Published:Updated:

அலைபாயுதே 2, டைரக்‌ஷன் கனவு, ரகசிய சிநேகிதன்... மனம் திறக்கும் ஸ்வர்ணமால்யா

ஸ்வர்ணமால்யா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வர்ணமால்யா

வித்தகி

அலைபாயுதே 2, டைரக்‌ஷன் கனவு, ரகசிய சிநேகிதன்... மனம் திறக்கும் ஸ்வர்ணமால்யா

வித்தகி

Published:Updated:
ஸ்வர்ணமால்யா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வர்ணமால்யா

‘அலைபாயுதே’யில் ஷாலினியின் பாசத்துக்குரிய அக்காவாக, ‘மொழி’யில் ஜோதிகாவின் நேசத்துக்குரிய தோழியாக வாழ்ந்து காட்டிய ஸ்வர்ணமால்யாவை நினைவிருக்கிறதா?

சின்னத்திரை தொகுப்பாளர்களுக்கெல்லாம் டிரெண்ட் செட்டராக இருந்தவர், திடீரென கேமரா வெளிச்சத்திலிருந்து காணாமல் போனார். நடன நிகழ்ச்சிகள், வெளிநாட்டுப் பயணங்கள் என வேறோர் உலகில் பிஸியாக இருப்பவரிடம் பேசினோம்...

‘`லாக்டௌன்னு பேர்தான். ஆனா, வழக்கத்தைவிட இந்த நாள்கள்ல இன்னும் பிஸியா இருக்கோம். கரெக்டா?’’ என்று கேட்பவர், எப்போதுமே அழகு தமிழில் பேசுபவர். இப்போது அந்தத் தமிழ் இன்னும் மெருகேறியிருக்கிறது.

‘`என்னைப் பார்க்குற பலரும் ஏன் மீடியாவை விட்டு ஒதுங்கினீங்கனு கேட்கறாங்க. மீடியாவை விட்டு நான் எங்கேயும் போகலை. சின்ன, பெரிய திரைகளுக்கு வர்றதுக்கு முன்னாடிலேருந்தே நடனக் கலைஞரா நான் மீடியாவில்தான் இருந்திருக்கேன். அப்புறமும் அது தொடர்ந்திருக்கு, இப்பவரைக்கும்...’’ விளக்கம் தருபவர், ரங்கமந்திரா அகாடமியின் நிறுவனர், நடனப் பயிற்சியாளர், பேராசிரியர்.

ஸ்வர்ணமால்யா
ஸ்வர்ணமால்யா

‘`இன்னிக்கு உள்ள இளையதலைமுறையினர் யாரும் ஒரே ஒரு விஷயத்துல மட்டும் கவனம் செலுத்தறதில்லை. பல வேலைகளைச் செய்யறாங்க. பன்முகத் திறமை உள்ளவங்களாலதான் இன்னிக்கு வெற்றிபெற முடியுது. இதை நான் பல வருஷங்களுக்கு முன்னாடியே ஆரம்பிச்சிட்டேன். என்னுடைய எல்லாப் பரிமாணங்களிலும் கலை இருக்கு.

2002-ம் வருஷம் சென்னையில இந்த அகாடமியை ஆரம்பிச்சேன். என் குரு கே.ஜே. சரஸா அம்மா தொடங்கி வெச்சாங்க. இது வெறும் நாட்டியப் பள்ளி மட்டும் இல்லை. பாரம்பர்யக் கலை களுக்கும் கலைஞர்களுக்கும் இடம் கொடுத்து, அந்தக் கலாசாரங்களைப் பாதுகாக்கும் ஓரிடம்னு சொல்லலாம்.

கிளாஸிகல் நடனமும் இசையும் மேல்தட்டு மக்களுக்கான கலைகளாதான் மக்கள் மனசுல பதிஞ்சிருக்கு. எனக்கும் அந்த ஆதங்கம் உண்டு. நான் என் மூணு வயசுலேருந்து பரத நாட்டியம் ஆடறேன். நான் என் சின்ன வயசுல நடனம் கத்துக்கிட்ட பாரம்பர்ய கலைஞர்களில் பலர் தேவதாசிப் பெண்களின் பரம்பரையிலிருந்து வந்தவங்க. பரதநாட்டியம்னு சொல்லும்போது உண்டாகிற மேல்தட்டு மனநிலை, சதிர்னு சொல்லும்போது வராது.

அலைபாயுதே 2, டைரக்‌ஷன் கனவு, ரகசிய சிநேகிதன்... மனம் திறக்கும் ஸ்வர்ணமால்யா

பாரம்பர்யக் கலைஞர்கள் எனக்கு அறிமுகமான பிறகு, ‘சதிர்’ என்ற பெயர்லதான் நடனம் கத்துக் கொடுக்கறேன். சதிர் என்பது தேவதாசிகள், பாரம்பர்ய நட்டுவனார் பரம்பரையில் இசைக் கலைஞர்களும் நடனக் கலைஞர்களும் பழகின கலை. அந்த மாதிரிக் கலைஞர்கள்தாம் இங்கே சொல்லித் தராங்க. இது மேல்தட்டு மக்களுக்கான பயிற்சிக்கூடம்னு ஓர் எண்ணம் வந்துடக் கூடாதுனுதான் அகாடமிக்குகூட என் பெயரை வைக்கலை’’

- சாமானியர்களுக்கும் கலையைக் கொண்டுசேர்க்கும் அக்கறை தெரிகிறது ஸ்வர்ணமால்யாவின் வார்த்தைகளில். பேசுவதோடு நிற்காமல், தன் மாணவர்களை வைத்தே தமிழில் கம்யூனிட்டி ரேடியோ நடத்துவது, நாட்டிய வரலாறு குறித்த தமிழ் செமினார்கள் நடத்துவது, எல்லோரையும் தமிழில் சிந்திக்க வைப்பது எனத் தமிழ் வளர்ப்பிலும் தீவிரமாக இருக்கிறார். ஆன்லைன் மூலம் கலை வளர்ப்பதில் இவரது அகாடமியும் விதிவிலக்கல்ல.

‘`லாக்டௌன் அறிவிக்கிறதுக்கு முன்னாடிதான் நான் ஆஸ்திரேலியாவிலேருந்து டான்ஸ் டூர் முடிச்சிட்டு இந்தியா வந்தேன். நான் இந்தியா வந்த பத்து மணி நேரத்துல இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ஸை எல்லாம் மூடிட்டாங்க. பத்து மணி நேரம் லேட்டா வந்திருந்தா நான் உலகத்துல வேற எங்கேயோ மாட்டிருந்திருப்பேன்.

என் ஸ்டூடன்ட்ஸுக்கு ஆன்லைன் மூலமா வகுப்புகள் எடுக்கலாம்னு யோசிச்சபோது, அதை ஏன் எல்லாருக்கும் இலவசமா கொடுக்கக் கூடாதுன்னு தோணுச்சு. மூணு மாசம் அப்படி வகுப்புகள் எடுத்தேன். கட்டடக்கலை படிக்கிறவங்க, டாக்டர்ஸ், போட்டோகிராபர்ஸ்னு பலரும் கலந்துகிட்டாங்க. உலகம் முழுக்க ஸ்டூடன்ட்ஸ் இருக்கிறதால 10 வருஷங்களுக்கு முன்னாடியே ஸ்கைப்ல வகுப்புகள் எடுக்க ஆரம்பிச்சிட்டோம். அதனால இப்போ பிரபலமாகியிருக்குற ஆன்லைன் வகுப்புகள் எங்களுக்குப் புதுசாவோ, சவாலாகவோ தெரியலை’’ என்பவர் ஒரு `யெஸ்' சொல்லியிருந்தால், இந்நேரம் நடிப்பில் செகண்டு இன்னிங்ஸை ஆரம்பித்திருப்பார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`ரொம்ப பிரபலமான ரெண்டு இயக்குநர்கள்கிட்டருந்து சமீபத்தில் வாய்ப்புகள் வந்துச்சு. ஏற்கெனவே கமிட் பண்ணியிருந்த என் அகாடமி வேலைகள்ல பிசியா இருந்ததால பண்ண முடியலை. ஒவ்வொரு காலகட்டத்துலயும் வாழ்க்கையில சாதிக்க வேண்டிய விஷயங்கள் எக்கச்சக்கமா இருக்கும். ஒரே திசையில போறதுதான் வெற்றினு நான் நினைக்க மாட்டேன். படிக்க வேண்டிய புத்தகங்கள், பார்க்க வேண்டிய உலகம், செய்ய வேண்டிய கலைத்துறை விஷயங்கள்னு நிறைய இருக்கு. நடிக்கவே மாட்டேன்னு சொல்லலை. நேரம் வரட்டும்'' என்று வாய்ப்புகளுக்கு ‘நோ’ சொன்னதன் காரணம் விளக்குகிறார்.

நடனக்குழுவினருடன்...
நடனக்குழுவினருடன்...

‘அலைபாயுதே’ வெளியாகி 20 வருட நிறைவு கடந்த சில மாதங் களுக்கு முன்பு கொண்டாடப் பட்டதையும், அதையொட்டி நடந்த மணிரத்னத்துடனான `லைவ்'வில் கலந்துகொண்டு பேசியதையும் சிலாகிக்கிறார். மணிரத்னம், சுஹாசினி, ஜோதிகா எனப் பலருடனும் தொடர்பில் இருக்கிறார். `அலைபாயுதே 2’ எடுக்கப்பட்டால் பூரணி கேரக்டரில் நஸ்ரியா அல்லது நித்யா மேனன் நடிக்கலாம் என சாய்ஸ் தருகிறார். வரலாற்றுக் கதை ஒன்றைப் படமாக்கும் ஆசை இருப்பதைச் சொல்கிறார்.

கல்யாணக் கேள்வியைத் தவிர்த்து பேட்டியை முடிப்பது விதிமீறல் அல்லவா...

கேட்டோம்.

‘`பிரபல பெண்ணியவாதி கமலா பசினும் நானும் ஃபிரெண்ட்ஸ்.  ‘கல்யாணம், கணவன் மனைவி... இந்த வார்த்தைகள்லயே பெண்ணை ஒடுக்கும் ஆதிக்க மனோபாவம் இருக்கு. அதனால பார்ட்னர்னு சொல்றதுதான் ரெண்டு பேரும் சமம்னு உணர்த்தும்’னு அவங்க சொல்வாங்க. அந்த வகையில எனக்கும் ஒரு பார்ட்னர் இருக்கார். அவர் யாருங்கிறது என்னைச் சுத்தியிருக்கிற எல்லாருக்கும் தெரியும். அது போதும்னு நினைக்கிறேன். அதைத் தாண்டி அதுல ரகசியமெல்லாம் இல்லை. அந்தரங்க விஷயங்களுக்குப் பதில் சொல்றதைத் தவிர்க்க நினைக்கிறேன். அது எனக்கான பர்சனல் ஸ்பேஸா இருக்கட்டுமே’’

- வேண்டுகோளுடன் விடை கொடுத்தார்.