சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“தியேட்டர் வசூலுடன் டி.ஆர்.பியும் முக்கியம்!”

தமிழரசன் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழரசன் படத்தில்...

``முன்ன என் படத்துக்கு நானே இசையமைச்சு, தயாரிச்சதால ஒரு படத்தை முடிச்சிட்டுதான் அடுத்த படத்துக்குப் போவேன்.

ண்ணூர்த் துறைமுகத்தில் கன்டெய்னர்களுக்கு நடுவே `பெசன்ட்’ ரவியைப் புழுதியில் போட்டுப் புரட்டிக் கொண்டிருந்தார் விஜய் ஆண்டனி. நெற்றியில் சாய ரத்தம் வழிய, கயிற்றைப் பிடித்துச் சண்டை போட்டுவிட்டு ரிலாக்ஸாக நம் பக்கம் வந்தார்.

Vijay Antony, Remya Nambeesan
Vijay Antony, Remya Nambeesan

‘`நடிக்கிறது ரொம்பக் கஷ்டம்தான் போலயே’’ எனக் கேட்டதும், ``நடிக்கிறது ரொம்ப ஈசி. டெக்னீஷியன்ஸ்தான் ரொம்பக் கஷ்டப்படுவாங்க. நடிகர்கள் நடிச்சுட்டு கேரவனுக்கோ, நிழல் இருக்கும் இடத்துக்கோ வந்திடுவோம். ஆனால், அவங்க அடுத்த ஷாட் ரெடி பண்ணணும். சமீபத்தில்கூட `இந்தியன் - 2’ ஷூட்டிங் ஸ்பாட்டில் மூணு பேர் இறந்துட்டாங்க. ரொம்ப வேதனையான விஷயம்’’ விஜய் ஆண்டனியின் வார்த்தைகளில் கவலையும் அக்கறையும் தெரிந்தன.

“ஒரே நேரத்தில் `தமிழரசன்’, `அக்னிச் சிறகுகள்’,`காக்கி’ன்னு மூன்று படங்களில் நடிப்பது சிரமமாக இல்லையா?”

``முன்ன என் படத்துக்கு நானே இசையமைச்சு, தயாரிச்சதால ஒரு படத்தை முடிச்சிட்டுதான் அடுத்த படத்துக்குப் போவேன். இப்போ இசை மற்றும் தயாரிப்புக்கு பிரேக் விட்டதால, ஒரே நேரத்தில் மூணு படங்களில் நடிக்க முடியுது. இந்த மூணு படங்களை முடிச்சதுக்கு அப்புறம், விஜய் மில்டன் படம், `மெட்ரோ’ இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் படம், `விடியும் முன்’ இயக்குநர் பாலாஜி கே.குமார் படம்னு அடுத்து மூணு படங்களில் நடிக்கப்போறேன்.’’

`` `இளையராஜா - எஸ்.பி.பி - யேசுதாஸ்’ எனும் எவர்கிரீன் காம்பினேஷன், பல வருடங்களுக்குப் பிறகு `தமிழரசன்’ படத்தில் அமைந்திருக்கு. ஓர் இசையமைப்பாளராக இதை எப்படி உணர்கிறீர்கள்?’’

“15 வருஷத்துக்கு முன்னாடி இளையராஜா சாரோட குரூப்ல கோரஸ் பாடுறதுக்கே செலக்ட் ஆகாத ஆள் நான். இசை சம்பந்தமா எதுவுமே படிக்கலை. அவருடைய இசையைக் கேட்டுத்தான் நான் இசையமைப்பாளரே ஆனேன். என் படத்துக்கு அவரே மியூசிக் பண்றாருன்றதை நம்ப முடியலை.

சினிமாவில் ஏதோ ஒரு விஷயத்தை உருப்படியா பண்ணியிருக்கேன்; அதனாலதான் இந்த பாக்கியம் கிடைச்சிருக்குன்னு நினைக்கிறேன். எஸ்.பி.பி சாரும் இளையராஜா சாரும் இவ்வளவு நாள் பிரிஞ்சு இருந்தாங்கன்னு நான் எந்த இடத்திலும் உணரலை. ‘தாஸ்’ படம் எடுத்த பாபு யோகேஷ்வரன்15 வருஷம் கழிச்சு இந்தப் படத்தை இயக்கியிருக்கார். இது ஒரு ஆங்கிலப் படத்தோட அதிகாரபூர்வ ரீமேக்.’’

“ ‘அக்னிச்சிறகுகள்’ படத்தின் ஹீரோயினை கடைசி நேரத்தில் மாற்ற என்ன காரணம்..?”

“இந்தக் கதையை எழுதும்போது அக்‌ஷரா ஹாசனை மனசில் வெச்சுதான் டைரக்டர் எழுதியிருக்கார். ஆனால், அவரோட கால்ஷீட் கிடைக்கிறது பிரச்னையா இருந்ததால ஷாலினி பாண்டேவை கமிட் பண்ணினாங்க.

ஷூட்டிங் போறதுக்கு நாங்க ரெடியான சமயத்தில் அக்‌ஷராவோட கால்ஷீட்டே கிடைச்சது. அப்போ ஷாலினி பாண்டேவும் பிஸியா இருந்ததால், அக்‌ஷராவையே கமிட் பண்ணிட்டாங்க. பிரச்னையெல்லாம் எதுவும் இல்லை.’’

`` `திமிரு புடிச்சவன்’, `தமிழரசன்’, `காக்கி’ன்னு தொடர்ந்து போலீஸ் கேரக்டரிலேயே நடிக்கிறீங்களே..?’’

``நல்ல போலீஸ், கெட்ட போலீஸ்; லஞ்சம் வாங்குற போலீஸ், வாங்காத போலீஸ்னு போலீஸ் கேரக்டரை வெச்சு ஆயிரம் படங்கள் பண்ணலாம். அப்படி நான் நடிச்ச, நடிக்கிற போலீஸ் கேரக்டர்கள் எல்லாமே வேற, வேற மாதிரியான குணாதிசியங்களோடுதான் இருக்கும். அதனால, ஆடியன்ஸுக்கு ஒரே மாதிரி தெரிய வாய்ப்பில்லை.’’

`` `பிச்சைக்காரன்’ படத்துக்கு அப்புறம் உங்களுடைய சில படங்கள் சரியாகப் போகாததற்கு, நீங்க தெலுங்கு ஆடியன்ஸுக்கும் சேர்த்துப் படங்கள் பண்ணுனதுதான் காரணமா?’’

“அதுதான் காரணமா இருக்கும்னு நானும் நினைக்கிறேன். ஆனால், அதைத் தொடர்ந்து பண்ணுவேன். இப்போ பண்ற படங்களுமே ரெண்டு மொழிகளிலும்தான் ரிலீஸாகும்.

அக்னிச் சிறகுகள்
அக்னிச் சிறகுகள்

ஒரு படத்தோட வெற்றி தியேட்டர் வசூல்ல மட்டும்தான் இருக்குன்னு பலர் நினைக்கிறாங்க. தியேட்டர்ல சரியா போகாத சில படங்கள் டிவியோட டி.ஆர்.பி ரேட்டிங்ல நல்ல இடத்தில் இருக்கு. என்னோட `காளி’ படத்தை எப்போ டிவியில் போட்டாலும், டி.ஆர்.பி நல்லா இருக்குன்னு சொல்றாங்க. `திமிரு புடிச்சவன்’ படமும் அப்படித்தான். நான் பண்ணின எல்லாப் படங்களும் 100 சதவிகிதம் முழுமையான படமான்னு எனக்குத் தெரியாது. ஆனால், எல்லாமே எனக்குப் பிடிச்ச படங்கள்.’’