Published:Updated:

“ரஜினிக்கு ஒரு கருத்து இருக்கும்போது எனக்கு ஒரு கருத்து இருக்கக்கூடாதா?” - விஜய்சேதுபதி

Vijay Sethupathi
பிரீமியம் ஸ்டோரி
Vijay Sethupathi

மாமனிதன்’, ‘லாபம்’, ‘சங்கத் தமிழன்’, ‘கடைசி விவசாயி’, ‘துக்ளக் தர்பார்’, முத்தையா முரளிதரன் பயோபிக் என அரைடஜன் தமிழ்ப் படங்கள் ஒருபக்கம்...

“ரஜினிக்கு ஒரு கருத்து இருக்கும்போது எனக்கு ஒரு கருத்து இருக்கக்கூடாதா?” - விஜய்சேதுபதி

மாமனிதன்’, ‘லாபம்’, ‘சங்கத் தமிழன்’, ‘கடைசி விவசாயி’, ‘துக்ளக் தர்பார்’, முத்தையா முரளிதரன் பயோபிக் என அரைடஜன் தமிழ்ப் படங்கள் ஒருபக்கம்...

Published:Updated:
Vijay Sethupathi
பிரீமியம் ஸ்டோரி
Vijay Sethupathi

‘சைரா நரசிம்மா ரெட்டி’, ‘மார்கோணி மாத்தாய்’, ‘உப்பெனா’ என மற்ற மொழிப் படங்கள் இன்னொரு பக்கம்... சூறாவளியாகச் சுழன்று சுழன்று நடித்துவருகிறார் விஜய் சேதுபதி. இத்தனைக்கும் நடுவில் நீட் பிரச்னை தொடங்கி காஷ்மீர்ப் பிரச்னை வரை தன் கருத்துகளையும் தயங்காமல் பதிவு செய்யவும் தவறுவதில்லை. அவரை ‘சங்கத் தமிழன்’ படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“வெவ்வேறு படங்கள், தளங்கள்னு பயணிக்கிற உங்களுடைய மனநிலை இப்போ என்னவா இருக்கு?”

‘`அதைப் பத்திப் பெருசா யோசனை வந்ததில்லை. ஒவ்வொரு படமும் பிடிச்சுதான் பண்றேன். ஒவ்வொரு படத்துலேயும் என்னுடைய கதாபாத்திரத்துக்கு ஒரு மையப்புள்ளி இருக்கும். அதைத் தொட என்னால முடிஞ்ச வரைக்கும் முயற்சி செய்றேன். படத்துல நடிக்கிறது ஒரு ஊருக்குப் பயணம் போயிட்டு வர்ற மாதிரிதான். முதல் கொஞ்ச நாள்தான் அந்தக் கதாபாத்திரத்தைப் புரிஞ்சுக்க கொஞ்சம் டைம் தேவைப்படும். அதுக்கு அப்புறம் அப்படியே ஃப்ளோவுல போயிடும். நடிச்சு முடிச்சதுக்கப்புறம், மக்கள்கிட்ட எப்படிப் போய்ச் சேரும்ங்கிற பயம் இருக்கும். இப்போ ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கு ஆஸ்திரேலியாவுல விருது வாங்கப்போகும்போதுகூட, ‘இந்தப் படம் விருது வாங்கும்னு நினைச்சீங்களா’ன்னு கேட்டாங்க. எந்தப் படமும் விருது வாங்கணும்னு நினைச்சு நான் பண்ண மாட்டேன். என்னுடைய வேலையை நியாய தர்மத்தோடு பண்ணணும்னு நினைப்பேன் அவ்வளவுதான்.”

 “ரஜினிக்கு ஒரு கருத்து இருக்கும்போது எனக்கு ஒரு கருத்து இருக்கக்கூடாதா?” - விஜய்சேதுபதி

“ஆஸ்திரேலியாப் பயணம் எப்படி இருந்தது?”

“முதல் நாள் போகும்போது காயத்ரிக்கும், குமாரராஜாவுக்கும் மட்டும்தான் உட்கார்றதுக்கு இருக்கை இருந்தது. எனக்கு இல்லையேன்னு தேடும்போது, ‘உங்களுக்கு ஷாருக் கான் சார் பக்கத்துல இடம் இருக்கு வாங்க’ன்னு சொல்லி ஒருத்தர் வந்து கூட்டிட்டுப் போனார். ஷாருக் சார் என்னைப் பார்த்ததும் கட்டிப்பிடிச்சு, ‘நீங்க நல்லா நடிக்கிறீங்க’ன்னு சொன்னார். எனக்கு செம ஹேப்பி. மேடை நாகரிகத்துக்காக அப்படிச் சொல்லியிருப்பார்னு நினைச்சேன். அப்புறம் சாயங்காலம் விருது விழாவை முடிச்சிட்டுப் போகும்போது ‘நான் சும்மா விளையாட்டுக்கெல்லாம் சொல்லலை. உண்மையாவே நீங்க நல்லா நடிக்கிறீங்க’ன்னு சொன்னார். ரொம்ப நெகிழ்ச்சியாகிடுச்சு.”

“கமர்ஷியலான கதாபாத்திரங்களுக்கு மத்தியில் ‘கடைசி விவசாயி’ல முருக பக்தரா சின்ன பாத்திரத்திலும் நடிச்சிருக்கீங்களே?”

“அந்தக் கதாபாத்திரம் தெய்வத்துக்கு ரொம்ப நெருக்கமான ஆள். ரெண்டு கையிலேயும் பத்துக்கும் மேல வாட்ச் கட்டியிருக்கும்போது, காலத்தைக் கடந்தவன்னு என்னை நான் உணர்ந்தேன். அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்குறதுக்கு ரெண்டு, மூணு நாள் ஆகிடுச்சு. இயக்குநர் மணிகண்டன் எழுதுன விதம் ரொம்ப ஆழமாவும் அழகாவும் இருந்தது. அதை என்னால முடிஞ்ச வரைக்கும் குறைக்காம பண்ணிருக்கேன்னு நினைக்கிறேன். எனக்கும் மணிக்குமான உறவு பிலிம் மேக்கிங்கைத் தாண்டியது. நிறைய கருத்து வேறுபாடு எங்களுக்கு உள்ளேயும் ஏற்பட்டிருக்கு. ‘கடைசி விவசாயி’ படத்துலேயும் இது நடந்திருக்கு. ஆனா, அது அடுத்த நாளே சரியாகிடும்”

Vijay Sethupathi
Vijay Sethupathi

“எல்லா இடங்களிலும் உங்களுடைய வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்துக்கிறதுக்கான காரணம் என்ன?”

“வாழ்க்கையில எல்லாமே அனுபவம்தானே பிரதர். நான் ஏன் திரும்பத் திரும்பச் சொல்றேன்னா, எனக்கு சமூகத்துல இருந்துதான் இந்த அனுபவம் கிடைச்சது. அதனால, அடுத்த தலைமுறைக்கு இதைச் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இருக்கு. சொல்லப்போனா மரணம்கூட ஒரு அனுபவம்தான். அது கண்டிப்பா ஒரு நாள் புரியும். நானும் அதுக்குத்தான் வெயிட் பண்றேன். வாழ்க்கையில பணம் சம்பாதிக்கிறது, அதை இழந்து நிற்பது, உணர்ந்து நிற்பது, அதிலிருந்து மீண்டு எழுந்து வருவதுன்னு எல்லாமே அனுபவம்தான். இது அறிவுரையா இருந்தா மன்னிச்சிடுங்க.”

“முத்தையா முரளிதரன் பயோபிக் எப்படித் தொடங்குச்சு?”

“சின்ன வயசுல இருந்து நான் கிரிக்கெட்டே பார்த்தது இல்லை. முரளி சாரைப் பார்க்கும்போது இதை நான் அவர்கிட்ட சொன்னேன். என் ஃபிரெண்ட்ஸ் பந்து பொறுக்கத்தான் என்னை விளையாடவே கூட்டிப்போவாங்க. கிரிக்கெட்டுடைய அடிப்படைகூட எனக்கு முழுசா தெரியாது. கற்பனையான ஒரு கதைன்னா அதுக்கான கதாபாத்திரத்தை ஓரளவு ஜஸ்டிஃபை பண்ணிடலாம். ஆனா, இது ஏற்கெனவே இருக்கிற ஒருத்தரைப் பத்தின கதை. இதை நான் எப்படிப் பண்ணப்போறேன்னு தெரியலை. படம் முழுக்கவே கிரிக்கெட்டைப் பத்தினது மட்டுமல்ல, அவருடைய வாழ்க்கையும் முக்கியமான அங்கமா இருக்கும்.”

“இந்தப் படம் தொடர்பாக ஈழத்தமிழர்கள் உங்க மேல சில விமர்சனங்களும், நடிக்கக் கூடாதுங்கிற கோரிக்கையையும் முன் வைத்தார்களே?”

“என் மேல அன்பு வைக்கிறவங்க யாரையும் நான் இழக்க மாட்டேன். அப்படி இழக்கிற மாதிரியான ஒரு காட்சிகூட இந்தப் படத்துல இருக்காது. என் மேல அன்பு செலுத்தறவங்களைக் காயப்படுத்துற வேலையை நான் எப்படிச் செய்வேன்? நான் அவ்வளவு சுயநலமான ஆள் கிடையாது.

Vijay Sethupathi , Rashi Khanna
Vijay Sethupathi , Rashi Khanna

படம் வந்தா இது மக்களுக்குப் புரியும்னு நம்புறேன். இதையும் மீறி, காயப்படுத்துற மாதிரி நான் நடந்துகிட்டா, சின்ன குழந்தையா இருந்தாகூட மன்னிப்பு கேட்கிறதுக்கு நான் தயங்க மாட்டேன்.”

“ ‘சங்கத் தமிழன்’ தலைப்பை எதனால் தேர்ந்தெடுத்தீங்க?”

“இந்தப் படத்துக்கு முதல்ல வேற வேற டைட்டில் யோசிச்சிட்டிருந்தோம். ‘மாமனிதன்’ பட சமயத்துல ஸ்ரீகர் பிரசாத் சாருடைய உதவியாளர் ஒருத்தர் ஸ்பாட் எடிட்டிங்குக்காக வந்திருந்தார். ரொம்பத் திறமையா வேலை செய்தார். அவருடைய வேலை ரொம்பப் பிடிச்சுப்போய், ‘தம்பி உன் பேர் என்னப்பா’ன்னு கேட்டேன். ‘சங்கத் தமிழன்’னு சொன்னார். கேட்டவுடனே ரொம்ப நெருக்கமாகிடுச்சு. படத்துக்கு இது சரியா இருக்கும்ங்கிறதால, அதையே டைட்டிலா வெச்சிட்டோம். மண்ணையும் மக்களையும் நேசிக்கிற ஒரு ஆள்தான் கதாநாயகன். அவனுடைய பெயர் சங்கத் தமிழன். இது ஒரு பக்கா மாஸ் படம். துரோகம், காதல், நட்பு, பழிவாங்கல்னு இதுல எல்லாமே இருக்கு. மக்களை மகிழ்விக்கிற என்டர்டெயின்மென்ட் படமா இது இருக்கும்.”

“மற்ற மொழிப் படங்களில் நடிக்கிறீங்க. இங்கேயும் அங்கேயும் என்ன வித்தியாசம்?”

“மொழிதான் வித்தியாசம். தவிர, எல்லாமே கலைதான். எல்லா மொழிகளிலேயும் மனிதனைச் சுற்றி உறவுகள், அரசியல், ஜாதி, மதம், வன்மம்னு நல்லது கெட்டது எல்லாமே இருக்கும். இது அந்தந்தப் பகுதி மக்களுக்கு வேறுபடும், அவ்வளவுதான். ஆனா, கலையைப் பொறுத்தவரை இனம், மொழி மதம்னு எதுவும் இல்லை.”

“காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்த உங்களுடைய எதிர்ப்புக்குச் சிலர் கண்டனம் தெரிவிச்சதை எப்படிப் பார்க்கிறீங்க?”

“மொதல்ல அது எதிர்க்கருத்து இல்லை, நான் சொன்னது என்னுடைய கருத்து. ரஜினி சார் சொன்னது அவருடைய கருத்து. நான் பெரிய அறிவாளியெல்லாம் இல்லை. இது ஜனநாயக முறைப்படி நடந்திருக்கலாம்னுதான் சொல்றேன். இதைத் தாண்டி எனக்கு அரசியல் அறிவு இருக்கான்னு கேட்டீங்கன்னா அது பூஜ்ஜியம். நான் எல்லாமே தெரிஞ்சவன்னு பொய்யான பிம்பத்தை உருவாக்கிக்க விரும்பலை. அப்புறம் ‘ஏன்டா கருத்து சொல்ற’ன்னு கேட்டா ஒரு சாமானியனுக்குக் கருத்து சொல்ல உரிமை உண்டு. ஒரு சாமானியனா ஒரு கருத்தை நான் முன்வைக்கும்போது என்மேல ஏன் வெறுப்பை உமிழறாங்கன்னு தெரியலை.”

Vijay Sethupathi , soori
Vijay Sethupathi , soori

“உங்க குழந்தைங்க ரெண்டு பேருமே நடிக்க வந்துட்டாங்களே?”

“ ‘சிந்துபாத்’ல என் பையன் நடிக்கணும்னு இயக்குநர் அருண்தான் விருப்பப்பட்டார். அதனால நடிச்சான். ‘நானும் ரௌடிதான்’ படத்துல என் பையனை நடிக்க வைக்கணும்னு விக்னேஷ் சிவன் கேட்கும்போது, அவன் வேண்டாம்னுதான் சொன்னான். ‘இல்லடா, இது உனக்கு ஒரு அனுபவம்தான். இதை ப்ரெஷரா எடுத்துக்காத. எந்தச் சூழல்லேயும் என் பெயரைக் காப்பாத்தணும்னு அவசியம் இல்லை. நீ நீயா இருந்தாலே போதும்’னு சொன்னேன். அப்புறம்தான் நடிச்சான். என் பொண்ணும் ‘சங்கத்தமிழன்’ படத்துல நடிக்கணும்னு விருப்பப்படலை. ஆனா ‘பெண் குழந்தைங்கிறதால நாம வீக்கோ’ன்னு சின்ன ஏக்கம் அவகிட்ட இருந்தது. இதனால, என் பையனுக்குக் கிடைச்ச அனுபவம் பொண்ணுக்கும் கிடைக்கணும்னு தோணுச்சு. இந்த வாழ்க்கையோட பிரதானமான கடமையும் அனுபவமும் சக மனிதனைக் கையாள்வதுதான். இந்த அனுபவத்தை என் ரெண்டு பிள்ளைங்களும் அடையணும்னு ஒரு அப்பனா நான் விரும்புறேன். எதிர்காலத்துல இது அவங்களுக்குக் கண்டிப்பா உதவும்.”

“சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் கலவரங்களை எப்படிப் பார்க்கிறீங்க?”

``தேர்தல் சமயத்துலகூட ஒரு சாதிக்கலவரம் நடந்தது. அதுல யாராவது ஒருத்தர் பாதிக்கப்படுறாங்க. ஆனா, அந்த யாரோ ஒருத்தர் நம்மைப்போல குடிமக்கள்தானே. இது நாளைக்கு நம்ம வீட்டுலேயும் நடக்கலாம். எத்தனை முறை சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் மக்களைப் பிரிக்க நினைச்சாலும், அவங்களை ஒண்ணுசேர்க்கறதுக்கான முயற்சியை என்னால முடிஞ்ச வரைக்கும் பண்ணிட்டேதான் இருப்பேன். சாதி, மதத்தைக் கடந்து மனிதம் பேசணும்னுதான் என்னுடைய ரசிகர்களுக்கும் மன்றத்துக்கும் சொல்றேன்.’’