அத்தியாயம் 2
Published:Updated:

என் நிஜ ஹீரோயின்! - விஜய்

Exclusive Interview's - Vijay
பிரீமியம் ஸ்டோரி
News
Exclusive Interview's - Vijay

“எனக்கு சினிமாதான் எல்லாமே” - விஜய்

ரு மழைநாளில் நடந் தது சந்திப்பு! மரங்கள் அடர்ந்த சாலையோர மாக உள்ளடங்கி இருக்கிறது அந்த அடையாறு பங்களா. லேசான தாடி... மெல்லிய ஃபிரேமிட்ட கண்ணாடி.. பார்க்க படுபாந்தமாக இருக்கிறார் விஜய். " ஹாய்... ” சின்னதாகச் சிரிக்கிறார்.

தரைத்தளம் முழுக்க சினிமா வாசனை. முதல் தளம் ஏறினால் வீடு. " மாடிப்படி ஏறி மேல வந்துட்டார்னா, அவர் முழுக்க எனக்கும் சஞ்சய்க்கும் மட்டும்தான்! ''சிரிக்கிறார் விஜய்யின் மனைவி சங்கீதா. துறுதுறுவென அப்படியே விஜய்யை குட்டியாக ஒரு கலர் ஜெராக்ஸ் எடுத்த மாதிரி இருக்கிறான் ஜேசன் சஞ்சய்.

"சங்கீதா, விஜய்னு - எங்க ரெண்டு பேரையும் சேர்த்து சஞ்சய்னு சாருக்குப் பேர் வெச்சோம். அவர் ஜாலியாத் திரியட்டும். போட்டோ வேண்டாம்.. ப்ளீஸ் ” என்கிறார் விஜய்.

Exclusive Interview's - Vijay
Exclusive Interview's - Vijay

வி.ஜி.பி. கோல்டன் பீச் வாயிற் காவலரைக்கூடச் சுலபமாகச் சிரிக்க வைத்துவிடலாம். விஜய்யைப் பேச வைப்பது அதைவிடக் கஷ்டமான காரியம். ஆனால்.. ஆச்சரியம்... அன்று விஜய் நம்முடன் பேசினார்... அதுவும் அன்பு மனைவியுடன் சேர்ந்து!

" அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் என்னைப் பெரிய படிப்புப் படிக்க வெச்சு, ஒரு நல்ல வேலைக்கு அனுப்பிடணும்னு ஆசை. ஆனா, எனக்கு ப்ளஸ் - ஒன் படிக்கும் போதே சினிமாதான் கனவு.

அப்பா, அம்மா, அங்கிள்னு சுத்தி அத்தனை பேரும் சினிமால இருந்தாங்க. நான் பாடறது, டான்ஸ் ஆடறதுனு ஜாலியா இருந்தவன். ஒரே பையன்கிறதுனால செல்லம். தவிர அப்பா டைரக்ட் பண்ணின படங்கள்ல சின்னவயசு விஜயகாந்த்தா வெச்சிருக்கார். பிறகு சினிமா ஆசை வராதா?

ஒரு புதிய தலைமுறைக்கான சினிமாவில் பிரமாதமா வரமுடியும்னு நம்பிக்கை எனக்கு இருந்தது. கடைசியில அப்பா சம்மதிச்சார் ” என்கிறார் விஜய்.

" அப்படி அவர் எனக்காக எடுத்த படம், ' நாளைய தீர்ப்பு '. அது சரியாப் போகலை. ஆனா, ' என்னை ஒரு ஹீரோவாக்கியே தீருவேன்'னு அடுத்தடுத்துப் படங்கள் பண்ணினார். தடவையா ' ரசிகன்'தான் ஹிட். விஜய்னு ஒருத்தன் வந்திருக்கான்னு கடைசி ரசிகன்வரை கொண்டுபோச்சு.

அதுவரைக்கும் டான்ஸ், ஃபைட், பாடறதுனு ஜாலியான காரெக்டர்ஸ்தான் " வெட்கமாகச் சிரிக்கிறார்.

விஜய்யின் படங்கள் எல்லாம் இளமைக் கொண்டாட்டங்களாக இருந்த நேரத்தில் அவரைப் புதுவழியில் திருப்பிய படம் ' பூவே உனக்காக '. " அந்தப் படத்தில்தான் என் ரசிகர்வட்டத்தைத் தாண்டிப் பரவலாக மக்களிடம் போய்ச் சேர்ந்தேன். ' நம்ம வீட்டுப் பையன் போல இருக்கானே ' என்று மக்கள் என்னை ஆதரித்தது அதற்குப் பிறகுதான்! ” என்கிறார்.

" அதேபோல எனக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தது ' பாசில் ' சாரின் ' காதலுக்கு மரியாதை ', எழிலோட ' துள்ளாத மனமும் துள்ளும் ' - இந்த இரண்டும் வெவ் வேறு ஏரியாக்களில் என்னை நகர்த்தியது.

தவிரவும், சினிமாவில் சில விஷயங்களைத் தீர்மானிக்கவே முடியாது. ' சரக்கு வெச்சிருக்கேன் ', ' ஆல்தோட்ட பூபதி ' பாடல்களுக்கும் அந்தப் படங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனா, அந்தப் பாடல்கள் ரெண்டும் அவ்வளவு பாப்புலராயிடுச்சு. டி.வி - யில நேயர் விருப்பம் மாதிரி அடிக்கடி போட்டுட்டிருக் காங்க. கதைக்குத் தொடர்பில்லாத தேவையில்லாத ஒரு விஷயமானாலும் அது எவ்வளவு தூரம் மக்களால் ரசிக்கப் படுகிறது என்பதற்காகச் சொல்கிறேன். ஒரு டூத்பேஸ்ட், பவுடர் தயாரிக்கும்போதே எந்த மாதிரி கஸ்டமர் களுக்குனு தெரிஞ்சு பண்ணலாம். ஆனா, சினிமா அப்படி இல்லை. டிஸ்கொதே போற சிட்டி பையனுக்கும் பிடிக்கணும். கிராமத்து டீக்கடை மாஸ்டருக்கும் பிடிக்கணுமே! " என்கிறார் விஜய்.

" புதுசு புதுசா இளைஞர்கள் நடிக்க வர்றாங்களே... எப்படிச் சமாளிக்கப் போறீங்க? ” என்றால் பளீரெனச் சிரிக்கிறார்.

" ஹீரோக்கள் மட்டுமா வர்றாங்க. ஹீரோயின்ஸ், காமிராமென், டைரக்டர்ஸ்னு வருஷத்துக்கு முப்பது பேரு புதுசா வரத்தான் செய்வாங்க. தகுதியுள்ள வங்க ஜெயிப்பாங்க. போட்டின்னு ஒண்ணு இருந்தால்தான், ஆட்டம் சுவாரஸ்யமா இருக்கும். தவிர, என்னிக்கோ ஒரு நாள் நானும் அப்படி புதுமுகமா வந்தவன்தானே!”

Exclusive Interview's - Vijay
Exclusive Interview's - Vijay

ஏழைகளுக்கு இலவச அரிசி, மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், ரிக்ஷாக் காரர்களுக்கு மழைகோட்டு என்று விஜய் சேவை செய்வது விளம்பரப்படுத்தப் படுகிறது. படங்களிலும் ஒரு தலைவர் இமேஜ் தரப் பார்க்கிறார்கள். “ விஜய்க்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதா? ” என்றால்,

“ என் சம்பாத்தியம் இந்த ஜனங்க தந்த காசுதான். அதுல கொஞ்சத்தை அவங்களுக்காகவே செலவு செய்யறேன். ஒட்டுமொத்தத் தேசத்துக்கும் உதவி செய்யணும்னா நம்ம கையில அரசாங்கம் இருக்கணும். அது இல்லே.... அதான் என்னால முடிஞ்சதை இல்லாதவங்களுக்குச் செய்யறேன். மற்றபடி அரசியலைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அரசியலுக்கும் வரமாட்டேன். நானும் என் ரசிகர்களும் செய்கிற உதவிகளுக்கு அர்த்தம் அதுவல்ல... "

சில விநாடிகள் யோசனைக்குப் பிறகு அவரே தொடர்கிறார். " சினிமாவுக்கு நான் வந்தபோது, என்னை யாரும் ஊக்குவிக்க வில்லை. மூச்சுத்திணறித் திணறித் தான் நான் நீச்சல் கத்துக்கிட்டேன். இப்போ நடிக்கவும் நடனமாடவும் தெரியும்னு கொஞ்சம் நிரூபிச்சிருக்கேன். சினிமாவோட மற்ற பகுதிகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறேன். கதை எப்படிப் பண்றாங்க என்பதிலிருந்து காமிராவுல என்ன லென்ஸ் யூஸ் பண்றாங்க என்பதுவரை எல்லாமே தெரிஞ்சுக்கறேன்.

எனக்கு சினிமாதான் எல்லாமே ” என்று விஜய் பேசிக்கொண்டிருக்க, இமை கொட்டாமல் மெல்லிய புன்னகையோடு அதை ரசித்துக் கொண்டிருக்கிறார் சங்கீதா.

“ பொதுவா வீட்டில் அவர் தன் வேலை பற்றி எதுவும் பேச மாட்டாரு. இப்போ அவர் பேசறதைக் கேட்கவே ஆச்சரியமாயிருக்கு ” என்ற சங்கீதா தன்னைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார் :

“ கொழும்பு நகரில் வாழ்ந்த எங்கள் குடும்பம் லண்டனுக்குக் குடிபெயர்ந்தது. நான் படித்ததெல்லாம் லண்டனில்தான். பொழுது போக்கு என்றால் சினிமா பார்ப்பதுதான். எல்லா ஹீரோக்களையும் பிடிப்பது போலத்தான் அவரையும் எனக்குப் பிடித்தது. பார்ப்பேன், ரசிப்பேன். அவ்வளவுதான்!

ஒவ்வொரு விடுமுறையிலும் குடும்பத்தோடு தமிழ்நாட்டுக்கு வருவோம். அதுமாதிரி ஒருமுறை வந்தபோது, ஒரு பொதுநண்பர் மூலமாக விஜய்யோட அறிமுகம் கிடைத்தது. ஆனா, அந்த முதல் சந்திப்பிலேயே கண்களால் பரஸ்பரக் காதலைப் பரிமாறிக்கொண்டோம்! ” என்கிறார் சங்கீதா.

கண்களில் தொடங்கிய காதலை இரு வீட்டுப் பெற்றோரும் புரிந்துகொண்டு, பேசி முடித்து இணைத்துவிட்டார்கள் இருவரையும். " கல்யாணத்துக்கு முன்பு விஜய் வெறும் ஹீரோ! இப்போ அவர் என் கணவர். அதனால் அவர் படங்களைப் பார்த்து நேர்மையான விமரிசனத்தைச் சொல்வேன். சிம்ரனோடு இவர் ஆடிய ' ஆல் தோட்ட பூபதி ' எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி ஜோதிகாவோடு இவர் ஜோடி சேர்ந்த ' குஷி ' எனக்குப் பிடிக்கும் ” என்றார்.

“ விஜய் பெரிய ஹீரோங்கிறது வெளியிலதான். வீட்டுக்குள்ள கிச்சன்ல உதவி பண்றதுலேர்ந்து சஞ்சய்க்கு சாப்பாடு ஊட்டி வரை ஒரு நார்மலான குடும்பஸ்தரா எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்வார். அப்பாவும் பையனும் ஏதாவது மியூஸிக் போட்டுட்டு டான்ஸ் ஆட ஆரம்பிச்சா பார்த்துட்டே இருக்கலாம். ஆனா... அது எனக்கே எனக்கான ஸ்பெஷல் ஷோ! ” கலகலவெனச் சிரிக்கிறார்.

“ ஷூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வந்தா ஒரு தகப்பனா, ஒரு நல்ல கணவனா இருக்கிற பக்குவமும் நிதானமும் எனக்கு வந்திருக்குன்னா அதுக்கு சஞ்சய்யும் சங்கீதாவும்தான் காரணம்...... ' ' கண்களால் சிரிக்கிறார் விஜய்!

(10.11.2002 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)