Published:Updated:

“அஜித்தைப் பாட வைக்க முயற்சி செய்தேன்!”

தேவா
பிரீமியம் ஸ்டோரி
News
தேவா

தேவா, 100 வருடத் தமிழ் சினிமாவில் 30 வருடங் களைத் தனது தேனிசை யாலும் கானாவாலும் கவர்ந்தவர். தான் கடந்துவந்த பாதையைக் குறித்து மனம்விட்டுப் பேசத்தொடங்கினார்.

``ராமராஜன் படங்களுக்கு இளையராஜாதான் இசையமைச்சிட்டிருந்தார். அப்படி இருக்கும் போது, `மனசுக்கேத்த மகராசா’ படத்துல உங்களை இசையமைப்பாளரா அறிமுகப்படுத்தியது எப்படி?’’

``முதலில் ராமராஜன் சார் ரொம்ப பயந்தார். இளையராஜா இசையில் நம்ம படங்களோட பாடல்கள் எல்லாமே ஹிட்டாகுது, இந்த நேரத்தில் நாம ஏன் புது இசையமைப்பாளர்கிட்ட போகணும்னு ரொம்பவே யோசிச்சார். ஆனால், இந்தப் படத்தோட இயக்குநர் தீனதயாளன் சார், என்னைத்தான் இசையமைப்பாளராக்கணும்னு உறுதியா இருந்தார். `கரகாட்டக்காரன்’ பட ஷூட்டிங் போயிட்டிருந்த சமயத்தில்தான் இந்தப் படத்தோட பேச்சுவார்த்தையும் போயிட்டிருந்துச்சு. `கரகாட்டக்காரன்’ ஷூட்டிங்கில்தான் ராமராஜன் சாரைச் சந்திச்சு, பாடல்களைப் பாடிக் காட்டினேன். அதுக்கப்புறம்தான் ஓகே சொன்னார். ஒவ்வொரு பாட்டு கம்போஸிங் பண்ணுனதுக்கு அப்புறமும் நானும் பாடலாசிரியர் காளிதாசனும் அவர்கிட்ட போய், பாட்டைப் பாடிக் காட்டுவோம். ட்யூனும் பாடல் வரிகளும் அவருக்கு ஓகேவா இருந்தால்தான் ரெக்கார்டிங்கிற்கே போவோம். இப்படிப் பார்த்துப் பார்த்துப் பண்ணுன படம்தான், ‘மனசுக்கேத்த மகராசா.’ இந்தப் படத்தோட பாடல்கள் ஹிட்டானதுக்கு அப்புறம்தான் என் சினிமா வாழ்க்கையே தொடங்குச்சு.’’

அதுக்கப்புறம் இளைஞர்களிடம் என்னைக் கொண்டு சேர்த்த படம் `வைகாசி பொறந்தாச்சு’தான். இந்தப் படத்தில் நான் கமிட்டானதே ஒரு சுவாரஸ்யமான கதை. ஒரு நாள் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து போன் வந்துச்சு. ‘ஆபீஸ் வரீங்களா, டிஸ்கஸ் பண்ணுவோம்’னு சொன்னாங்க. அவங்க என்கிட்ட பேசும்போதே, `ஹீரோ, ஹீரோயின், டைரக்டர்னு எல்லாருமே புதுசு’ன்னு சொன்னாங்க. அந்தச் சமயத்தில் நான் ரெண்டு, மூணு படங்கள் பண்ணியிருந்ததால, என்னை இந்தப் படத்துக்கு இசையமைப்பாளரா புக் பண்றதுக்குத்தான் கூப்பிடுறாங்கன்னு நினைச்சுட்டு, என் டீமோடு அவங்க ஆபீஸ் இருக்கிற ஏரியாவுக்குப் போயிட்டேன். நாங்க ஆபீஸுக்குள்ள நுழையுறப்போ உள்ள இருந்து ஒரு டீம் வெளியில வந்து ஆட்டோவில் ஏறிப் போச்சு. அவங்க கையில வாத்தியங்கள் எல்லாமே இருந்துச்சு. அதைப் பார்த்தப்போதான், நம்மை ஆடிஷனுக்குத் தான் வரச்சொல்லியிருக்காங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன்.

அப்புறம் நாங்க உள்ளேபோய் எல்லா வாத்தியங்களையும் செட் பண்ணுனதுக்கு அப்புறம், ஒரு சீன் சொன்னாங்க. அவங்க சீன் சொல்லி பத்து நிமிஷத்துல நான் போட்ட ட்யூன்தான், `சின்னப் பொண்ணுதான் வெட்கப்படுது அம்மா அம்மாடி’ பாட்டு. அது அவங்களுக்குப் பிடிச்சுப்போனதும் அடுத்த சீன் சொன்னாங்க. அதைக் கேட்டுட்டுக் கொஞ்ச நேரத்துல நான் போட்ட ட்யூன்தான், ‘தண்ணிக் குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா’ பாட்டு. இப்படியே அவங்க சீன் சொல்ல, சொல்ல, ரெண்டு மணி நேரத்திலேயே ஏழு பாட்டையும் கம்போஸ் பண்ணிட்டேன். அந்தப் பாட்டு எல்லாம் அவங்களுக்குப் பிடிச்சுப் போனதும் என்னைப் படத்தில் கமிட் பண்ணினாங்க.”

``காதல் பாடல்கள், கிராமத்துப் பாடல்கள்னு தொடர்ந்து இசையமைச்சிட்டிருந்த உங்களுக்கு, `அண்ணாமலை’ ஒரு மாஸ் அனுபவத்தைக் கொடுத்திருக்குமே..?’’

`` `அண்ணாமலை’ படத்திலிருந்துதான் டைட்டில் கார்டில் `சூப்பர் ஸ்டார்’னு போட ஆரம்பிச்சாங்க. அந்த டைட்டிலுக்கும் `அண்ணாமலை’ படத்தோட தீம் மியூசிக்கைத்தான் யூஸ் பண்ணினாங்க. `பேட்ட’ படம் வரைக்கும் அதைத்தான் யூஸ் பண்ணியிருந்தாங்க. அதுமட்டுமல்லாமல், இந்தப் படத்தில் `ஒரு பெண் புறா’ பாட்டைத் தவிர மற்ற பாடல்களை எல்லாம் எஸ்.பி.பிதான் பாடியிருப்பார். ஆனால், அவருக்கு `ஒரு பெண் புறா’ பாட்டோட ட்யூன் ரொம்பப் பிடிக்கும். ‘நீ வேற லாங்வேஜ் படத்துல இதே ட்யூனை யூஸ் பண்ணி என்னைப் பாட வை தேவா’ன்னு சொல்லியிருந்தார். அதே மாதிரி சுரேஷ் கிருஷ்ணா சார் டைரக்ட் பண்ணின `கடம்பா’ங்கிற கன்னடப் படத்தில் அதே ட்யூனை யூஸ் பண்ணி அவரைப் பாட வெச்சேன். செம ஹேப்பி ஆகிட்டார்.

தேவா
தேவா

இதே மாதிரிதான் `பாட்ஷா’ படமும் என் கரியரில் ரொம்ப முக்கியமானது. எல்லா மாட்டுப் பொங்கலுக்கும் `வந்தேண்டா பால்காரன்’ பாட்டு போட்டுக் கொண்டாடுறாங்க. எல்லா ஆயுதபூஜைக்கும் `நான் ஆட்டோக்காரன்’ பாட்டு போட்டுக் கொண்டாடுறாங்க.’’

``கமலோடு சேர்ந்து பணியாற்றிய அனுபவம்?’’

`` நான் சினிமாவுக்கு வரதுக்கு முன்னாடியிருந்தே எனக்கு கமல் சார் நல்ல பழக்கம். அப்போ அவர் மேக்கப் மேனா இருந்தார். 70-களில் நான் நாடகங்களுக்கு வாசிக்கப்போவேன். அந்த நாடகத்தில் நடிப்பவர்களுக்கு மேக்கப் போட கமல் அங்கு வருவார். இப்படி ஆரம்பமானதுதான் எங்க நட்பு. நான் சினிமாவுக்கு வந்து சில வருஷங்கள் கழித்து `அவ்வை சண்முகி’ படம் மூலமாகத்தான் நாங்க இணையும் வாய்ப்பு கிடைச்சது. எப்போதுமே புதுசா புதுசா முயற்சி பண்ணிட்டே இருப்பவர், `அவ்வை சண்முகி’ படத்திலும் பெண் குரலில் பாடியிருப்பார். அதுமட்டுமல்லாமல் என்னுடைய பெஸ்ட் மெலடி பாடல்களில் ஒன்றான `காதலி... காதலி’ பாட்டும் இந்தப் படம்தான். அதுக்கப்புறம் `பம்மல் கே சம்பந்தம்’, `பஞ்சதந்திரம்’னு தொடர்ந்து நாங்க வேலை செஞ்சிருக்கோம்.’’

``விஜய், அஜித்தின் சினிமா கரியரின் தொடக்கத்தில் இருந்தே அவர்களோடு பயணித்தவர் நீங்கள், இருவருக்குமே பத்துப் படங்களுக்குமேல் இசையமைச்சிருக்கீங்க. அந்தப் பயணத்தைப் பற்றிச் சொல்லுங்க..?’’

``எஸ்.ஏ.சி சாரின் படங்களுக்கு நான் இசையமைத்தபோது விஜய் அடிக்கடி ரெக்கார்டிங்கிற்கு வருவார். அப்போதிருந்தே அவரை எனக்கு நல்லாத் தெரியும். அவர் ஹீரோ ஆனதுக்கு அப்புறம் அவருடைய படங்களுக்கு இசையமைக்கும் போது, அவரைப் பாட வைத்தேன். அவரையும் அவரின் அம்மா ஷோபாவையும் சேர்த்து டூயட் பாடல்களையும் பாட வைத்திருக்கிறேன். அதே மாதிரி அஜித்துக்கும் `ஆசை’ படத்தில் ஆரம்பித்து `ரெட்’ படம் வரைக்கும் பல படங்கள் பண்ணியிருக்கேன். விஜய்யைப் பாட வைத்த மாதிரி அஜித்தையும் பாட வைக்க முயற்சி செய்தேன். ஆனால், அவர் அதுக்குப் பிடி கொடுக்கவே இல்லை.’’

``நீங்கள் தேனிசைத் தென்றலா இருந்தாலும் உங்களுடைய கானாதான் பயங்கர ஃபேமஸ்; அதைப் பற்றிச் சொல்லுங்க..?’’

``நான் கானாப் பாடல்களைவிட மெலடி பாடல்கள்தான் அதிகமா இசையமைத்திருக்கேன். அந்தப் பாடல்கள் எல்லாம் ஹிட்டும் ஆகியிருக்கு. அப்படியிருந்தும் ஏன் தேவானா கானான்னு சொல்றாங்கன்னு எனக்குக் கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு. இந்த வருத்தத்தை ஒரு நாள் என் பையன்கிட்ட சொல்லிட்டிருந்தப்போ, ‘ஒவ்வொரு மியூசிக் டைரக்டரும் ஒரு ஸ்டைலை தமிழ் சினிமாவுக்குக் கொண்டு வந்திருக்காங்க. அப்படி கானாவை நீங்க தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவந்ததைப் பெருமையாகத்தான் நினைக்கணும். அதை விட்டுட்டு ஏன்பா வருத்தப்படுறீங்க’ன்னு சொன்னான். நான் விசாலாட்சித் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவன். அதனால கானா இயற்கையாகவே எனக்குள்ளே இருந்துச்சு. அதை அப்பப்போ படங்களில் யூஸ் பண்ணிட்டிருந்தேன். ஆனால், இப்போ கானாவுக்கு ஒரு தனி ரசிகக்கூட்டமே இருக்கு. அதை நினைக்கும்போது ரொம்பப் பெருமையா இருக்கு.

 “அஜித்தைப் பாட வைக்க முயற்சி செய்தேன்!”

எனக்கு ரொம்ப நாளா ஒரு கான்செர்ட் பண்ணணும்னு ஆசை. இப்போ 30 வருஷம் ஆனதனால `தேவா 30’ன்னு ஒரு கான்செர்ட் பண்றோம். பாண்டிச்சேரியில் ஆரம்பமாகுற இந்த கான்செர்ட் அப்படியே வெளிநாடுகளிலும் நடக்கவிருக்கு. நான் பிறந்து வளர்ந்த சென்னைல நம்ம புள்ளிங்கோ மத்தியிலதான் இந்த கான்செப்ட்டை ஆரம்பிக்கணும்னு நினைச்சேன். ஆனால், முதல் ஷோ பாண்டிச்சேரியில நடக்கிற மாதிரி அமைஞ்சிருச்சு. ரெண்டாவது ஷோ சென்னையிலதான். அதுக்கடுத்துதான் வெளிநாட்டுக்குப் போறோம். இதுதான் என் செலிபிரேஷன் பிளான்.’’