Published:Updated:

‘ரஜினி பாராட்டு... ரஹ்மான் மியூசிக்... சூப்பர்ல!’ - செம குஷியில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்
பிரீமியம் ஸ்டோரி
சிவகார்த்திகேயன்

- கிருஷ்ணா

‘ரஜினி பாராட்டு... ரஹ்மான் மியூசிக்... சூப்பர்ல!’ - செம குஷியில் சிவகார்த்திகேயன்

- கிருஷ்ணா

Published:Updated:
சிவகார்த்திகேயன்
பிரீமியம் ஸ்டோரி
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்... இன்று பலரின் இன்ஸ்பிரேஷன். ஹீரோ, தயாரிப்பாளர், பாடலாசிரியர் எனப் பலமுகங்கள் எடுத்தாலும், எத்தனை உயரத்திற்குப் போனாலும் ‘ஒரு சிறந்த எண்டர்டெயினர்’ என்பதையே தனக்கான அடையாளமாகப் பார்க்கிறார். 2018-ல் நடைபெற்ற விகடன் பிரஸ் மீட்டில் ‘வேறொரு நல்ல நாளில் உங்க எல்லோரையும் சந்திக்கிறேன்’ என்று சொல்லியிருந்தார். சொன்னபடி பொங்கல் நன்னாளை முன்னிட்டு சந்தித்தார். அதே புன்னகை, அதே கலாய், அதே மகிழ்ச்சி!

`` ‘பொங்கல் ரிலீஸ்’ங்கிறது ஒரு நடிகருக்கு ரொம்ப முக்கியமான விஷயம். உங்களோட ‘ரஜினி முருகன்’ படம் பொங்கலுக்கு ரிலீஸாச்சு; அதுக்கப்புறம் உங்ககிட்ட இருந்து பொங்கலுக்கு படங்கள் வரலையே..?’’

‘‘ ‘ரஜினி முருகன்’ படம் பொங்கலுக்கு ரிலீஸாச்சுங்கிற சந்தோஷத்தைத் தாண்டி, அந்தப் படம் ரிலீஸாகிடுச்சுங்கிற சந்தோஷம்தான் அந்த சமயத்தில் அதிகமாக இருந்துச்சு. ஏன்னா, பொங்கலுக்கு முன்னாடி மூணு முறை ரிலீஸ் தேதியை அறிவிச்சு, படம் தள்ளித் தள்ளிப்போய் சரியா பொங்கல் ரிலீஸ்னு அமைஞ்சது. படமும் பொங்கல் ரிலீஸுக்கு ஏற்றமாதிரி ஜாலியான படமா இருந்ததனால மக்களுக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. அதுக்கப்புறம் ‘டாக்டர்’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணலாம்கிற திட்டத்தில்தான், லாக்டெளனுக்கு அப்புறம் வேலைகளை ஆரம்பிச்சோம். ஆனால், அந்த நேரத்திற்குள் படத்தை முடிக்க முடியலை. குறைந்த ஆள்களை வெச்சு ஷூட் பண்ணணும்; பாதுகாப்பா பண்ணணும்னு நிறைய சவால்கள். அதான் ஏப்ரல் ரிலீஸ்னு மாத்திட்டோம்.”

‘ரஜினி பாராட்டு... ரஹ்மான் மியூசிக்... சூப்பர்ல!’ - செம குஷியில் சிவகார்த்திகேயன்

``விஜய் டிவியில் இருந்த நேரத்தில் இருந்தே ‘டாக்டர்’ பட இயக்குநர் நெல்சன் உங்களுக்கு நல்ல பழக்கம். அவரோட இயக்கத்தில் நடிக்க கமிட்டானது எப்படி?’’

“நெல்சன் அண்ணாவோட முதல் படத்தை நான்தான் தயாரிக்கிறதா இருந்தது. அதுக்கப்புறம் அவர், ‘ ‘கோலமாவு கோகிலா’ படத்தை முடிச்சிட்டு வரேன்’னு சொன்னார். இருந்தாலும், அந்தப் படத்திலும் ஒரு பார்ட்டா இருக்கணும்னு ஆசைப்பட்டப்போதான், ‘கல்யாண வயசு’ பாட்டை எழுதச் சொன்னார். அதுமட்டுமல்லாம, யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்கிட்ட அந்தப் படத்தில் நடிக்கிறதுக்காக முதலில் பேசியது நான்தான். ‘நம்ம அண்ணேதான்... சூப்பரா எடுத்திடுவார். கால்ஷீட், சம்பளம் எல்லாம் பார்த்துப் பண்ணிக்கோங்க’ன்னு சொல்லி அவங்களை படத்துக்குள்ள வர வைக்கணும்கிறதை எனக்கான வேலையா எடுத்துக்கிட்டேன். இப்படி ஆரம்பக் காலத்தில் இருந்து அவர்கூட இருந்தவங்க எல்லாரும், அவங்கவங்க படமாகவும் நினைச்சு முடிஞ்சதைச் செய்தோம். அந்தப் படம் ஹிட்டானதுக்கு அப்புறம், ‘என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு’ன்னு ‘டாக்டர்’ படத்தோட ஐடியாவைச் சொன்னார். அதைக் கேட்டுட்டு, ‘நாமளே பண்ணலாமா’ன்னு கேட்டேன். இப்படி ஆரம்பிச்ச படம்தான், ‘டாக்டர்’. ‘கோலமாவு கோகிலா’ மாதிரி, செம ஜாலியான, அதே சமயம் எமோஷனலான படமா இருக்கும்.”

``நெல்சன் இப்போ விஜய்யோட அடுத்த படத்தை இயக்கப்போறார்; அது தெரிஞ்சப்போ எப்படி இருந்தது..?’’

“அது முன்னாடி தெரிஞ்சப்பவே செம குஷியாகிட்டேன். படத்தோட அறிவிப்பு முறையாக வரும்வரைக்கும், அந்த ரகசியத்தை எங்களுக்குள்ளேயே வெச்சுக்கிட்டு சந்தோஷப்படுறது கொஞ்சம் கஷ்டமாவும் இருந்துச்சு. விஜய் சாரை வெச்சு நெல்சன் அண்ணா பண்ணப்போற படத்தோட ஐடியா என்னன்னு எனக்குத் தெரியும். அதைப் படமா திரையில் பார்க்கற ஆசையில் இருக்கேன். விஜய் சார், சன் பிக்சர்ஸ் பேனர்னு பெரிய படம் பண்றதுக்கு தகுதியான ஆள்தான், நெல்சன் அண்ணே.”

`` ‘அயலான்’ இவ்வளவு தாமதம் ஏன்?’’

“தென்னிந்திய மொழிகளில் இதுவரைக்கும் ஏலியனை வெச்சு எந்த ஒரு படமும் வந்ததில்லை. இந்தியில் ‘கோயி மில் கயா’ படத்துல ஏலியன் கேரக்டரைக் காட்டியிருப்பாங்க. அதிலயும் ஒரு நடிகருக்கு ஏலியன் மாதிரி மேக்கப் போட்டுத்தான் நடிக்க வெச்சிருப்பாங்க. ஆனால், ‘அயலான்’ படத்தில் கிராபிக்ஸில் ஒரு ஏலியன் கேரக்டரை உருவாக்கியிருக்கோம்; அது படம் முழுக்க என்கூட டிராவலாகும். படத்தை ஆரம்பிக்கு ம்போது, போஸ்ட் புரொடக்‌ஷனில்தான் அதிக நாள்கள் தேவைப்படும்னு தோணியதால், முதலில் ஷூட்டிங்கை முடிச்சிட நினைச்சோம். ஆனால், அதற்கிடையில் தயாரிப்பாளருக்குச் சில பிரச்னைகள் வந்ததால, படம் தாமதமாகுற சூழல். இந்தத் தாமதம் படத்தோட தரத்தை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாதுங்கிறதுல தெளிவா இருந்தோம். படத்தில் மொத்தம் 2500 சிஜி ஷாட்ஸ் இருக்கு. எவ்வளவு தாமதமானாலும் படம் மக்களுக்கு நிச்சயமா புது அனுபவத்தைக் கொடுக்கும். அந்த நம்பிக்கையுடன் உழைச்சுக்கிட்டிருக்கோம்.”

‘ரஜினி பாராட்டு... ரஹ்மான் மியூசிக்... சூப்பர்ல!’ - செம குஷியில் சிவகார்த்திகேயன்

``ரஹ்மானோடு ஒரு ரசிகராய் விஜய் டிவியில் நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்ததற்கும் தற்போது அவர் இசையமைப்பில் நடிப்பதற்குமான மாற்றத்தை எப்படி ரசிக்கிறீர்கள்?’’

“ ‘நாம ஜெயிச்சுட்டோம், சூப்பர்’ அப்படிங்கிறது எனக்கு அடிக்கடி தோணாது. அப்படி தோணாமல் இருக்கிறது நல்லதும்கூட. சில தருணங்கள் அப்படி இருந்திருக்கு. ‘ரெமோ’ பார்த்துட்டு ரஜினி சார் போன் பண்ணி, ‘The Great Star is Born’னு பேசி பாராட்டி முடிச்சவுடன் ‘சூப்பர்ல’ன்னு தோணுச்சு. அது மாதிரியான ஒரு தருணம் ரஹ்மான் சார்கிட்ட அமைஞ்சது. ‘அயலான்’ பட இன்ட்ரோ பாடலைக் காட்டுறதுக்காக எங்களை வரச் சொல்லியிருந்தார். அவர் ஸ்டூடியோவுல உட்கார்ந்து அதைக் கேட்கும்போது அப்படி இருந்தது. அவர் இசையமைச்ச ஆடியோ கேசட் வாங்குறதுக்காக அஞ்சஞ்சு ரூபாயா காசு சேர்ப்பேன். கேசட் ரிலீஸாகுற நாள் அதை வாங்கி ரேப்பரைப் பிரிக்கிற சந்தோஷம் இருக்கே, நானும் என் ப்ரெண்ட் சுந்தரவடிவேலும் போட்டி போட்டுக்கிட்டுப் போய் கேசட் வாங்குவோம். என் அப்பா ரஹ்மான் சாருடைய பெரிய ரசிகர். நல்லா ஞாபகம் இருக்கு, ஒருநாள் புது டேப் ரெக்கார்டை வாங்கிட்டு வந்து தூங்கிட்டிருந்த என்னை எழுப்பி, ‘எழுந்திரு... எழுந்திரு... இந்தப் பாட்டைக் கேளு. ரஹ்மான் சூப்பரா போட்டிருக்கான்ல’ன்னு போட்டுக் காட்டினார். அதுதான் ‘நறுமுகையே’ பாடல். நானும் அப்பாவும் மறுபடியும் மறுபடியும் போட்டு ரசிச்சுக் கேட்டுக்கிட்டே இருந்தோம். ரஹ்மான் சாரைப் பார்த்துட்டு வீட்டுக்கு வந்தபோது, ‘இன்னைக்கு அவர் ஸ்டூடியோவுல, அப்பாகூட இருந்த மாதிரி உணர்ந்தேன்’ன்னு சொன்னேன். அந்தச் சமயத்துல ‘மக்கள் நமக்குக் கொடுத்த இடத்தை சரியா பயன்படுத்தியிருக்கோம். அதனாலதான் இந்த மாதிரி நல்ல விஷயங்கள் நடக்குது’ன்னு நினைச்சுக்கிட்டேன்.”

``பாடல்களிலோ அல்லது வசனங்களிலோ பர்சனல் கனெக்டைச் சொல்லிக்கிட்டே வர்றீங்களே..?’’

“நான் ஒருத்தருடைய வெற்றியில இருந்து அந்த எனர்ஜியை எடுத்துக்கிறேன்ல, அதே மாதிரி ஏதோ ஒரு ஊர்ல இருக்கிற யாரோ சிலர் என் வெற்றியில இருந்து எனர்ஜியை எடுத்துக்குவாங்கதானே. அதனால, செய்ற வேலையைச் சிறப்பாப் பண்ணணும்னு நினைக்கிறேன். ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்துல ‘உங்களுக்கு இந்த வயசுல அப்பா இல்ல, எனக்குச் சின்ன வயசுல இருந்தே அப்பா இல்ல’ன்னு சொல்ற வசனம் ஸ்கிரிப்ட் பேப்பர்ல இல்ல. ஸ்பாட்ல என்னை அறியாமல் எனக்குள்ள இருந்து வந்தது. அதைச் சொல்லுறப்போ ரொம்ப உடைஞ்சிட்டேன். அது வாழ்க்கையில இருக்குற வலி. என் அப்பா இறந்து பதினெட்டு வருஷமாகுது. இன்னும் ஏதாவதொரு நிமிஷத்துலகூட அவரை நினைக்காமல் வாழ்க்கை போறதில்ல. ஒரு குழந்தை வளர்றதுக்குப் பொருளாதார ரீதியா ஆதரவு முக்கியம். அதைவிட மாரல் சப்போர்ட் ரொம்ப முக்கியம். ரெண்டுமே அப்பாகிட்ட இருந்துதான் கிடைக்கும். இது கிடைக்காமப்போகுறப்போ நடுக்கடல்ல தத்தளிக்குற உணர்வுதான் வரும். அந்த நேரத்துல எந்தத் துடுப்பைப் பிடிக்குறோம்ங்குறதுலதான் வாழ்க்கை அடுத்து என்னவாகப் போகுதுன்னு முடிவாகுது. பார்க்குறவங்கெல்லாம் அட்வைஸ் பண்ணுவாங்க. கூடவே அவங்க பண்ற அட்வைஸ்ல, வாழ்க்கையை நினைச்சு பயமும் வந்திடும். இதையெல்லாம் தாண்டி நாம ஏதாவது ஒண்ணைப் பண்ணிடுவோம்னு தெரியும். ஆனா, இந்தக் கஷ்டத்தை யார்கிட்ட சொல்றதுன்னும் தெரியாது. ‘அப்பா, இப்போ நீங்க இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்பா’ன்னு தோணும். அந்த வலி எப்பவும் உள்ள இருக்கிறதனாலதான் உழைப்பை இன்னும் சின்ஸியரா பார்க்கிறேன். முடிஞ்சவரை அவருக்குப் பெருமை சேர்க்கணும்.’’

‘ரஜினி பாராட்டு... ரஹ்மான் மியூசிக்... சூப்பர்ல!’ - செம குஷியில் சிவகார்த்திகேயன்

``மாஸ் ஹீரோனா யாரு? இதுக்காக உங்களுடைய மெனக்கெடல்கள் என்ன?’’

“மாஸ் ஹீரோனா மாஸ் ஃபாலோயிங் இருக்கணும். படம் ரிலீஸாகுதுனா, எதைப் பத்தியும் கவலைப்படாமல் தியேட்டர்ல வந்து மக்கள் உட்கார்ந்திடணும். அப்போதான் அந்த ஹீரோவுடன் ரசிகர்கள் எந்த அளவுக்கு கனெக்டடா இருக்காங்கன்னு தெரியும். இதைத்தாண்டி, எந்தக் கதையை எப்படி எல்லாத் தரப்பட்ட ஆடியன்ஸுக்கும் புரியுற மாதிரி சொல்லணும்ங்குறது ஹீரோக்கள் செய்ய வேண்டியது. இப்போ நான் பண்ணிட்டு இருக்குற படங்களெல்லாம் எண்டர்டெயின்மென்ட்டை வேறொரு கலர்ல காட்டும். ‘டாக்டர்’, ‘அயலான்’ இந்த ரெண்டு படங்களைப் பார்க்கும்போது மக்கள் அதிகமா சிரிப்பாங்க. அதில் இருக்கிற ஃபேன்டஸியை நிச்சயம் ரசிப்பாங்க. எண்டர்டெயின்மென்ட் போர்ஷனைக் குறைக்காம பண்ணணும்ங்குறதுதான் என்கிட்ட இருக்குற ஒரே ப்ளான். ஒரு படத்தோட வெற்றியை மட்டுமே வெச்சு ‘மாஸ் ஹீரோ’ங்கிறது முடிவாகுறது கிடையாது. நம்ம எப்படி நடிக்குறோம், அதுல ஆடியன்ஸுக்கு எது பிடிக்குது, வியாபாரம், ரீச், அடுத்த கட்டத்துக்குப் போறதுக்கான கதைகள், அதைத் தேர்ந்தெடுக்குறதுக்கான பக்குவம், இதுல ஏதாவது தோல்வில முடிஞ்சா அதை எப்படிக் கையாளுறோம்... ‘மாஸ் ஹீரோ’ங்கிறதைச் சுத்தி இவ்ளோ விஷயங்கள் இருக்கு.”

``ரியாலிட்டி ஷோவில் இருந்து வந்ததாலதான், ரியாலிட்டி ஷோக்களைத் தொடர்ந்து கவனிச்சுக்கிட்டிருக்கீங்களா? நீங்க போன்ல வாழ்த்து சொன்னதா பல பேர் சொல்றாங்க. சமீபத்தில்கூட ‘குக் வித் கோமாளி’ செட்டுக்குப் போனீங்களே?’’

“நான் எப்பவுமே ரியாலிட்டி ஷோக்களைப் பார்க்கிறதுண்டு. அதுல சில ஷோக்கள் நமக்கு ரொம்பப் பிடிச்சுப்போயிடும். ‘குக் வித் கோமாளி’ என்னுடைய மோஸ்ட் ஃபேவரைட். நாம நிறைய ரசிச்சாதான், நிறைய ரசிக்க வைக்க முடியும்னு நான் நம்புறேன். அப்படி ஆரம்பத்துல இருந்தே எல்லாத்தையும் ரசிச்சதுதான் எனக்குள்ள இருக்கிற ஹியூமர் சென்ஸுக்கும் காரணம். இப்பவும் யாராவது நல்லா சிரிக்க வெச்சா, உடனே போன் பண்ணிடுவேன். எனக்கு எப்படி பாராட்டு வாங்குறது பிடிக்குமோ, அப்படித்தானே அவங்களுக்கும்! டிவியில இருந்து வந்ததனால இதை ஒரு கடமையாகவும் பார்க்கிறேன். நான் சேனல்ல இருந்தபோது ஒருமுறை மணிவண்ணன் சார் எனக்கு போன் பண்ணிப் பாராட்டினார். அவ்வளவு சந்தோஷமா இருந்தது. ‘என்னை நல்லா சிரிக்க வெச்சதுக்கு நன்றி’ன்னு சொல்லிதான் ஷிவாங்கி, புகழ், பாலான்னு எல்லார்கிட்டேயும் பேசுவேன். நல்ல ஷோக்களை மிஸ் பண்ணிட்டு வேலை பார்க்கிற அளவுக்கெல்லாம் நான் பிஸி இல்லை. அதுக்கான அவசியமும் இல்லை.”

‘ரஜினி பாராட்டு... ரஹ்மான் மியூசிக்... சூப்பர்ல!’ - செம குஷியில் சிவகார்த்திகேயன்

``ரஜினியின் அரசியல் முடிவை நீங்க எப்படிப் பார்க்குறீங்க?’’

“நான் ரஜினி சாரோட வெறித்தனமான ரசிகன். அவர் சிரிக்கும்போது சிரிச்சு, அழும்போது கூட சேர்ந்து அழுது படம் பார்த்தவன். அவர் ஒரு முடிவு எடுக்கிறார்னா அதை அவரைவிட அதிகமா யாரும் யோசிச்சிருக்க முடியாது. ஒருமுறை ரஜினி சார், இங்க ஹாஸ்பிட்டல்ல இருந்தபோது தினமும் அங்க வாசல்ல போய் நிற்பேன். ‘சார் இப்போ எப்படி இருக்குறாங்க’ன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு வருவேன். இத்தனை வருஷம் ஒருத்தர் சூப்பர் ஸ்டாரா இருக்கிறார்னா, அவர் எவ்வளவு உழைச்சிருக்கணும். அந்த இடத்தைத் தக்கவைக்க அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கணும். எனக்கு அவர் நல்ல உடல்நலத்தோட ரொம்ப சந்தோஷமா இருக்கணும். அதுக்குப் பிறகு, அவரோட படங்கள் எல்லாம் வழக்கம் போல சூப்பரா ஓடணும். நான் ‘அண்ணாத்த’ படத்துக்கு பயங்கரமா வெயிட் பண்றேன். முதல் நாள் முதல் ஷோ கைதட்டி விசில் அடிச்சுப் பார்க்கணும்.”

`` ‘நெல்’ ஜெயராமன் இறுதி நாள்களில் மருத்துவமனையில இருந்தபோது பார்த்துக்கிட்டீங்க. அவர் குடும்பத்துக்கும் ஆதரவா இருக்கீங்க. அவர் நினைவா நம்மாழ்வார் விருது வாங்கிய தருணம் எப்படி இருந்தது?’’

“நெல் ஜெயராமன் ஐயா பத்தி ரொம்ப ஆழமா தெரிஞ்சுக்கிட்டதுக்கு மிக முக்கியமான காரணம், ‘கத்துக்குட்டி’ இயக்குநர் இரா.சரவணன் சார்தான். நெல் ஜெயராமன் ஐயா எப்படியெல்லாம் நம்ம நெல் ரகங்களைச் சேகரிச்சார், அவருடைய நோக்கம் என்னவா இருந்ததுன்னு சொன்னார். அவரைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டவுடன் ‘இப்படியொரு மாபெரும் மனிதர் நமக்கு நடுவுல வாழ்ந்திட்டு இருக்கார்’னு நினைக்கும்போது சந்தோஷமா இருந்தது. அவரைப் பத்தி முழுமையா தெரிஞ்சதுக்குப் பிறகுதான், நான் அவரைச் சந்திச்சேன். அவர் பண்ணியிருக்கிறது மிகப்பெரிய விஷயம். அதுக்கு நான் பண்ணுன சின்ன மரியாதையாகத்தான் இதைப் பார்க்குறேன். இப்போ விவசாயிகள் சங்கம் மூலமா சேர்ந்து நெல் ஜெயராமன் ஐயா நினைவோடு நம்மாழ்வார் ஐயா பெயர்ல விருது கொடுக்கிறோம்னு சொன்னது ரொம்ப சந்தோஷமாகிடுச்சு. அந்த விவசாயிகள் எல்லாம் சென்னை வரும்போது நிச்சயம் சந்திக்கணும்னு காத்துட்டிருக்கேன்.”