Published:Updated:

“குஷ்பு நடிக்கலைனா சின்னத்தம்பியே எடுத்திருக்க மாட்டேன்!”

பி.வாசு
பிரீமியம் ஸ்டோரி
News
பி.வாசு

‘சந்திரமுகி’ என்னைப் பொறுத்தவரை ரீமேக் இல்லை.

“சின்னதம்பி மாதிரி ஊரெல்லாம் சினிமால அதுவும் தமிழ் சினிமால மட்டுமே சாத்தியம்” என ஒரு ட்வீட் உண்டு. எப்படி இப்படியொரு கற்பனை வந்ததென அதை இயக்குநர் பி.வாசுவிடமே கேட்க முடிவு செய்தேன். தலைமுறைகள் பல தாண்டியும் சூப்பர் ஹிட்ஸ் கொடுக்கும் தமிழ் சினிமாவின் சூப்பர் சீனியர் இயக்குநர் பி.வாசு. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அப்டேட்டட் கதைகளுடன் வந்து அசரடிக்கும் இவர் இப்போது ராகவா லாரன்ஸோடு இணைந்து சந்திரமுகி-2 உடன் வருகிறார்.

“உங்கள் சினிமா வாழ்க்கையின் திருப்புமுனை ‘சின்னதம்பி’ கதை எப்படி உருவாச்சு?”

“ஷூட்டிங்குக்காகப் போன இடத்துல அரண்மனை மாதிரியான அழகான வீடுகள் இருந்தது. அந்த அரண்மனையோட ராஜா ஷூட்டிங் பார்க்க வந்திருந்தார். அப்போ அங்க ஜன்னல் வழியா ஒரு பெண் குரல் கேட்டுச்சு. உடனே ராஜா, அந்தக் குரலுக்கு ஜன்னல் வழியா போய் பதில் சொல்லிட்டு விட்டுட்டார். அந்தப் பெண் வெளிய வரவே இல்லை. ‘என்ன வாய்ஸ் மட்டும்தான் வருது’ன்னு கேட்டேன். ‘வெளி ஆளுங்க முன்னாடி ராஜா வீட்டுப் பொண்ணுங்க யாரும் வர மாட்டாங்க’ன்னு சொன்னாங்க. அதுக்கு அப்புறம் வேறொரு இடத்துக்குப் போனப்போ அங்கே தனிப்பட்ட முறையில் ஒரு பாதை இருந்தது. இது என்னன்னு கேட்டப்போ, ‘ராஜா வீட்டுப் பொண்ணுங்க எல்லாரும் இந்த வழியாதான் கோயிலுக்குப் போவாங்க’ன்னு பதில் சொன்னாங்க. கோயில்லகூட ராஜா வீட்டுப் பொண்ணுங்க சாமி கும்பிட்டுட்டுப் போற வரைக்கும் யாரும் வரமாட்டாங்களாம். இதெல்லாம் ஆச்சர்யத்தைக் கொடுத்துச்சு. இந்த கான்செப்ட்டை வெச்சிக்கிட்டு ஒரு படம் பண்ணுனா எப்படியிருக்கும்னு யோசிச்சேன். அதுதான் ‘சின்னதம்பி.’

குஷ்பு ,  பிரபு
குஷ்பு , பிரபு

படத்துல இளையராஜா மாதிரியான ஒரு இசையமைப்பாளர் இருக்குறப்போ ஹீரோ பாடகரா இருந்தா நல்லாருக்கும்னு நினைச்சுக்கிட்டுதான் சின்னதம்பி கேரக்டரை பாட்டுப் பாடுற மாதிரி வடிவமைச்சேன்.”

‘சின்னதம்பி’யோட வெற்றிக்கான மிக முக்கியமான காரணம் காஸ்ட்டிங். பிரபு, குஷ்பு, கவுண்டமணி, மனோரமான்னு பிரமாதமான நடிகர்கள். எப்படி முடிவு பண்ணுனீங்க?”

“1988-ல வெளியான ‘என் தங்கச்சி படிச்சவ’ படத்தோட முதல் பாதியில பிரபு ரொம்ப அப்பாவியான கேரக்டர் பண்ணியிருப்பார். அந்தமாதிரி கேரக்டர் பிரபுவுக்கு நல்லா வரும். அதனால ‘சின்னதம்பி’ கேரக்டர்ல அவரை ஃபிக்ஸ் பண்ணிட்டேன். ஸ்கிரிப்ட் எழுதிட்டிருக்கும்போதே ‘நடிகன்’ படம் டைரக்ட் பண்ணிட்டிருந்தேன். ஒரு சீன்ல சத்யராஜ் சித்தப்பா வேஷம் போட்டுட்டு வர்றப்போ குஷ்பு சேலை கட்டிட்டு அடக்க ஒடுக்கமான பொண்ணா வந்து நிப்பாங்க. இந்த சீன் எடுக்கும்போது குஷ்புதான் ‘சின்னதம்பி’ ஹீரோயின்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா, குஷ்புக்கு அப்போ தமிழ் சரியாப் பேச வராது. இந்தி, இங்கிலீஷ் கலந்த தமிழ்தான் பேசுவாங்க. அவங்களுக்கு போன் பண்ணி படத்தோட கதையைச் சொன்னேன்.

பி.வாசு
பி.வாசு

‘சார் சூப்பரா இருக்கு. இந்த மாதிரி கதை கிடைக்காது. நிச்சயமா பண்றேன்’னு சொன்னாங்க. ஆனா, படத்தோட தயாரிப்பாளருக்கு பிரபு - குஷ்பு ஜோடியில அதுவரைக்கும் சேர்ந்து நடிச்ச எந்தப் படமும் சரியாப் போகாததால தயக்கம். ‘குஷ்பு இல்லனா இந்தப் படமே நான் எடுக்கல’ன்னு சொல்லிட்டேன்.”

“ ‘சின்னதம்பி’ படத்துல கவுண்டமணி கேரக்டர் பிரமாதமா வொர்க் அவுட் ஆகியிருக்கும். அந்த கேரக்டருக்கான ஐடியா எப்படிப் பிடிச்சீங்க?”

“ஒரு படத்துல சிவாஜி சார் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவரா நடிச்சிருப்பார். இந்தப் படம் கொஞ்சம் சீரியஸ் சப்ஜெக்ட். இந்தப் படம் பற்றி நானும் காமெடி ஸ்கிரிப்ட் ரைட்டர் வீரப்பன் சாரும் பேசிட்டிருந்தப்போ, இதைக் கொஞ்சம் காமெடியா மாத்தி கவுண்டமணி சார் பண்ணுனா எப்படியிருக்கும்னு ஐடியா பிடிச்சோம்.

ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்

கிளைமாக்ஸ் காட்சில வில்லன்கள் ஒரு மனநோயாளியை வெச்சு மனோரமாவுக்குத் தாலி கட்டச் சொல்ற மாதிரியான ஒரு கொடூரமான காட்சி வெச்சிருப்பேன். இதுக்குப் பின்னாடியும் ஒரு கதை இருக்கு. அந்த நேரத்துல ‘ஆனந்த விகடன்’ல கொடூரமான முறையில் கொலை பண்ணுன கொலையாளிகள் பற்றிய தொடர் வந்துச்சு. இதுல கொலையாளியா இருந்தவங்க யாருக்குமே அம்மா இல்லை.

அம்மா இல்லாத குழந்தைகள்தான் இப்படிக் கொடூரமான மனநிலைக்குப் போயிடுறாங்க. அதனால சின்னதம்பி வில்லன்கள் கொடூரமானவங்களா இருக்காங்கன்னா அவங்களுக்கும் இப்படி ஒரு பின்னணி இருக்கணும்னு தோணுச்சு. அதனால ராதாரவியோட அம்மா இறந்துட்டதா கதை எழுதினேன். க்ளைமாக்ஸ்ல ராதாரவி, மனோரமாகிட்ட ‘எங்களுக்கு ஒரு அம்மா வேணும்... நீங்க வீட்டுக்கு வாங்க’ன்னு சொல்றமாதிரிதான் படத்தை முடிச்சிருப்பேன்.”

“ ‘பாபா’ தோல்விக்குப்பிறகு ரஜினிக்கு ஒரு கம்பேக் கொடுத்த படம் ‘சந்திரமுகி.’ இப்ப மீண்டும் செகண்ட் பார்ட்டோட வர்றீங்க... என்ன ஸ்பெஷல்?”

‘` ‘சந்திரமுகி’ படம் என்னைப் பொறுத்தவரைக்கும் ரீமேக் இல்லை. அந்தக் கதையை ரீ-ரைட் பண்ணினேன். கதையை வாங்குறப்போகூட இப்படிப் பண்ணுவேன்னு சொல்லித்தான் வாங்கினேன். க்ளைமாக்ஸை மொத்தமாவே மாத்திட்டேன்.

சந்திரமுகி படம்
சந்திரமுகி படம்

சந்திரமுகி 2 எடுக்கணும்னு ரொம்ப நாளா எனக்கும் ரஜினி சாருக்கும் ஆசை. இந்தப் படத்துல ரஜினி சார் மனோதத்துவ நிபுணரா வந்து கங்காவைக் குணப்படுத்துவார். இதுல பேய் இல்லை. தன்னோட சின்ன வயசுல மனதளவுல பாதிக்கப்பட்ட கங்கா, ‘சந்திரமுகி’ பற்றிப் படிக்குறப்போ இந்த கேரக்டரை உள்வாங்கிட்டு அப்படியே மாறிப் போயிருவா. இது கங்காவுடைய கற்பனை.

நயன்தாரா, ரஜினி, ஜோதிகா
நயன்தாரா, ரஜினி, ஜோதிகா

ஏற்கெனவே கங்காவுக்கு இப்படியொரு மன நோய் இருக்கு. இதை ரஜினி சார் சரி பண்ணுவார். இந்தப் படத்துல சந்திரமுகி, வேட்டையன் கேரக்டர்கள் பற்றி முழுசா சொல்லல. இவங்க ரெண்டு பேரும் தனிப்பட்ட கேரக்டர்ஸ். இவங்க யார், எங்கே இருந்து வந்தாங்க, இவங்களுக்கு என்ன வேணும், இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு பல கதைகள் யோசிச்சேன். இந்தக் கதைகள் எல்லாம் ஏன் பார்ட் 2, 3, 4-ன்னு வரக்கூடாதுன்னு நினைச்சு பார்ட் 2-க்கான கதை ரெடி பண்ணியிருக்கேன்.

இப்போ அந்த அரண்மனைக்குப் புதுக் குடும்பம் வருது. அப்போ என்ன நடக்கும்? இதைத்தான் ‘சந்திரமுகி 2’ல சொல்லப்போறேன். ராகவா லாரன்ஸ் ரசிகர்களுக்கு ஏத்த மாதிரியான படமா இது இருக்கும். ஏன்னா, ‘சந்திரமுகி’ படத்தோட திரைக்கதையை ரஜினிக்கு ஏத்த மாதிரிதான் எழுதியிருந்தேன். ஒரிஜினல் வெர்ஷன்ல வடிவேல், ஷீலா அம்மா கேரக்டர்லாம் கிடையாது.

சந்திரமுகி
சந்திரமுகி

அதேபோல சந்திரமுகி- 2லேயும் லாரன்ஸுக்கு ஏத்த மாதிரி கதை, கேரக்டர்ஸ் பண்ணியிருக்கேன். கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழல் சரியானதும் ஷூட்டிங் தொடங்கிடும்.”

வேட்டையன் ரிட்டன்ஸ்!