
ஹீரோ கேரக்டரும் ஹீரோயின் கேரக்டரும் ரொம்ப புதுமையா இருந்தது.
“ ‘டக்கர்.’ இது ஒரு ரொமான்டிக் ஆக்ஷன் படம். இரண்டு தனித்துவமான கேரக்டர்களுக்கு இடையே நடக்குற கதை. சமீபத்தில் வந்த எந்தப் படங்களும் இந்த ஜானரைத் தொடலைன்னு நினைக்கிறேன். அதனால ஆடியன்ஸுக்கு இது ரொம்பவே ஃப்ரெஷ்ஷா இருக்கும்” - உற்சாகமாகப் பேசுகிறார் நடிகர் சித்தார்த்.
‘` ‘டக்கர்’ல என்ன ஸ்பெஷல்?’’
“இது ரொம்ப யூத்ஃபுல்லான சப்ஜெக்ட். ஹீரோ கேரக்டரும் ஹீரோயின் கேரக்டரும் ரொம்ப புதுமையா இருந்தது. ஒரு காதல் கதையில ஹீரோ - ஹீரோயின் சேர்ந்திருக்கிற போர்ஷன் மட்டும் வொர்க் அவுட்டானா போதாது. ரெண்டு பேருக்குமான தனித்தனி கேரக்டர்களும் சுவாரஸ்யமா இருக்கணும். அந்த முறையில் பண்ணப்பட்ட கதை இது. இதுவரை நான் நடித்த படங்களைவிட இதுல நிறைய ஆக்ஷன் பண்ணியிருக்கேன்.”
‘`ரொமான்டிக் ஹீரோ, சாக்லேட் பாய் இமேஜை மாத்த நினைக்கிறேன்னு நிறைய பேட்டிகள்ல சொல்றீங்க. ஆனா ரொமான்டிக் சப்ஜெக்ட்ல நடிக்கிறீங்களே?’’
“ ‘பாய்ஸ்’, ‘ஆயுத எழுத்து’ன்னு நடிச்சதனால வந்த இமேஜ் அது. நானா அந்த இமேஜைத் தேடிப்போனது கிடையாது. ஆனா, அது ரொம்ப வருஷமா என்கூடவே ஒட்டிக்கிட்டு இருக்கு. அந்த இமேஜை மாத்தணும்னு நான் ரொம்ப மெனக்கெடலை. ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டணும்னு நினைக்கிறேன். இந்தப் படத்துல நடிக்கிறதனால மீண்டும் ரொமான்டிக் ஹீரோ இமேஜ் வந்திடுமான்னு கேட்டா, நிச்சயம் இல்லைன்னுதான் சொல்லுவேன். காரணம், இதுவரை நான் பண்ணுன ரொமான்டிக் படங்களுடைய சின்ன சாயல்கூட இதுல இருக்காது. அதனாலதான் இதுல நடிக்கவே சம்மதிச்சேன்.
இந்தப் படத்துல ஆக்ஷனையும் ரொமான்ஸையும் சரிசமமா வெச்சிருக்கார் இயக்குநர் கார்த்திக். எந்த இடத்திலும் எதார்த்தம் மிஸ் ஆகிடக்கூடாதுன்றதுல நான் ரொம்பவே கவனமா இருப்பேன். என் கரியர்ல ஆக்ஷன் போர்ஷன்களும் பண்ணியிருக்கேன். ஆனா, ஆக்ஷன் இமேஜ் எனக்கு வந்ததில்லை. இந்தப் படத்துல இருக்கிற அந்த கேரக்டர் மக்களோடு பொருந்திப்போனா நிச்சயமா எனக்கு ஆக்ஷன் ஹீரோவுக்கான இமேஜ் உருவாகும்னு நினைக்கிறேன். நான் இப்போ ஆக்ஷன் ஹீரோ.”
‘`கார்த்திக் இயக்கத்துல நீங்க நடிச்ச ‘சைத்தான் கா பச்சா’ இன்னும் வெளியாகலை. இந்த நிலையில் உங்களுடைய அடுத்த படத்தையும் கார்த்திக்கே இயக்க என்ன காரணம்?’’
“நானும் கார்த்திக்கும் ஆரம்பத்துலேயே ரெண்டு மூணு கதைகள் பத்திப் பேசியிருக்கோம். அதனால அடுத்தடுத்து படம் பண்ணலாம்னு அப்பவே முடிவு பண்ணிட்டோம் . முதல்முறையா ஒரு இயக்குநருடைய இயக்கத்துல ரெண்டு படம் பண்ணியிருக்கேன். ‘சைத்தான் கா பச்சா’, ‘டக்கர்’ ரெண்டு படத்துக்கும் பயங்கரமான மெனக்கெடல் இருக்கு.”
‘`ஹீரோயின் திவ்யான்ஷா?’’
“இது அவங்களுக்குத் தமிழ்ல முதல் படம். நல்லா நடிச்சிருக்காங்க. இந்தக் கதையில ஹீரோயினுக்கு பர்சனாலிட்டி, ஈகோ, கொஞ்சம் அகந்தைன்னு சில தனித்துவமான கேரக்டர்கள் இருக்கு.”
‘`டெக்னிக்கல் டீம்?’’
“வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். இந்தப் படம் வெளியான பிறகு, பெரிய ரவுண்டு வருவார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைச்சிருக்கார். இதுவரை பார்க்காத யோகிபாபுவை இதில் பார்க்கலாம். பாலிவுட் நடிகர் அபிமன்யு சிங் வில்லனா பண்ணியிருக்கார். ஆர்.ஜே விக்னேஷ் கூட வொர்க் பண்ணது ரொம்ப ஜாலியா இருந்தது. இன்னும் பெரிய பட்டாளமே இருக்கு.”

‘`சித்தார்த்தை எப்போது இயக்குநராகப் பார்க்கலாம்?’’
“அதுக்கு இன்னும் கொஞ்சம் டைம் இருக்கு. எடுத்தவுடனே ‘க்ளாப்’ அடிச்சிட முடியாது. இப்போ வேற பொறுப்புகள் நிறைய இருக்கு. டைரக்ஷன்னு முடிவு பண்ணிட்டா, மத்த எந்த வேலையும் பண்ணக்கூடாதுன்னு உறுதியா இருக்கேன். அதுக்கு எப்போ நேரம் கிடைக்குதோ அப்போ ஆரம்பிச்சிடுவேன். நிறைய கதைகள் இருக்கு. மத்த எல்லா வேலைகளையும் ஒதுக்கி வெச்சுட்டு இதுல மட்டும் கவனம் செலுத்துற அளவுக்கு தைரியமும் நேரமும் கிடைக்கணும்.’’