சினிமா
Published:Updated:

“இப்பதான் சி.எஸ்.கே-வுக்கு வயசாச்சா?” - ஆர்ஜே பாலாஜி

ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா

ஸாரி நண்பா... நான் ஐபிஎல் கமெண்ட்ரிக்காக மும்பை வந்திருக்கேன். நடுவுல மூக்குத்தி அம்மன் ரிலீஸுக்காகத்தான் கமெண்ட்ரிக்கு குட்டியா பிரேக் எடுத்துக்கிட்டேன்.

மூக்குல குத்துற மாதிரி பொக்குனு மூக்குத்தி அம்மன் டிரைலரைக் கடந்த ஞாயிறு அன்று ஆர்ஜே பாலாஜி ரிலீஸ் செஞ்சதும் சோஷியல் மீடியாவே பக்குனு ஆகிடுச்சு!

-பாருங்க அவரைப் பேட்டியெடுத்து எழுதுறப்பவும் அவரைமாதிரியே எழுதவேண்டியிருக்கு. அதான் ஆர்ஜே பாலாஜி! மனுஷனுக்கு போன் போட்டால் மராத்தி பாஷையில் `தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார்’ என்று குரல் கேட்கிறது. துரத்திப் பிடித்துப் பேசினேன்.

``ஸாரி நண்பா... நான் ஐபிஎல் கமெண்ட்ரிக்காக மும்பை வந்திருக்கேன். நடுவுல மூக்குத்தி அம்மன் ரிலீஸுக்காகத்தான் கமெண்ட்ரிக்கு குட்டியா பிரேக் எடுத்துக்கிட்டேன். காது குத்தல. மதர் பிராமிஸ்!’’ என்று சிரிக்கிறார்.

 “இப்பதான் சி.எஸ்.கே-வுக்கு வயசாச்சா?” - ஆர்ஜே பாலாஜி

``ஒருநாள் உங்க வாயை வாடகைக்குக் கொடுங்க பாஸ்... வாய் உள்ள புள்ள பொழைச்சிக்கும்கிறதுக்கு நீங்கதான் வாழும் உதாரணம். எங்கே இருந்து வருது இந்த ரைமிங் டைமிங் வார்த்தைகளெல்லாம்?’’

``அட நீங்க வேற... என் அம்மாவும் மனைவியும் பேசுறதையெல்லாம் நீங்க கேட்டா நான்லாம் ஜுஜுபி. அவங்க பேசுறதுல ஒரு டீஸ்பூன் பேசினாலே போதும். ட்ரம்ப் தலைமுடியை அவங்க ரெண்டு பேரும் அடிக்கிற நக்கலைக் கேட்டா பாவம் ட்ரம்ப்பே நொந்துடுவாரு.’’

``சூப்பர்... மூக்குத்தி அம்மன் டிரைலருக்கு செம ரெஸ்பான்ஸ் போல... ஆனா, ஆங்காங்கே அரசியல் நெடி தூக்கலா இருக்கே பாஸ்... யாரையோ டார்க்கெட் பண்ணுற மாதிரியெல்லாம் இருக்கே..?’’

‘`நான் லெப்ட், ரைட்,சென்டர் எதுவுமே இல்லை. சத்தியமா அப்படியெல்லாம் நினைச்சு இந்தப்படம் பண்ணல. எல்.கே.ஜிக்குப் பிறகு அடுத்த படம்னதும் வித்தியாசமான ஒரு கதை பண்ணணும்னுகூட நான் யோசிக்கலை. முன்னாடி யெல்லாம் பண்டிகைக் காலங்களில் பேமிலியா தியேட்டருக்குப் போவோம்ல. கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர் மாதிரி ஜாம்பவான்களோட படம்னா எவ்ளோ உற்சாகமா தியேட்டருக்குப் போவோம் இல்லையா..? ஒவ்வொரு கேரக்டர்ஸ்க்கும் டீட்டெய்லிங்கா ஒர்க் பண்ணி மிரட்டியிருப்பாங்க.

 “இப்பதான் சி.எஸ்.கே-வுக்கு வயசாச்சா?” - ஆர்ஜே பாலாஜி

இப்ப வர்ற சினிமாக்கள் சீரியஸா ஆகிடுச்சோன்னு தோணும். ஏன்னா நாம சீரியஸான படங்களைப் பார்க்க ஆரம்பிச்சிட்டோம். அப்படி இல்லாம நம்ம குடும்பத்தோட தியேட்டருக்குப் போயி கொண்டாட்டமா சினிமா பார்க்குற மாதிரி ஸ்டைல்ல படங்கள் பண்ணணும்னு ஆசைப்படுறேன். `பின்னே உன்னால அவதாரா எடுக்க முடியும்?’னு உங்க மைண்ட் வாய்ஸ் நல்லாக் கேக்குது. கடவுள் வந்தா நீங்களோ நானோ கேட்க நினைக்கிற கேள்விகளை இதுல கேட்டிருக்கேன்.’’

``நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா, ராஜமௌலி படத்துக்கு அப்புறம் உங்க படத்துக்குத்தான் வெயிட்டிங்னு யூடியூப்ல, ட்விட்டர்ல ஒரு கமென்ட் படிச்சேன். ஓவரா இல்லையா?’’

``வருங்கால அமெரிக்க ஜனாதிபதியா..? அதெல்லாம் ஆளு வெச்சு எழுதலை தலைவா. 15 வருஷம் ஆச்சு அம்மன் படம் வந்து. நெட்ப்ளிக்ஸ் wild wild country மாதிரியெல்லாம் டாக்குமெண்டரி பார்த்தா எவ்ளோ தைரியமா விமர்சிக்கிறாங்கன்னு தோணும். டபுள் மீனிங் டயலாக் இல்லாம செம ஜாலியா ஒரு படம் பண்ணலாமேன்னுதான் மூக்குத்தி அம்மன் உருவாச்சு. டிரைலருக்கு சத்தியமா இவ்ளோ ரெஸ்பான்ஸ் வரும்னு நானே எதிர்பார்க்கலை. சந்தோஷமா இருக்கு. தெளிவா ஒரு ஸ்கிரிப்ட்டோட அடுத்த படம் விரைவில் ஆரம்பிக்கிறோம்.’’

 “இப்பதான் சி.எஸ்.கே-வுக்கு வயசாச்சா?” - ஆர்ஜே பாலாஜி

``விகடனுக்கு நீங்க கொடுத்த பேட்டியில OTTயில இந்தப் படத்தை ரிலீஸ் செய்யமாட்டேன்னு சத்தியம்லாம் செஞ்சீங்க?’’

``நானே எதிர்பார்க்கல. தியேட்டர் ரிலீஸ்ங்கிறது இப்போ சாத்தியமான்னு தெரியாம என்னோட சுயநலத்துக்காக நூற்றுக்கணக்கான பேர் உழைச்ச ஒரு படத்தை சும்மா பொட்டிக்குள்ள வச்சு காத்துக்கிட்டு இருக்க மனசு வரல. என்னால ஒரு வேலை செஞ்சிட்டு அடுத்த வேலைக்கு டக்குனு போகமுடியாது. இதை ரிலீஸ் செஞ்சுட்டுதான் அடுத்து என்னன்னு யோசிக்க முடியும். என் மகளுக்குப் பல்வலின்னு கூட்டமா இருக்குற ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போக யோசிக்குற நான் எப்படி தியேட்டர்ல மக்களைப் பார்க்கக் கூப்பிட முடியும் சொல்லுங்க. மனசாட்சின்னு ஒண்ணு இருக்குல... அதுவும் இல்லாம மக்களும் OTTல ஜாலியா ஒரு படம் பார்க்கட்டுமே.’’

``என்னங்க சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..?’’

``சிஎஸ்கே பத்திதானே சொல்றீங்க. என்ன இருந்தாலும் நம்ம சென்னை டீம் இல்லையா..! எல்லோரும் வயசான ஆளுங்களா ஆகிட்டாங்கன்னு கலாய்க்குறாங்க.

இதே டீம்தான் மூணு வருஷமா விளையாடுது. அப்போ ஜெயிச்சதாலயும் பைனல்ஸ் வரை போனதாலயும் தெரியாத வயசு இப்போ குறையா தெரியுது. அதேபோல இன்னொரு விஷயத்தையும் நாம யோசிக்கணும். நிறைய பேரு வாய்ப்பே கிடைக்காம சும்மாவே தமிழ்நாடு டீம்க்காக விளையாடிக்கிட்டு இருக்காங்க. ஒருத்தர்லாம் ஸ்டேட் லெவல்ல பத்தாயிரம் ரன் அடிச்சிட்டு ஆறு வருஷமா செலக்‌ஷனுக்குள்ள போகாம சும்மா இருக்காரு. அந்த மாதிரியான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்!’’

 “இப்பதான் சி.எஸ்.கே-வுக்கு வயசாச்சா?” - ஆர்ஜே பாலாஜி

``ஐ.பி.எல் கமெண்ட்ரிக்கு என்ன மாதிரியான விமர்சனங்கள் வருகின்றன?’’

``செம பாராட்டு. நான்கூட திட்டு வாங்களோன்னு நினைச்சேன். ஒருத்தர் என்னை சென்னைல பார்த்துட்டு, ‘ஏய் பாலாஜி... மேட்ச் அங்கே நடந்துகிட்டிருக்குறப்போ நீ ஏன்பா இங்கே சுத்திட்டிருக்கே?’ன்னு உரிமையா கோச்சுக்கிட்டார்.’’

``இவ்ளோ பாசிட்டிவா இருக்கீங்க. ஆனா, `லாக்டௌன் முடிஞ்சதும் போராளி மோடுக்கு வந்துட்டாரு’, ‘வாய்ச்சொல் வீரர்’ அது இதுன்னு எதிர்மறை விமர்சனங்கள் உங்க மேல வைக்கிறதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?’’

``முன்னாடியெல்லாம் ரொம்பவே வருத்தமா இருக்கும். ஏன்னா, ஆரம்பத்துல நான் என்ன பண்ணினாலும் பாராட்டுவாங்க. ஆனா, திடீர்னு சிலர் என்னைத் திட்ட ஆரம்பிச்சதும் வருத்தமா இருந்துச்சு. நாம மனசால யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்கல. ஆனா, இப்படி நம்மளைத் திட்டுறாங்களேன்னு தோணும். அப்புறமாதான் ஒரு விஷயம் புரிஞ்சது. இப்படித் திட்டுறவங்க யாரையும் வாழ்க்கைல நாம எங்கேயும் பார்த்திருக்கக்கூட மாட்டோம். சமூக வலைதளங்களில் பாராட்ட ஆட்கள் இருந்தா அங்கொண்ணும் இங்கொண்ணுமா போறபோக்குல திட்டுற ஆட்களும் இருப்பாங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன். அவங்க சொல்றதை மனசுல ஏத்திக்கிட்டா நிஜவாழ்க்கையில நம்மகூட நம்ம பக்கத்துல இருக்குறவங்களை நாம சந்தோஷமா வெச்சுக்க முடியாது.”