Published:Updated:

"'பேராண்மை' மாதிரி இன்னொரு படம் நடிக்கணும்!"

குடும்பத்துடன் ஜெயம் ரவி
பிரீமியம் ஸ்டோரி
News
குடும்பத்துடன் ஜெயம் ரவி

விவசாயிகளோட பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்ற படமா ‘பூமி’ இருக்கும்.

தொடங்கும்போதே ‘ஜெயம்’ என்னும் டைட்டிலுடன் தன் பயணத்தைத் தொடங்கியவர். ரவி, ‘ஜெயம்’ ரவியாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. ஆக்‌ஷன், காமெடி, சமூகச் சிந்தனைப்படம், சயின்ஸ் ஃபிக்‌ஷன் என்று வெரைட்டியாக நடித்த திருப்தி முகத்தில் தெரிகிறது, அத்துடன் 25வது படமான ‘பூமி’ எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும்கூட.

‘`உங்களின் 25-வது படமாக ‘பூமி’ இருக்க வேண்டும் என எப்படி முடிவெடுத்தீங்க?’’

‘`எனக்கு இந்த நம்பர் கேம் மேல நம்பிக்கையில்லை. எத்தனையாவது படமா இருந்தாலும் அது எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி இருக்கணும்னுதான், எல்லாப் படத்தையும் என்னுடைய முதல் படமா நினைச்சு வேலை பார்த்திட்டிருக்கேன். ‘பூமி’ படத்தைப் பொறுத்தவரைக்கும், இது விவசாயிகளைப் பற்றிப் பேசுற படமா இருக்கும். இதுவரைக்கும் விவசாயத்தை மையமா வெச்சு வந்த படங்கள், அவங்களோட பிரச்னைகளை மேலோட்டமா சொன்ன மாதிரியும், அதுக்கு ஒரு தீர்வு சொல்லாத மாதிரியும் இருந்துச்சுன்னு நான் நினைக்கிறேன். விவசாயிகளோட பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்ற படமா ‘பூமி’ இருக்கும். அதுமட்டுமல்லாமல் தலைமுறை, தலைமுறையா விவசாயம் பண்ணிட்டு இருந்தவங்களோட பசங்க, விவசாயம் லாபகரமான தொழில் இல்லைன்னு வேற வேலைக்குப்போக ஆரம்பிச்சிருக்காங்க. இப்போ இருக்கிற தலைமுறைக்கு விவசாயத்தோட முக்கியத்துவத்தைச் சொல்ற படமாவும் இது இருக்கும்.’’

‘`இயக்குநர் லக்‌ஷ்மண் அவர் இயக்கிய மூன்று படங்களையுமே உங்களை ஹீரோவா வெச்சுதான் எடுத்திருக்காரே?’’

``லக்‌ஷ்மண் எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான டைரக்டர். எனக்கு ஒரு ஹிட் கட்டாயமாத் தேவைப்பட்ட நேரத்தில் ‘ரோமியோ ஜூலியட்’ கொடுத்தவர். அதனாலேயே எனக்கு மறக்க முடியாத ஒரு இயக்குநராவும், என்னோட பிரதராவும் இருக்கார். நானும் சில முறை அவர்கிட்ட, ‘வேற பெரிய ஹீரோக்களை வெச்சுப் படம் பண்ணலாமே’ன்னு கேட்பேன். ‘எனக்கு நீங்கதான் பெரிய ஹீரோ’ன்னு சொல்லுவார். அவர் ஒவ்வொரு முறையும் எனக்குன்னு கொண்டுவர ஸ்கிரிப்ட்தான் எங்களைத் தொடர்ந்து படங்கள் பண்ண வெச்சிட்டேயிருக்கு. ‘பூமி’ படத்துக்காகவும் மிகப்பெரிய உழைப்பைப் போட்டிருக்கார். இதுவரை அவர் இயக்கிய படங்கள் ஜாலி டோன்ல இருக்கும். இது கொஞ்சம் சீரியஸான படம்.’’

குடும்பத்துடன் ஜெயம் ரவி
குடும்பத்துடன் ஜெயம் ரவி

‘`மணி ரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்துல நடிக்கிற அனுபவம் எப்படியிருக்கு?’’

“எல்லா இயக்குநர்களும் ஒரு படத்தை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அதை எப்படியெல்லாம் எடுக்கணும்னு மனசுக்குள்ள ஆசைப்படுவாங்கன்னு அவங்க சொல்லிக்கேட்டிருக்கேன். ஆனா அதை அவங்க ஸ்பாட்ல சரியா எடுத்தாங்களா, அதுக்கான முழு முயற்சியும் பண்ணு னாங்களான்னு தெரியாது. ஆனா, மணி சாரைப் பொறுத்தவரைக்கும் அவர் பெருசா யோசிக்கிற எல்லாத்தையும் திரையில் கொண்டு வந்திடணும்னு அவ்வளவு அதிகமா உழைக்கிறார். `டிக் டிக் டிக்’ படத்துக்கு அப்புறமா `பொன்னியின் செல்வன்’ படத்துலயும் நானும் என் மகன் ஆரவ்வும் சேர்ந்து நடிக்கிற மாதிரி இருந்தது. ஆனா, ஆரவ்வுக்கு ஸ்கூல், எக்ஸாம்னு டேட்ஸ் க்ளாஷ் ஆனதால அது சரியா அமையாமப் போச்சு.”

‘` `தனி ஒருவன் - 2’ படத்தை எப்போ ஆரம்பிக்கப்போறீங்க?’’

‘`அண்ணா ஸ்கிரிப்ட்டை எழுதி முடிச்சிட்டார். எனக்கு சில கமிட்மென்ட்ஸ் இருக்கிறதனால, அதை முடிச்சதும் ‘தனி ஒருவன் - 2’ படத்தை ஸ்டார்ட் பண்ணிடுவோம். முதல் பார்ட்டில் பெருசா பேசப்பட்ட அர்விந்த் சுவாமி சார் கேரக்டரைவிட, இந்தப் படத்தோட வில்லன் கேரக்டர் இன்னும் பெருசா இருக்கும்.’’

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

‘`இதுவரைக்கும் நீங்க பண்ணின படங்களில் உங்க அண்ணனையும் சேர்த்து மொத்தம் மூணு இயக்குநர்களோடுதான் மறுபடியும் வேலை பார்த்திருக்கீங்க. 25 படங்களில் அதிக இயக்குநர்களோடு வேலை பார்த்தது திட்டமிட்டதா?’’

‘`ஸ்கிரிப்ட்தான் அதைத் தீர்மானிக்கும். இதுவரைக்கும் நான் அண்ணாவைத் தவிர ரிப்பீட் பண்ணின இயக்குநர்கள் சக்தி செளந்தர் ராஜன், லக்‌ஷ்மண். இவங்களும் ரெண்டாவது படத்துக்காக என்கிட்ட வந்தப்போ, ‘ஒரு படம் ஹிட் கொடுத்ததுக்கு அப்புறம் ரெண்டாவது படம் சேர்ந்து பண்றது முக்கியமான விஷயம்தான். ஆனால், அதைவிட என்ன பண்ணப் போறோம் கிறதுதான் முக்கியம். அதனால, அடுத்த படம் பண்ணணும்னு நினைக்காமல், முதல்ல பண்ணுனதைவிட ரெண்டு மடங்கு சிறப்பா பண்ணனும்னு யோசிங்க’ன்னு சொன்னேன். அவங்களும் அதுக்கு ஏற்றமாதிரியான ஸ்கிரிப்ட் கொண்டுவந்ததனாலதான், அது நடந்துச்சு. இதுவரைக்கும் பெருசா ஜானர்களையும் நான் ரிப்பீட் பண்ணதில்லை. என்னோட கரியரில் இயல்பாவே வேற, வேற மாதிரியான ஜானர்களாகத்தான் வந்துட்டு இருக்கு. நான் பண்ணின ஒரு ஜானரையே திரும்பப் பண்ணணும்னு நினைக்கிறேன்னா, `பேராண்மை’ மாதிரியான ஒரு படத்தைத்தான் இன்னொரு முறை பண்ணணும்னு ஆசைப்படுறேன்.’’

‘`உங்களுக்கு இயக்குநர் ஆகணும்கிற ஆசை இருக்குன்னு பல பேட்டிகளில் சொல்லியிருக்கீங்க. இந்த லாக்டெளன் நாள்களில் அதுக்கான கதை எதுவும் எழுதினீங்களா?’’

‘`ஆமாம்... இதுவரைக்கும் யோசனைகளில் மட்டுமே இருந்த என் கதைகளுக்கு இப்போ எழுத்து வடிவம் கொடுத்திருக்கேன். இந்த ஃப்ரீ டைமில் இன்னும் புதுப் புது ஐடியாக்கள் வந்துச்சு. அதையும் எழுதி வெச்சிருக்கேன். அதுக்கான வேலைகளையும் தொடர்ந்து பார்ப்பேன். ஆனால், அது எப்போ சாத்தியமாகும்னு தெரியலை. 40 வயசோ, 50 வயசோ எப்போ அதுக்கான நேரம் வந்தாலும், கட்டாயம் படம் இயக்குவேன்.’’

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

‘`தமிழ் சினிமாவைத் தாண்டி மற்ற மொழி ஹீரோக்களில் யாருடைய நடிப்பு உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?’’

‘`மலையாளத்தில் பிரித்விராஜ், தெலுங்குல விஜய் தேவரகொண்டா, கன்னடத்துல `கே.ஜி.எஃப்’ ஹீரோ யஷ் எல்லாம் ரொம்ப நல்லா நடிக்கிறாங்க. இந்தியில் ரன்பீர் கபூர் பிடிக்கும்.’’

‘` ‘அடங்க மறு’ படத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு எதிரா பேசியிருப்பீங்க. அந்தப் படத்துக்குப் பிறகுதான் பொள்ளாச்சி சம்பவம் நடந்தது. உங்க திரைப்படத்தைப் போலவே ஒரு சம்பவம் சமூகத்தில் நடந்ததைப் பார்த்தப்போ என்ன நினைச்சீங்க?’’

‘`பயங்கர கோபம் வந்துச்சு. இந்த மாதிரியான குற்றங் களுக்குக் கொடுக்கப் படுற தண்டனைகளைக் கடுமை யாக்கணும்னு தோணுச்சு. இந்தப் பிரச்னை இன்னும் வளர்ந்துட்டே போச்சுன்னா, அது நம்ம நாட்டுக்கே அவமானம்.’’

‘` ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு முன்னாடி நீங்க நடிக்கிறதா இருந்த ‘சங்கமித்ரா’ படம் நின்றுபோனதற்கு என்ன காரணம்?’’

``ஒரு பெரிய பாசிட்டிவ் நோட்லதான் அந்தப் படத்தை ஆரம்பிச்சோம். சுந்தர்.சி சார்கூட நான் வொர்க் பண்ணுனதே இல்லை. ‘இதுதான் அவரோடு எனக்கு முதல் படம்; ஆர்யாகூட நடிக்கப் போறோம்’னு ஆசையா ஆரம்பிச்ச படம். ஆனால், தயாரிப்பாளருக்குச் சில சிக்கல்கள் இருந்ததனால, இப்போதைக்கு ஸ்டாப் பண்ணிடலாம்னு சொல்லிட் டாங்க. சீக்கிரமே இந்தப் படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்து வாங்கங்கிற நம்பிக்கையில் இருக்கேன். ஏன்னா, படத்தோட ஸ்கிரிப்ட் ரொம்ப தரமா இருக்கும். எவ்வளவு சீக்கிரம் அதை ஆரம்பிக்கிறாங்களோ, அதில் நடிக்கிறதுக்கு நான் தயாரா இருக்கேன்.’’

‘`லாக்டெளன் நாள்களில் வீட்டு வேலைகளெல்லாம் செய்றீங்களா?’’

``என் ரெண்டு பசங்களும் நாங்க சொல்றதைக் கேட்டுக்குற பசங்களா இருக்கிறதனால, சமாளிக்கிறது கொஞ்சம் ஈசியா இருக்கு. ஆனால், அவங்களாலும் வீட்டுக் குள்ளேயே எவ்வளவு நேரம் இருக்க முடியும். சம்மர் வந்தாலே எதாவது ஊருக்கு டூர் போயிடுவோம். இப்போ அதுவும் பண்ண முடியாத நிலைமை. உலகமே இப்படித்தான் இருக்குன்னு சொன்னா, புரிஞ்சிக்கிறாங்க. கொஞ்ச நாள் அவங்களுக்கு ஆன்லைன் க்ளாஸ் நடந்துட்டு இருந்ததனால, அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருந்தேன். மத்த நேரம் பசங்களோடு ஃபுட் பால் விளையாடுறேன். ஒரு பக்கம் கொரோனா, ஷூட்டிங் இல்லைன்னு கஷ்டமா இருந்தாலும், குடும்பத்தோட நேரம் செலவழிக்கிறதுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாவும் இருக்கு.’’

‘`உங்களோடு நடிக்கிற ஹீரோயின்ஸ் எல்லாருமே உங்க மனைவி ஆர்த்திக்கும் நல்ல ஃப்ரெண்டாகிடுவாங்களாமே?’’

``நானே ஃப்ரெண்ட்லி டைப்தான். ஒருத்தரைப் பற்றித் தெரியாதவரைக்கும்தான் அதிகம் பேசாமல் இருப்பேன். அவங்களைப் பற்றி நல்லாத் தெரிஞ்சுக்கிட்டேன்னா, ஃபிரெண்ட்லியா பழக ஆரம்பிச்சிடுவேன். அதுக்கு அடுத்த ஸ்டெப், மனைவியிடம் அவங்களை அறிமுகப் படுத்துறதுதான். அதுக்கப்புறம் அவங்க பேச ஆரம்பிடுவாங்க; நம்மளை மறந்திடுவாங்க. என்கூட நடிச்ச ஹீரோயின்ஸ் பல பேர் இப்போ வரைக்கும் என் மனைவி ஆர்த்தியுடன் ஃபிரெண்டா இருக்காங்க. எல்லாரும் ஒரே ஏஜ் குரூப்பா இருக்குறதனால, அவங்களுக்குள்ள நிறைய ஷேர் பண்ணிப்பாங்க.’’

‘`அட்லி தயாரிப்புல நீங்க அடுத்து நடிக்கப்போறதா செய்திகள் வருதே உண்மையா?’’

‘`இப்ப வரைக்கும் அப்படி எதுவும் இல்லை. அட்லியை ஃபிரெண்ட்லியாத்தான் சந்திச்சேன். அப்போ, ‘என்னோட அசிஸ்டென்ட் உங்களுக்கு ஒரு கதை வெச்சிருக்கார்’னு அவரை அறிமுகப்படுத்தினார். ‘கதை பிடிச்சா நிச்சயம் பண்ணுறேன்’னு சொன்னேன். அதுக்குள்ள கொரோனா பிரச்னை வந்ததால, அதுவும் அப்படியே நிக்குது. மத்தபடி இந்தப் படத்தை அட்லி தயாரிப்புல பண்ணுறதைப் பற்றியெல்லாம் நாங்க பேசவேயில்லை.’’

‘`17 வருடப் பயணம்... கடந்து வந்த பாதை எப்படியிருக்கு?’’

‘`ரொம்ப அழகா, திருப்தியா இருக்கு. இந்த 17 வருஷத்துல, `ஐயய்யோ அதைப் பண்ணாம விட்டுட்டோமே, இதை ஏன் பண்ணுனோம்’னு எந்தவிதமான எண்ணமும் எனக்கு இல்லை. எதுவா இருந்தாலும் அது என்னோட முடிவு. அப்பா - அண்ணனோட நல்ல வழிகாட்டுதல் கிடைச்சது. சில சமயங்களில் அவங்க வேணாம்னு சொல்லியும் சில விஷயங்கள் நான் பண்ணி னேன். ‘பூலோகம்’ படம் பண்ணும்போது, ‘நீ எப்படி நார்த் மெட்ராஸ் ஆளா நடிப்ப, செட்டாகுமா’ன்னு கேட்டாங்க. `நான் நடிச்சுக் காட்டுறேன் பாருங்க’ன்னு சொல்லிட்டுப் பண்ணினேன். அந்தப் படத்துக்காக எனக்கு விகடன் விருது கிடைச்சது. அதே வருஷம்தான் `தனி ஒருவன்’ படமும் வந்துச்சு.

பல விருதுகள் எனக்கு `தனி ஒருவன்’ படத்துக்காகக் கிடைச்சப்போ, விகடன் விருது மட்டும் `பூலோகம்’ படத்துக்காகக் கிடைச்சதை நான் மறக்கவே மாட்டேன். அதுல என் தனித்தன்மை தெரிஞ்சிருக்கும்.

அதேமாதிரி முதல் படத்தில் இருந்து என்னை ஏத்துக்கிட்ட என் ரசிகர்களுக்குப் பெரிய நன்றி சொல்லணும். என் வேலைக்கு நான் உண்மையா இருக்கேன்; தொடர்ந்து இருப்பேன்.’’