாபு

Published:Updated:
சரத்பாபு
பிரீமியம் ஸ்டோரி
சரத்பாபு
“என் வாழ்க்கையில் பல ஆச்சர்யங்கள்!”

டிகர் சிவாஜி தன்னுடைய பர்சனல் விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு நெருக்கமானவர்; ஜெயலலிதா நடித்த கடைசிப் படமான ‘நதியைத் தேடிவந்த கடல்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்; ரஜினி, கமல் என இருவருக்கும் பல படங்களில் நண்பராக நடித்தவர்... இப்படிப் பல பெருமைகள் உண்டு சரத்பாபுவுக்கு. அவரைச் சந்தித்தேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
“என் வாழ்க்கையில் பல ஆச்சர்யங்கள்!”

“உங்களை உருவாக்கிய இயக்குநர்கள்?”

“சென்னையில் ஒரு சினிமா விழா. என் பின் இருக்கையிலே கே.பி சாரும், சிங்கீதம் சீனிவாசன் சாரும் அமர்ந்திருந்தது எனக்குத் தெரியாது. என் காலேஜ் நண்பர்களோட அரட்டை அடிச்சுக்கிட்டிருந்தேன். திடீர்னு சிங்கீதம் சார் என்னைக் கூட்டிட்டுப்போய் கே.பி சாரிடம் அறிமுகம் செய்ய, மறுநாள் அவருடைய ‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் நடிக்கச் சொன்னார். பிறகு, ‘அவர்கள்’, ‘நூல்வேலி’ என ஏகப்பட்ட படங்களில் நடித்தேன்.

கே.பி சார் குருநாதர், மகேந்திரன் நண்பர். ‘முள்ளும் மலரும்’ படத்தின் கதையை, தயாரிப்பாளர் வேணு செட்டியாரிடம் சொல்லியிருக்கிறார், மகேந்திரன். ஒருமுறை என் வீட்டுத் தோட்டத்தில் நான் விளையாடிக்கொண்டிருந்தபோது என்னைப் பார்த்திருக்கிறார், வேணு செட்டியார். அவருக்கும் என்னைப் பிடித்துப்போக, அந்தப் படத்தில் நடித்தேன். ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’, ‘மெட்டி’, ‘கண்ணுக்கு மை எழுது’ எனப் படங்களுக்குக் கதை எழுதும்போதே இந்தக் கேரக்டரில் நடிக்கப்போவது சரத்பாபு என்றே எழுதிவிடுவார் மகேந்திரன். அந்தளவுக்கு அவருடைய மனசுக்கு நெருக்கமானவன் நான். ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துக்கு மத்திய அரசின் சிறந்த துணை நடிகர் விருது எனக்குக் கிடைக்க வேண்டியது, கடைசி நேரத்தில் தவறிவிட்டது. இந்தி இயக்குநர் ரிஷிகேஷ் முகர்ஜி அப்போது எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘ஸாரி, உங்களுக்குத்தான் அவார்டு கிடைக்க வேண்டியது. சில தலையீடுகளால் தரமுடியாமல் போயிடுச்சு’ என்று குறிப்பிட்டிருந்தார். அவருக்கு நான் நன்றிக் கடிதம் அனுப்பினேன்.

நதியைத் தேடிவந்த கடல்
நதியைத் தேடிவந்த கடல்
படம் உதவி: ஞானம்

பாரதிராஜா, ஒரு டிரெண்ட் செட்டர். ‘16 வயதினிலே’ படத்தில் நடித்த டாக்டர் வேடத்துக்கு என்னைப் பற்றி ஒருவர் சொல்லியிருக்கிறார். அவரும் என்னை நேரில் பார்க்க விரும்பினார், போனேன். ‘நான் எதிர்பார்த்ததைவிட நீங்க பொருத்தமா இருக்கீங்க’ன்னு சந்தோஷப்பட்டார். ‘16 வயதினிலே’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக்கூடப் போய்விட்டேன். ஒரு தனிநபரால் நான் நடிக்க முடியாமப்போயிடுச்சு. அவர் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. பிறகு, ‘அலைகள் ஓய்வதில்லை’ தெலுங்கு ரீமேக்கில் நான் தியாகராஜன் நடித்த கதாபாத்திரத்தில் நடித்தேன். பாக்யராஜ் இயக்கிய ‘அந்த 7 நாட்கள்’ படத்தில் டாக்டர் வேடத்தில் நடிக்க முதலில் என்னைத்தான் ஒப்பந்தம் செய்தார். பிறகு, என்னால் நடிக்க முடியாமல்போனதால், ராஜேஷ் நடித்தார். நான் நடித்த ‘கண்ணில் தெரியும் கதைகள்’ படத்தில் கே.வி.மகாதேவன், ஜி.கே.வெங்கடேஷ், சங்கர் - கணேஷ், அகத்தியர், இளையராஜா ஆகிய இசை மேதைகள் இசை அமைச்சுக் கொடுத்தாங்க. எனக்குச் சொந்த வாழ்க்கையில் பெரிய போலீஸ் அதிகாரி ஆகணும்; ஒரு மாவட்டத்தையே என் கட்டுப்பாட்டுக்குள் வெச்சிருக்கணும்னு ஆசை இருந்தது. மணிரத்னம் இயக்கிய முதல் படமான ‘பகல் நிலவு’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து, அந்த ஆசை நிறைவேறியது.”

முள்ளும் மலரும்
முள்ளும் மலரும்

“சிவாஜியுடனான உங்கள் நட்பு?”

“என் வீட்டுக்குப் பக்கத்துலதான் அவரோட வீடு. அதனால, மாலை ஷூட்டிங் முடிந்ததும் அடிக்கடி கூப்பிடுவார். அவரோட பர்சனல் விஷயங்களை என்னிடம் நிறைய சொல்லியிருக்கார். ஒருமுறை கற்பகம் ஸ்டூடியோவில் எனக்கும் ஷூட்டிங், அவருக்கும் அங்கே வேறு படத்தின் ஷூட்டிங். நான் ராஜா வேஷம் போட்டுகிட்டு நடந்துபோகும்போது சிவாஜி சார் எதிர்ல வந்தார். என் முகத்தைத் தொட்டு, ‘ராஜான்னா இதுமாதிரிதான்டா இருக்கணும்’னு சொல்ல, நான் கண் கலங்கிட்டேன். தாசரி நாராயணராவ் இயக்கிய தெலுங்குப் படத்துல நடிச்சுக்கிட்டிருந்தேன். ஒரு காட்சியில் நான் குதிரையில் அமர்ந்தபடி நீண்ட வசனம் பேசணும். என்னைத் தனியா அழைச்சுக்கிட்டுப்போய், ‘டேய், குதிரையில் உட்கார்ந்து அப்படியே வசனம் பேசாதே. கடிவாளக் கயிற்றையும், முகத்தையும் லேசா அசைச்சுக்கிட்டே பேசுடா’ன்னு சொன்னார். அந்தப் படத்தைத் திரையில் பார்க்கும்போது சிவாஜி சார் எவ்ளோ பெரிய ஆள் என்பதை உணர்ந்தேன்.”

சலங்கை ஒலி
சலங்கை ஒலி

“ஜெயலலிதாவுக்கு ஜோடியாக நடித்த ‘நதியைத் தேடிவந்த கடல்’ படத்தில் நடித்த அனுபவம்?”

“எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர் என்று பெரிய பெரிய ஜாம்பவான்களோடு நடிச்சவங்க ஜெயலலிதா. சினிமாவில் அவங்களுக்கு நான் ஜூனியர். லெனின் சார் பிரமாதமான எடிட்டர் மட்டுமல்ல, நல்ல இயக்குநரும்கூட. ‘நதியைத் தேடிவந்த கடல்’ படத்தின் முதல்நாள் ஷூட்டிங்ல, ஜெயலலிதா மேடத்துடன் நடிக்க நெர்வஸா இருந்தது. இயல்பாகப் பேசி, என்னை சகஜமாக்கினாங்க. ‘முள்ளும் மலரும்’ படத்தைப் பார்த்ததாகவும், நான் நல்லா நடிச்சிருந்தேன்னும் பாராட்டினாங்க. ஊட்டியில் ஓடும் ஒரு நதியில் ‘தவிக்குது...’ பாடல் காட்சியைப் படமாக்கினார்கள். வழக்கமாக ஹீரோயின்தான் நீச்சல் உடையில் கிளாமர் டான்ஸ் ஆடுவார். லெனின் அப்படியே உல்டாவாக எனக்கு நீச்சல் உடை கொடுத்துவிட்டு, ஜெயலலிதா மேடத்தை க்ளாஸிக் நடனம் ஆடவைத்துப் படமாக்கினார்.

தீர்ப்பு
தீர்ப்பு

‘நதியைத் தேடிவந்த கடல்’ படத்தில் நடிச்சுக்கிட்டிருக்கும்போதே ஜெயலலிதா மேடம் அவங்களோட சொந்த பேனர்ல இன்னொரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டாங்க. அதில் நான்தான் ஹீரோவா நடிக்கணும்னு சொன்னாங்க. ஏவி.எம் ஸ்டூடியோவில் நானும், ஜெயலலிதா மேடமும் நடித்த ஒரு பாடல் காட்சிகூடப் படமானது. ஆனால், அவங்க தீவிர அரசியலில் இறங்கிட்டதால, அந்தப் படம் டிராப் ஆகிடுச்சு. எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ரவிச்சந்திரன், சிவகுமார்கூட அவங்க நடிச்சிருந்தாலும் ரஜினி, கமல் ஜெனரேஷனில் என்கூட மட்டும்தான் நடிச்சிருக்காங்க என்பது எனக்குப் பெருமையான விஷயம். அவங்க முதல்வர் ஆனபிறகு அவங்களைச் சந்தித்ததில்லை. சில சினிமா விழாக்களில் பார்த்தேன்.”

முத்து
முத்து

“ரஜினி, கமலை நீங்கள் அடித்தால் மட்டும் ரசிகர்கள் ஒப்புக்கொள்வது ஏன்?”

“ ‘அண்ணாமலை’ படத்தின் ஒரு காட்சியை சென்னை அடையாறு கேட் ஹோட்டலில் படமாக்கினார்கள். அப்பா ராதாரவிக்கும், ரஜினிக்கும் சண்டை வந்துடும். ஒரு கட்டத்துல ராதாரவியை ரஜினி அடிப்பார். அப்போ, நான் ரஜினியின் கன்னத்துல அறைவேன். அந்தக் காட்சியை எடுத்து முடித்ததும், ‘சரத்பாபு, நீங்களா இருக்கிறதால தப்பிச்சீங்க. வேற யாராவது ரஜினியை அடிக்கிறமாதிரி இருந்தா, அவங்க வீட்டு முன்னாடி ரஜினி ரசிகர்கள் கலாட்டா பண்ணிடுவாங்க’ன்னு ராதாரவி சொன்னார். ரஜினிக்கு ஈகோ கிடையாது. தன்னை அண்ணாமலை கேரக்டராக நினைத்து, வாழ்ந்து நடித்தார். என்னையும் சரத்பாபுவாகப் பார்க்கவில்லை. தன் நண்பன் அசோக்காகவே பார்த்தார். ரஜினி ரசிகர்களும் அப்படிப் பார்த்ததால்தான், என்மீது கோபப்படவில்லை. ‘முத்து’ படத்துக்குப் பிறகு ஜப்பானில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம். அந்தப் படத்தில் நானும் நடித்திருப்பதால், என்னைப் பார்க்கும் ஜப்பானியர்கள் பலபேர் தங்கள் மகிழ்ச்சியை என்னிடம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

பகல் நிலவு
பகல் நிலவு

சினிமாவில் சிலரைச் சந்திக்கும்போதே நமக்கு நீண்டகால நண்பர் போன்ற எண்ணம் வரும்; கமலைப் பார்த்தவுடனே எனக்கு அது வந்தது. என்னைவிட ரெண்டு வயசு இளையவர். எங்களோட நட்பு ‘நிழல் நிஜமாகிறது’ படத்திலிருந்து இப்போதுவரை தொடர்கிறது.

சினிமா என்பதே அசையும் அதிசயம்தான். அந்த அதிசயத்தில் பல ஆச்சர்யங்கள் நடந்திருக்குங்கிறது என்பதைத் திரும்பிப் பார்க்கும்போது சுகமா இருக்கு!”

``அடுத்து எப்போது உங்களைத் திரையில் பார்க்கலாம்?’’

அடுத்து என்டிஆர் பேரன் கல்யாண் ராம் நடிக்கும் ஒரு தெலுங்குப்படத்தில் நடிக்க இருக்கிறேன். தமிழில் நிறைய வாய்ப்பு வருது, மனதுக்குப் பிடித்த கதை அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்.