சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

"எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்!"

ஐஸ்வர்யா ராஜேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஐஸ்வர்யா ராஜேஷ்

அலர்ட் ஐஸ்வர்யா

ஸ்வர்யா ராஜேஷ்… அசாத்திய உழைப்பு, நேர்த்தியான நடிப்பு எனத் தனக்கான அடையாளத்துடன் மிளிரும் நடிகை. நடிக்க அறிமுகமான காலத்திலிருந்தே எதிர்பாராத ஆச்சர்யங்களை அளித்துக்கொண்டிருப்பவர். இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து முத்திரை பதித்தது முதல் சமீபத்தில் ‘இந்தி தெரியாது போடா’ டி ஷர்ட் சர்ச்சையில் சிக்கியது வரை... ஆப்லைனிலும் ஆன்லைனிலும் டிரெண்டிங்கிலேயே இருப்பவரிடம் பேசலாம் என அவருடைய தி.நகர் வீட்டில் சந்தித்தோம்.

“இந்த வீடு எனக்கு ரொம்ப ஸ்பெஷல். சின்ன வயசுல ஒரு ஹவுஸிங் போர்டு வீட்ல இருந்தோம். அப்பா இறந்த பிறகு, கடன் பிரச்னையினால அந்த வீட்டை வித்துட்டு வாடகை வீட்டுக்குப் போய்ட்டோம். சினிமாவுக்கு வந்து ஐந்தாறு வருடங்களாகியும் அந்த வீட்லதான் இருந்தேன். அப்புறம், தி.நகர் காஸ்ட்லிங்கிறதனால கொஞ்சம் தூரமா ஒரு வீடு சொந்தமா வாங்கியிருந்தேன். ஆனா, அந்த ஏரியாவை விட்டு வந்ததனால என் அம்மாவுக்கு ஒரு சின்னக் கவலை இருந்த மாதிரி நினைச்சேன். அப்புறம், எவ்ளோ ஆனாலும் பரவாயில்லை, தி.நகர்ல ஒரு வீடு வாங்கணும்னு கனவா மாறுச்சு. இப்போ இந்த வீடு வாங்கி ஒன்றரை வருஷமாகுது. என்னைவிட அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். இன்னும் ஹூண்டாய் ஐ10 கார்தான் வெச்சிருக்கேன். சினிமாவுல இருக்கிற என் பிரெண்ட்ஸ் ‘ஏன் இன்னும் பி.எம்.டபுள்யூ, ஜாகுவார் வாங்கலை?’ன்னு கேட்பாங்க. நான் அவங்ககிட்ட ‘கார்ல அதிக பணத்தைப் போடாதீங்க. அதுக்குச் செலவு பண்ணுறதை நல்ல வீட்டுக்காகச் செலவு பண்ணுங்க’ன்னு சொல்லிட்டு, இந்த வீட்டை வாங்கிட்டேன்!’’

 "எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்!"

`` ‘க/பெ.ரணசிங்கம்’ பட டிரைலரில் விஜய் சேதுபதியைவிட நீங்கதான் ஆக்டிவ்வா இருந்தீங்க!’’

“ராமநாதபுர தண்ணீர்ப் பிரச்னைதான் கதை. விஜய் சேதுபதி ரணசிங்கம். நான் அவரின் மனைவி அரியநாச்சி. கிராமத்துல துறுதுறுன்னு இருக்கிற பொண்ணு ஏன் போராளியா மாறுறாங்கிறதுதான் படம். கதையை இயக்குநர் விருமாண்டி சொன்னதுமே, ‘ரணசிங்கம் கேரக்டருக்கு விஜய் சேதுபதிக்கிட்ட கேட்கலாம்’ன்னேன். அவருக்கும் கதை பிடிச்சிருந்தது. சேது படத்துக்குள்ள வந்த பிறகு, படம் பெருசாகிடுச்சு. ரங்கராஜ் பாண்டே சாரும் நடிச்சிருக்கார். எனக்கு அரசியல் தெரியாது. ஆனா, அவர்கூட பேசி கொஞ்சம் விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன். படத்துல நடிச்ச பிறகு, என் வீட்டுல யாராவது தண்ணியை வீணாக்குனா, அவ்ளோ கோபம் வருது. அது படம் பாக்குறவங்களுக்கும் வரும். ‘க/பெ ரணசிங்கம்’ படமே தியேட்டர்ல வரணும்னு எல்லோரும் ஆசைப்பட்டோம். ஆனா, தயாரிப்பாளருடைய சூழலையும் புரிஞ்சுக்கணும். அப்படிதான் இந்தப் படம் நேரடியா ஓடிடியில வருது!”

``விஜய் தேவரகொண்டாவுடன் ‘World Famous Lover’ படத்துல நடிச்சிருந்தீங்க. கேமராவுக்குப் பின் அவர் எப்படி?’’

“ரொம்ப டேக் இட் ஈஸி டைப். ரொம்ப கூல். ‘சார் சுனாமி வருது’ன்னு சொன்னாக்கூட, ‘ஓ சுனாமியா. வரட்டும் பார்த்துக்கலாம்’னு அவ்ளோ கேஷுவலா சொல்வார்.”

``எந்தப் பிரபலத்துடைய வாழ்க்கையை ஒருநாள் வாழ்ந்து பார்க்கணும்னு நினைக்கிறீங்க?’’

“சிம்புவுடைய வாழ்க்கையை ஒருநாள் வாழ்ந்து பார்க்கணும்னு நினைக்கிறேன். எனக்கு அவருடைய நடிப்பு ரொம்பப் பிடிக்கும். ‘செக்கச்சிவந்த வானம்’ படத்துல எனக்கும் அவருக்கும் காம்பினேஷனே இருக்காது. ஒரு நாள் ஷூட்டிங்ல சந்திச்சேன். ஸ்பாட்டுக்கு வந்த ஒரு மணி நேரத்துல முடிச்சுட்டார். ‘அதுக்குள்ள ஓவரா?’ன்னு கேட்டா, ‘அவ்ளோதான் முடிஞ்சுடுச்சுமா’ன்னு (சிம்பு குரலில்) சொன்னார். வந்தார்னா மேஜிக் மாதிரி டக்குனு முடிச்சுட்டுப் போயிடுவார். செம பர்பாமர். அதை வார்த்தைகளால சொல்லமுடியாது.”

 "எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்!"

``சமூக வலைதளங்களில் உங்களைத் திட்டி வரும் கமென்டுகளைப் பார்க்கும்போது உங்கள் ரியாக்‌ஷன் என்ன?’’

“தவிர்த்திடுவேன். கமென்ட்ஸ் படிக்கக் கூடாதுன்னு சமீபமா முடிவு பண்ணியிருக்கேன். ஏன் எல்லோரும் இவ்ளோ நெகட்டிவிட்டியோட இருக்காங்கன்னு தெரியலை. இந்த மாதிரி சூழல்ல நிறைய பாசிட்டிவிட்டி இருக்கணும். மனசு கஷ்டப்படாத மாதிரி ட்ரோல் பண்ணுனாங்கன்னா ஓகே. ஒருத்தரை மனசு கஷ்டப்படுத்தி என்ன பண்ணப் போறாங்க? பாசிட்டிவிட்டியைப் பரப்புவோம்.”

 "எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்!"

``யாருடைய பயோபிக்கில் நடிக்க ஆசை?’’

“மனோரமா ஆச்சி. நான் அவங்களுடைய மிகப்பெரிய ரசிகை.”

``யாராவது மூணு ஹீரோக்களுக்கு சூப்பர் ஹீரோ கேரக்டர்கள் கொடுக்கணும்னா யாரெல்லாம் உங்களுடைய சாய்ஸ்?’’

“சரத்குமார் சார் - ஹல்க். அயர்ன்மேன் - விஜயகாந்த் சார், ஸ்பைடர்மேன் - விஜய் தேவரகொண்டா. எனக்கு விஜயகாந்த் சாரை நடிகராகவும் மனிதராகவும் ரொம்பப் பிடிக்கும். ஆனா, அவரை நான் இன்னும் சந்திச்சதில்லை. சீக்கிரம் மீட் பண்ணணும்.”

``அப்பா தெலுங்குல ஹீரோவா இருந்தாராமே! அவரைப் பத்திச் சொல்லுங்க.’’

“அப்பா ராஜேஷ் எனக்கு எட்டு வயசா இருக்கும்போது உடல்நிலை சரியில்லாமல் இறந்துட்டார். எனக்கு மூணு அண்ணன். ரெண்டு பேர் இப்போ இல்லை. நான் மட்டும்தான் பொண்ணுன்னு என் மேல ரொம்பப் பிரியமா இருப்பார். அப்பா தெலுங்கு சினிமாவுல ஹீரோவா இருந்தார். நான் பிறக்கும்போது அவருக்கு கரியர் டெளனாகி லோயர் மிடில் கிளாஸுக்குப் போய்ட்டோம். தெலுங்குலதான் ஹீரோவா நடிச்சிருந்தார். ஒரு ஆடியோ லான்ச்ல ஒரு தயாரிப்பாளர், ‘உங்க அப்பாவாலதான் நான் இங்க இருக்கேன்’னு சொன்னார். அவர் தயாரிச்ச படங்கள் எதுவும் ஓடலையாம். சினிமாவை விட்டே போறேன்னு சொன்னதும் என் அப்பா ‘நான் டேட் தர்றேன். என்னை வெச்சுப் படமெடு. சம்பளமே வேண்டாம்’னு சொல்லி நடிச்சுக்கொடுத்திருக்கார். படம் சூப்பர்ஹிட். எனக்கு ரொம்பப் பெருமையாவும் சந்தோஷமாவும் இருந்தது. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அப்போ நாங்க கொஞ்சம் கஷ்டத்துல இருந்த சமயம். அப்பா டப்பிங் பேசி 5,000 சம்பளம் வாங்கிட்டு வந்தார். அந்த முழுப்பணத்துக்கும் என்னைக் கூட்டிட்டுப் போய் டாய்ஸ் வாங்கிக்கொடுத்துட்டு என் அம்மாகிட்ட பயங்கரமா திட்டு வாங்கினார்!”

``அரசியல் ப்ரஷர், போதைப்பொருள், நெப்போடிஸம், காஸ்டிங் கவுச்னு பாலிவுட்ல நிறைய பிரச்னைகள் இருக்கு. இப்படி வெளிய வராத அச்சுறுத்துற விஷயமா தமிழ் சினிமாவுல இருக்கிறது என்ன?”

“தமிழ் சினிமாவுல இருக்கிறது பெரிய பாக்கியம்னு நினைக்கிறேன். ரொம்ப பிரெண்ட்லி. ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருக்கோம். நீங்க சொல்ற விஷயங்களை நான் பர்சனலா சந்திச்சதில்லை. பாலிவுட்ல நடக்கிற அது எல்லாத்தையும் பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. இதெல்லாம் நமக்குப் பெரிய பாடம்னு நினைக்கிறேன். அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். சோஷியல் மீடியாவைப் பார்க்கும்போது, எந்தத் தேவையில்லாத விஷயங்களிலும் போய் மாட்டிக்கக்கூடாதுன்னு தெளிவா இருக்கேன்!”