பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“இப்ப வரைக்குமே எனக்கு சினிமா புரியலை!” - விஜய் சேதுபதி

Vijay Sethupathi , Shruti Haasan
பிரீமியம் ஸ்டோரி
News
Vijay Sethupathi , Shruti Haasan

‘க்ளாரா... க்ளாரா...’ என ஒலிக்கும் இமானின் பாடல், சுற்றியெங்கும் சீரியல் லைட்டுகள், ஏராளமான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள்... நடுவில் விஜய்சேதுபதி - ஸ்ருதி ஹாசன். சூப்பர் டான்ஸ் மொமன்ட்ஸ் முடிந்ததும் விஜய்சேதுபதி- ஷ்ருதியிடம் பேசினோம்!

``விஜய்சேதுபதி - ஸ்ருதி காம்போவே ரொம்பப் புதுசு. படத்துல கெமிஸ்ட்ரி எப்படி?’’

``ரொமான்ஸ் அதிகம் இருக்குற படம் இல்லை `லாபம்.’ அதனால் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எல்லாம் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கும். இந்தப் படம் முழுக்கவே விவசாயத்தைப் பத்தியும், அதன் பின்னாடி இருக்கும் அரசியல் பத்தியும் தான் பேசும். ஜனநாதன் சார் ஒரு பெண்ணை அவர் படத்தில் நடிக்க வைக்கும்போது நிச்சயம் அது சும்மா வந்து போகும் கதாபாத்திரமா இருக்காது. வலிமையானதா இருக்கும். அதனால் ஸ்ருதிக்கு இந்தப் படத்தில் முக்கிய கேரக்டர். பிரமாதமா பண்ணியிருக்காங்க. அவங்க நடிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும்’’ என விஜய் சேதுபதி சொல்ல, லைனுக்கு வந்தார் ஷ்ருதி.

“இப்ப வரைக்குமே எனக்கு சினிமா புரியலை!” - விஜய் சேதுபதி
“இப்ப வரைக்குமே எனக்கு சினிமா புரியலை!” - விஜய் சேதுபதி

`` ‘லாபம்’ படத்துல உங்களுக்கு முக்கியமான ரோல்னு விஜய் சேதுபதி சொன்னார்... கேரக்டர் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க?’’

``பெண்களுடைய தனித்துவத்தை நிரூபிக்கிற மாதிரியான ஒரு கதாபாத்திரத்துல நடிச்சிருக்கேன். ஜனா சார் இதுல நிறைய லேயர்ஸ் வெச்சிருக்கார். ரொம்பப் பிடிச்சு நடிச்சிருக்கேன். படத்துல குறிப்பிட்டு எந்தக் காட்சியையும் சொல்ல முடியாது. நான் வர்ற எல்லாக் காட்சியுமே ரொம்ப ஹைலைட்டா இருக்கும். ‘ஹீரோயின்னா இப்படித்தான் இருக்கணும், பொம்பளைன்னா இப்படித்தான் இருக்கணும்’ங்கிற பொதுவான பார்வை இல்லாம, ஜனநாதன் சார் கேரக்டரை ரொம்ப அழகா எழுதியிருக்கார்’’ என்றதும், ‘`ஸ்ருதி கேரக்டர் பத்தி நான் ஒரு எக்ஸ்குளூசிவ் சொல்றேன்’’ என ஆர்வமானார் விஜய்சேதுபதி.

“இந்தப் படத்துல இவங்களோட பேர் ‘வேர்ல்டு ஃபேமஸ் க்ளாரா.’ தவிர, படத்துல லவ் ப்ரபோஸ் பண்ற மாதிரியான ஒரு சீன் ரொம்பவே க்யூட்டா இருக்கும். ஸ்ருதி அதை ஜஸ்ட் லைக் தட் சிறப்பாப் பண்ணிட்டாங்க’’ என்றார் வி.சே

`` நடிகர் விஜய் சேதுபதியா இல்லாமல், ரசிகர் விஜய் சேதுபதிக்கு இந்தப் படத்தில் பிடிச்ச விஷயம் என்ன?’’

``எஸ்.பி.ஜனநாதன் சார்தான். அவர் ரொம்பப் பெரிய அறிவாளி. `புறம்போக்கு’ படத்தை முடிச்சதும், `உங்களுடைய அறிவும், படைப்பும் நாட்டுக்கு ரொம்ப அவசியம், சீக்கிரமே அடுத்த படம் பண்ணுங்க’ன்னு அவர்கிட்ட சொல்லியிருந்தேன். ‘நாம கருத்து சொல்றதை யாரும் காசு கொடுத்துப் பார்க்க வர மாட்டாங்க, அது மக்களுடைய வேலையும் இல்லை. ஒரு படத்தை எளிமையா கொடுக்கணும். அதையும் என்டர்டெயின்மென்ட்டா கொடுக்கணும்’னு ஜனா சார் சொல்வார். விவசாயத்தைப் பத்தின அவருடைய பார்வையை ஒருநாள் சொன்னார். அந்தப் பார்வை எனக்கு ரொம்பப் பிடிக்க, `எப்போ வேணாலும் கூப்பிடுங்க சார், படம் பண்ணலாம்’னு சொல்லியிருந்தேன். அது இப்போ நடந்திட்டிருக்கு.’’

விஜய்சேதுபதி - ஸ்ருதி
விஜய்சேதுபதி - ஸ்ருதி

‘`இந்தப் படத்துக்காக விஜய் சேதுபதியிடம் நிகழ்ந்திருக்கும் மாற்றம் என்ன?’’

``பொதுவா நான் படபடன்னு பேசுவேன். இந்தப் படத்துல பொறுமையா வசனங்கள் பேசியிருக்கேன். பொதுவா ஜனா சார் படங்கள்ல வசனங்கள் அதிகமா கவனம்பெறும். அதைப் பக்குவத்தோட கையாண்டிருக்கேன். ஒரு வார்த்தையை எத்தனை முறை உபயோகிக்கலாம், அது ஆடியன்ஸுக்கு எப்படி ரீச் ஆகும்னு `புறம்போக்கு’ பட சமயத்துலயே அவர்கிட்டேருந்து கத்துக்கிட்டேன். அவர்கூட வொர்க் பண்றது, பிடிச்ச ஸ்கூல்ல பிடிச்ச டீச்சரோட இருக்கிற மாதிரிதான்.’’

‘`ஹீரோ, வில்லன்னு வெவ்வேறு கேரக்டர்ல நடிக்கிறீங்க... எதை நோக்கியது உங்கள் பயணம்?’’

``இப்ப வரைக்குமே எனக்கு சினிமா புரியலை. கொஞ்சம் குழப்பமாதான் இருக்கு. தொடர்ந்து ஒரே மாதிரி போயிட்டிருக்கிறதால சில சமயம் போர் அடிக்கிற மாதிரி இருக்கு. வேற ஏதாவது புதுசா பண்ணலாம்னு தோணுது. அதுக்கான முயற்சிகள் இப்போ போயிட்டிருக்கு. வேலையை வேற விதமா அப்ரோச் பண்ண ட்ரை பண்ணிட்டிருக்கேன். எப்படி இருக்கும்னு தெரியலை. எனக்கு 40 வயசு ஆகுது. இப்போதான் ஒரு நிதானத்தை அடைஞ்சிருக்கேன்.’’

“இப்ப வரைக்குமே எனக்கு சினிமா புரியலை!” - விஜய் சேதுபதி

``லாபம் படத்துடைய முதல் நாள் உங்களுடைய சொந்த ஊரான ராஜபாளையத்துலதான் ஆரம்பிச்சது. எப்படி இருந்தது அந்த ஃபீல்?’’

``என்னுடைய சொந்த ஊர்ங்கிறதால ராஜபாளையம் எப்பவும் ஸ்பெஷல்தான். நான் 5-வது வரைக்கும் அங்கதான் படிச்சேன். என்னுடைய திருமணத்துக்குப் பிறகு அதிகம் போக முடியாத சூழல். என்னுடைய சொந்தக்காரங்க அங்கதான் இருக்காங்க. சின்ன வயசுல ஆடிப் பாடிட்டிருந்த இடத்தை மறுபடியும் பார்க்கும்போது ஒருவித நெகிழ்ச்சியாகிடுச்சு. முன்னாடி காலி இடங்கள் நிறைய இருக்கும். இப்போ வீடுகள் நிறைய வந்து ஏரியாவே நெருக்கமாகிடுச்சு. இப்போ அதே ஊர்ல ஷூட்டிங்னு போகும்போது சுகமா இருக்கு. முதல் முறை சில படங்கள்ல நடிச்சிட்டு, பொண்டாட்டியை சொந்தக் கார்ல கூட்டிட்டுப் போகும்போது என்னுடைய படப் பாடலைப் போட்டாங்க. ரொம்ப கெத்தா இருந்தது. இப்போ ரியாலிட்டிக்குள்ள வந்துட்டேன். எல்லாமே வாழ்க்கையுடைய அங்கம்தானே!’’

``கமல் திரைத்துறையில கால் பதிச்சு 60 வருடங்கள் ஆகிடுச்சு. ஒரு மகளா ஸ்ருதியும், திரைக் கலைஞரா விஜய் சேதுபதியும் இதை எப்படிப் பார்க்கிறாங்க?’’

ஸ்ருதி : ``சின்ன வயசுல இருந்தே அப்பாவும் சினிமாவும் எனக்கு ஒண்ணுதான். சினிமாவைத் தொழிலா பார்க்காம இப்போ வரைக்கும் கலையா பார்க்கிறார். சினிமாமீது அலாதியான பிரியமும் அவருக்கு இருக்கு. எல்லா நேரமும் வீட்டுல சினிமாவைப் பத்திதான் பேசுவோம். ஒரு மகளா அவருடைய 60 வருஷப் பயணத்தைப் பார்த்து சந்தோஷப்படுறேன்.’’

“இப்ப வரைக்குமே எனக்கு சினிமா புரியலை!” - விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி : ‘`நான் 10-வது படிக்கும்போது `நம்மவர்’ பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க.நேர்ல அவரைப் பார்த்துட்டு வீட்டுக்குப்போய் ‘கமல் சாரைப் பார்த்துட்டேன்’னு பெருமையா சொன்னேன். அப்புறம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ பட ஷூட்டிங், கமல் சாருடைய வீட்டுலதான் நடந்தது. அப்போ 2-வது முறையா அவரைப் பார்த்தேன். பிறகு `ரம்மி’ பட சமயத்துலதான் அவர்கூட பேசுறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. `சூது கவ்வும்’ படம் பார்த்துட்டு டீமைப் பார்க்க வரச் சொல்லிக் கேட்டிருந்தார். அந்தச் சமயம் நான் ஊர்ல இல்லாததனால பார்க்க முடியலை. ஆடியன்ஸை முட்டாளாக்க விரும்பாத நடிகர் கமல் சார். அரசியலுக்கு அவர் வந்ததை நான் வரவேற்கிறேன். திரைக்கலைஞனாக அவரைப் பார்த்து எவ்வளவு பிரமிச்சேனோ, அதேபோல அரசியல்லயும் நடக்கும்னு நம்புறேன்.’’

‘ஷாட் ரெடி’ என்ற குரல் வர, மீண்டும் லாபத்துக்காக உற்சாகமாகத் தயாராகிறார்கள் விஜய்சேதுபதியும் ஸ்ருதியும்.