தொடர்கள்
Published:Updated:

“தனுஷ், தனுஷா தெரியமாட்டார்!”

Dhanush
பிரீமியம் ஸ்டோரி
News
Dhanush

தனுஷ் - வெற்றிமாறன் - ஜி.வி.பிரகாஷ்குமார் கூட்டணியில் புதிய படத்தை நிகழ்த்திக் காட்டிய பெருமிதத்தில் இருக்கிறார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

`அசுரன்’ படத்தின் ரிலீஸ் வேலைகளில் அசுர வேகத்தில்இயங்கிக்கொண்டிருந்தவரை, கொஞ்சம் கூலாக அமரவைத்துப் பேசினோம்.

‘` ‘அசுர’னின் ஆரம்பப்புள்ளி எது?’’

‘` ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை நானும் தனுஷும் சேர்ந்து தயாரித்திருந்தோம். அந்தப் படத்தில் என்னுடைய வேலையையும் அணுகு முறையையும் பார்த்த தனுஷ், `நாம ரெண்டு பேரும் சேர்ந்து படங்கள் பண்ணலாமா சார்’னு கேட்டார். `நீங்க எப்போ சொன்னாலும் ஆரம்பிக்கலாம்’னு நான் சொன்னதும், ‘அப்போ `வடசென்னை’க்கு அடுத்த படமா ஆரம்பிச்சிடலாம் சார். வெற்றிமாறனை கமிட் பண்ணுங்க’ன்னு சொன்னார். இப்படி ஆரம்பமானதுதான் `அசுரன்’. ‘அசுர’னுக்குக் காரணமே தனுஷ்தான்.’’

‘` `அசுரன்’ எப்படி வந்திருக்கு?’’

``இந்தப் படத்துக்காக ஆபீஸிலேயே இருந்து வேலை பார்த்து, அங்கேயே தூங்கி வீட்டுக்குப் போகாமலேயே அவ்வளவு மெனக்கெட்டார் வெற்றிமாறன். நான் போகும்போது எந்த சீனுக்கான எடிட் போகுதோ அதை மட்டும் பார்த்துட்டு வருவேன். அப்படி நான் பார்த்த காட்சிகள் அனைத்துமே புதுசா இருந்துச்சு. இந்தப் படத்தின் தயாரிப்பாளரா இருந்துட்டு, இதை நான் சொல்லும்போது கொஞ்சம் கிளிஷேவாகத் தெரியும். ஆனால், நீங்கள் படம் பார்க்கும்போது நான் சொன்னதை உணருவீங்க. பூமணியோட `வெக்கை’ நாவலுக்குச் சிறந்த திரைக்கதையை எழுதியிருக்கார், வெற்றிமாறன்.’’

‘`ஒரு தயாரிப்பாளரா தனுஷைப் பற்றிச் சொல்லுங்க?’

``பயங்கர டைட் வொர்க்லதான் படத்தை எடுத்தோம். அதற்கெல்லாம் ஒத்துழைச்சு, தன்னைத்தானே வருத்தி தன்னுடைய முழு உழைப்பைக் கொடுத்திருக்கார் தனுஷ். இதற்கெல்லாம் மேல 36 வயதுடைய ஹீரோ, 48 வயதுடைய ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம். அதிலும் 20 வயதுடைய ஒரு பையனுக்கும், 16 வயதுடைய ஒரு பையனுக்கும் அப்பாவா நடிச்சிருக்கார். இந்தப் படம் பார்க்கும் போது எந்த இடத்திலும் தனுஷ், தனுஷா தெரிய மாட்டார்னு உறுதியாச் சொல்வேன்.’’

“தனுஷ், தனுஷா தெரியமாட்டார்!”

‘`ரஜினியை வைத்தும் படம் தயாரிச்சிருக்கீங்க; அவரின் மருமகன் தனுஷை வைத்தும் படம் தயாரிச்சி ருக்கீங்க. இரண்டு பேர்கிட்டேயும் ஒற்றுமை ஏதாவது இருக்கா..?’’

``இரண்டு பேரும் ஒப்பிட முடியாத அளவில் இருக்காங்கன்னு எனக்குத் தோணுது. ரஜினி சார் நடந்து போன வழியில் இப்போ தனுஷ் போயிட்டிருக்கார். ஏன்னா, அவருடைய செயல்பாடுகளைப் பார்க்கும்போது எனக்கு அப்படித்தான் தோணுது.’’

`` `அசுரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், `பல தயாரிப்பாளர்கள் எனக்கு சம்பளம் தரலை’ன்னு தனுஷ் சொன்னது சர்ச்சை ஆச்சு; அதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..?’’

‘`எந்தெந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் சம்பளம் தரலையோ அவங்க படங்களையும் தனுஷ் முடிச்சுக்கொடுத்திருக்கார். சம்பளத்தைக் காரணமா காட்டி அந்தப் படங்களைக் கிடப்புல போட்டு வைக்கலை. அதே மாதிரி அவர் நடிச்ச ஒரு படத்தின் ரிலீஸ் சமயத்தில், அந்தத் தயாரிப்பாளருக்கு இருந்த 9 கோடி கடனை தனுஷே ஏத்துக்கிட்டு, படத்தை ரிலீஸ் செய்ய வெச்சார். இப்போ சமீபமா அவரோட ஒரு படத்துக்கு பயங்கரமான சிக்கல்கள் வந்துச்சு. அதையெல்லாம் லண்டன் போறதுக்கு முன்னாடியே முடிச்சுக்கொடுத்துட்டுத்தான் கிளம்பினார். தனுஷோட இந்தக் குணத்தைப் பார்க்காமல், அவர் பேசியதை சர்ச்சையாக்குறாங்க.’’

“தனுஷ், தனுஷா தெரியமாட்டார்!”

‘`ஒரு படத்தில் நடிச்ச ஹீரோவுக்கு சம்பளம் வரலைன்னு அவர் மேடையில் சொல்லியதை, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராக எப்படிப் பார்க்கிறீங்க..?’’

``வரவுக்கு ஏற்ற செலவு பண்ணினால் இந்தப் பிரச்னைகள் எதுவுமே வராதுன்னு நினைக்கிறேன். முந்தைய படங்களினால் ஏற்பட்ட கடனை, இந்தப் படத்திலிருந்து எடுத்துக் கொடுத்தால், நாளைக்கு இந்தப் படத்துக்கும் பிரச்னை வரத்தானே செய்யும். அதனால், அந்தந்தப் படங்களின் பிரச்னையை, அந்தந்தப் படங்களிலேயே தீர்த்திட்டா, பல பிரச்னைகளைச் சரிசெய்யலாம்.’’

‘`தாணு - தனுஷ் காம்போவின் மற்ற படங்கள் எந்த நிலையில் இருக்கு?’’

``மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிற படத்துக்காக லண்டனில் கம்போஸிங் போயிட்டிருக்கு. சந்தோஷ் நாராயணனும் மாரியும் லண்டனில் வொர்க் பண்ணிட்டிருக்காங்க. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிற படத்துக்கும் இப்போ கம்போஸிங்தான் போயிட்டிருக்கு. ஷான் ரோல்டனும் செல்வாவும் அதில் பிஸியா இருக்காங்க.’’