சினிமா
Published:Updated:

"அன்பு என்பது பார்ட்னர்ஷிப் கேம்!"

டிடி
பிரீமியம் ஸ்டோரி
News
டிடி

படம்: கேமரா செந்தில்

ல்லோரும் 10 இயர் சேலஞ்ச் விட்டுக்கொண்டிருக்க டிவியில் 20 இயர் சேலஞ்ச் விடுகிறார் டிடி.

“கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் என்னோட 35-வது பிறந்தநாளைக் கொண்டாடினேன். ஸோ, தன்னால இந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக் வந்துடுச்சு. நிறைய பேர் முடியை கலர் பண்ணச் சொன்னாங்க. நம்ம அஜித் சார் எவ்ளோ அழகா, ஸ்மார்ட்டா இருக்கார்... ஸோ நம்மளும் அப்படியே சந்தோஷமா இருந்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன். இது என்னோட `பர்த்டே ரெசல்யூஷன்’னுகூட சொல்லலாம்’’ எனச் சிரிக்கிறார்.

``டிவி தொகுப்பாளினியா 20 ஆண்டுகள். முதல் 10, இரண்டாவது 10 ஆண்டுகள் எப்படி இருந்தன. இப்போது அடுத்த 10 ஆண்டுக்கான பிளான் என்ன?’’

``எனக்கு ஆரம்பம் செம ஈஸி. ரொம்ப சுலபமா ஃபீல்டுக்குள்ள வந்துட்டேன். ஒரு ஐடியாவும் இல்லாமதான் உள்ள வந்தேன். ஆனா, சொல்லிக்கொடுக்க சில நல்ல மனிதர்கள் என்னைச் சுத்தி இருந்தாங்க. சன் டிவியிலதான் முதல்ல ஷோ பண்ணினேன். அப்பதான் ஜேம்ஸ் வசந்தன் சார் பழக்கமானார். எனக்கு அப்போ 10 வயசு. ஈ.சி.ஆர்-ல ஒரு குட்டி ஷோவுக்காக ஸ்டேஜுக்குப் பின்னாடி நானும், சாரும் நின்னிட்டிருந்தோம். போய் தைரியமா பண்ணுன்னு சொன்னார். அங்க ஒரு 500 பேர் இருந்தாங்க. ஏதாவது பிரச்னைன்னா ஜேம்ஸ் சார் காப்பாத்திடுவார்ங்கிற நம்பிக்கையில அந்த ஷோவை ஆங்கர் பண்ணினேன். ஸ்டேஜை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு அவர்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன். இப்படித்தான் முதல் சகாப்தம் போச்சு.

டிடி
டிடி

அந்த சகாப்தத்தின் முடிவுலதான் ரியாலிட்டி ஷோக்கள் அறிமுகமாச்சு. நம்ம ஊர் பக்கம் அதுக்கான ரெஃபரென்ஸும் இல்லை, அர்த்தம்கூடத் தெரியாது. அப்புறம் நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்டு அதைப் பண்ண ஆரம்பிச்சோம். கோபி அண்ணா, தீபக்கூட பயணிக்க ஆரம்பிச்சேன். என் பாஸும் நிறைய விஷயங்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்தார். அடுத்தடுத்து டெக்னாலஜியும் அப்டேட் ஆக ஆரம்பிச்சது. ரெண்டாவது சகாப்தத்தில் கண்ணை மூடித் திறக்குறதுக்குள்ள நிறைய மாற்றங்கள் நடந்துருச்சு. ஆங்கரிங்கிறது ஒரு வேலை, ஒரு டெடிகேஷன்... அதை இன்னும் அழகுபடுத்துறதுக்கான வாய்ப்பு அந்தச் சமயம்தான் கிடைச்சது. நிறைய சீனியர்ஸ் உதவி பண்ணினாங்க.

நான் எப்பவுமே சொல்வேன். எத்தனை பேருக்குப் புரியும்னு தெரியலை. வரப்போற டிகேட், நிறைய விஷயங்கள்ல இணைந்து செயல்பட ஆரம்பிப்பாங்க. மில்லினியல்ல இருக்கிறதுக்கு வித்தியாசமான மைண்ட் செட் வேணும். ஏதோ ஒண்ணு பண்ணிட்டு, ஏமாத்துறக்கு வாய்ப்பே இருக்காது. அடுத்த டிகேட்ல இன்னும் இளைஞர்கள்கூட சேர்ந்து வேலை பார்க்கணும். பார்ப்போம்.’’

``சமீபமா நிறைய ட்ராவல் பண்றீங்களே?”

``சின்ன வயசுல யாராவது `நீ உலகம் முழுக்க சுத்துவ’ன்னு சொல்லியிருந்தா நான் நம்பியிருக்க மாட்டேன். ரொம்ப ஆவரேஜான ஃபேமிலிதான். அப்படியே மெதுவா ஆரம்பிச்சதுதான் இந்த ட்ராவல். `செல்வி’ சீரியலுக்காக இலங்கை போயிருந்தது என்னோட முதல் ட்ராவல். ஒரு சில இடம்னு இல்லாம இலங்கையில இருக்கிற நிறைய இடங்களுக்குப் போனோம். முதல்ல வெளிநாடுகளுக்குப் போனா அங்க உள்ள வேலைகளை முடிச்சிட்டு ஊருக்கு வந்துடுவேன். அப்புறம்தான் நிறைய இடங்களைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். நம்ம மண் சாராத மக்கள்கிட்ட பேசும்போதும், பழகும்போது நம்ம மைண்ட் ஓப்பன் அப் ஆகும் பாருங்க... அதை அனுபவிச்சாதான் புரியும்.”

‘`சீரியல், சினிமா, ஆங்கரிங்னு எல்லாத்தையும் இப்ப குறைச்சிட்ட மாதிரி தெரியுதே?’’

``உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு வாய்ப்புகள் ரொம்ப வரவே இல்லை. சில பேர், `நீங்க ஸ்டேஜ் ஷோக்கள் பண்றது இல்லையாமே. ஃபாரின்ல மட்டும்தான் இருக்கீங்களாம்’னு கேட்பாங்க. `அடப்பாவிங்களா, சென்னையில எங்க வீட்டுலதான்டா உட்கார்ந்திட்டிருக்கேன். ஏன்டா இப்படிப் பழிபோடுறீங்க’ன்னு நினைப்பேன். மீறி சில பட வாய்ப்புகள் வந்தது. அப்போ எனக்கு டிவியில நிறைய கமிட்மென்ட் இருந்ததனால பண்ண முடியலை. அப்புறம் ஒரு சில பிளாக்பஸ்டர் படங்கள்கூட மிஸ்ஸாச்சு. அந்தச் சமயம் கொஞ்சம் ஃபீல் பண்ணினேன். ஆனா, என்ன பண்ண முடியும்.

டிடி
டிடி

இதுக்கு நடுவுல `பவர் பாண்டி’யில் நடிச்சிருந்தேன். நான் ஹாரிங்டன் ரோடு சிக்னல்ல இருந்தப்ப தனுஷ் சார் போன் பண்ணி, `நான் படம் பண்றேன்ல, அதுல உனக்கு ஒரு ரோல் இருக்கு பண்றியாடா’ன்னு கேட்டார். `அதுல நடக்குற நல்லது கெட்டதை நீங்களே பார்த்துக்குவீங்களா சார்’ன்னு கேட்டேன். `நீ ஓகே மட்டும் சொல்லு. நான் பார்த்துக்குறேன்’னு சொன்னார். அப்படித்தான் அந்தப் படத்துக்குள்ள வந்தேன். கொஞ்ச சீன்ஸ்ல நடிச்சிருந்தாலும் நிறைய பேர் பாராட்டினாங்க. அதே மாதிரிதான் கௌதம் சார் பட வாய்ப்பும் வந்தது. `உங்ககிட்ட நடிப்பு வரலைன்னா பரவாயில்ல. நான் அதை வாங்கிக்குறேன். நீங்க நடிக்க மட்டும் வாங்க’ன்னு சொன்னார். அவரை நம்பி `துருவ நட்சத்திர’த்துக்கு வந்தேன். படமும் சீக்கிரம் ரிலீஸாகும்னு எதிர்பார்க்குறேன்.”

``இப்ப உங்க ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன?”

``உண்மையான அன்பு இருந்தா எதிர்ல இருக்கிறவங்களோட உணர்வுகளைக் கட்டாயம் புரிஞ்சிக்கலாம். முழுக்கவே இது பார்ட்னர்ஷிப் கேம்தான். சில நாள் நமக்கு அன்பு தேவைப்படும், அவங்க கொடுக்கணும். சில சமயம் அவங்களுக்கு அன்பு தேவைப்படும், நாம கொடுக்கணும். எதிர்ல இருக்கிறவங்க நல்ல மனிதரா இருக்க என்னால முடிஞ்ச சப்போர்ட்டைக் கொடுப்பேன். அதே மாதிரிதான் அந்தப் பக்கம் இருக்கிறவங்களுக்கும். எல்லாத்தையும் டைம்தான் முடிவு பண்ணும். இப்போதைக்கு நான் சிங்கிள். கோயிங் வித் த ஃப்ளோதான்.”

``முந்தைய ரிலேஷன்ஷிப்ல அந்தப் புரிந்துணர்வு இல்லாமப்போயிடுச்சா?’’

``ரிலேஷன்ஷிப்புங்கிறது ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம். சூழ்நிலை காரணமா லவ் உடையவும் செய்யும். சில பேர் நம்மளை சப்போர்ட் பண்ணுவாங்க, சிலர் நம்மளை கீழ தள்ளிடுவாங்க. அந்தப் பிரிவு கண்டிப்பா கஷ்டப்படுத்தும்.

டிடி
டிடி

அதைக் கொஞ்ச நாள் நம்மகூட கொண்டு வந்துட்டு, அதுக்கப்புறம் தள்ளி வெச்சிட்டு அடுத்தது என்னன்னு பார்த்துட்டுப் போயிடலாம். அப்படித்தான் எல்லோரும் போகணும்னு நினைக்கிறேன். இது மாதிரிதான் நானும் பண்ணினேன். அவங்களோட வாழ்க்கையில யார் வேணாலும் இருக்கலாம். அவங்க வருங்கால வாழ்க்கைக்கு `ஆல் த பெஸ்ட்’ சொல்லிட்டு, அதைப் பத்தி எதுவும் யோசிக்கிறதும் இல்லை, பேசுறதும் கிடையாது. விவாகரத்து கிடைக்கிற நாள் அன்னைக்கு கோர்ட்டுக்குக் காலையில போகணும்னுதான் உள்ள ஓடிட்டு இருந்தது. கடைசியா அனுப்பின மெசேஜுக்குப் பிறகு இப்ப வரைக்கும் எதுவும் நான் அனுப்பல. பேசல, நேர்ல பார்க்கல. என்ன ஆனாலும் Life has to go on. எனக்குக் கிடைச்ச வாழ்க்கைக்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக்குறேன்.’’