Published:Updated:

``விபத்துக்கப்புறம் கோடி கோடியா கொடுக்கிற ஹீரோக்களே... முதல்ல இதைப் பண்ணுங்க!" - ஆர்.கே.செல்வமணி

RK Selvamani
RK Selvamani ( Photo: Vikatan / Ashok kumar.D )

`இந்தியன் 2' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக மூன்று பேர் இறந்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக `ஃபெஃப்சி' அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தன்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

``இதுக்கு முன்னாடியும் விபத்துகள் நேர்ந்திருக்கு. அதெல்லாம் தவிர்க்க முடியாததாகத்தான் இருக்கும். ஆனா, `இந்தியன் 2'வுல நடந்தது ஃபிலிம் தொழிலாளர்கள் மற்றும் வெளியாட்கள் இரண்டு பேர் சேர்ந்து வேலைபார்க்கும்போது ஏற்பட்ட புரிதலின்மையால நடந்த விபத்து. முன்னாடியெல்லாம் திரைத்துறைக்குத் தேவைப்படுற உபகரணங்கள் எல்லாம் அவுட்டோர் யூனிட் அசோசியேஷன்கிட்டே இருக்கும். எங்களுடைய உறுப்பினர்கள் இதுல வேலைபார்ப்பாங்க. அதனால, உபகரணங்களை எப்படிப் பயன்படுத்தணும்னு அவங்களுக்குத் தெரியும். அப்போ, இதுபோன்ற விபத்துகள் ஏற்படலை. கடவுள் புண்ணியத்துல மூணு மரணத்துடன் நின்னுருச்சு. இல்லைனா நூற்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பாங்க. ப்ரேக் நேரத்துல நடந்தனால எல்லாரும் சாப்பிடப் போயிருக்காங்க. அதனால பாதிப்பு குறைவா இருந்திருக்கு. இந்தச் சம்பவம் பெரிய சோகத்தையும் படிப்பினையையும் எங்களுக்குக் கொடுத்திருக்கு. இனிமேலும் இதுமாதிரியான புரிதல் இல்லாம வேலைபார்க்கிறதைத் தவிர்க்க முடிவுசெஞ்சிருக்கோம்."

``விபத்து நடந்ததைக் கேள்விப்பட்டவுடனே எந்த மாதிரியான துரித நடவடிக்கையை எடுத்தீங்க?"

இந்தியன் 2 விபத்து
இந்தியன் 2 விபத்து

``ஆம்புலன்ஸ்ல மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போனோம். பலருக்கும் முதலுதவி தேவைப்பட்டது; அதைச் செய்தோம். இறந்தவர்களுக்குத் தேவையான சில வழிமுறைகளைச் செய்தோம். இறந்தவர்களை இரவோடு இரவா கே.எம்.சி மருத்துவமனைக்கு போஸ்மார்ட்டம் செய்வதற்காகக் கொண்டு வந்தோம். காலையில ஆறு மணிக்கு மேல போஸ்மார்ட்டம் நடந்து முடிந்தவுடனே சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பார்வைக்கு உடல்களை வைத்து முறைப்படியான மரியாதை செலுத்தி, அவர்தம் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தோம். 24 மணிநேரமும் அவங்களுடனே இருந்தோம்."

``இந்தச் சம்பவம் தொடர்பாக கமல், ஷங்கர் யாரிடமாவது பேசுனீங்களா?"

``நாங்க இருந்தப்பவே கமல், ஷங்கர் சார் எல்லாருமே வந்துட்டாங்க. முக்கியமா ஷங்கர் சாரே மிகப்பெரிய அதிர்ச்சியில் இருந்தார். ஏன்னா, அவரே உயிர்பிழைத்தது நூழிலையில்தான். கமலும் அப்படித்தான். ரெண்டு, மூணு செகண்டுக்கு முன்னாடி வரைக்கும் கமல் விபத்துக்குள்ளான டென்ட்டுக்குள்ளே இருந்திருக்கார். ஒருவேளை அவரும் இருந்திருந்தா உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். ஷங்கர் சார்னால எதுவும் பேச முடியல. எல்லாரும் எல்லா சடங்குகளும் முடியுறவரைக்கும் கூடவே இருந்தாங்க. தயாரிப்பு நிறுவனம் பெரியதுங்கிறதால ஸ்பாட்ல எல்லா உதவிகளையும் உடனே செஞ்சு கொடுத்தாங்க. எங்க தேவைக்கு அதிகமான உதவிகளைப் பண்ணாங்க."

``போலீஸ் தரப்புல இருந்து ஷங்கர், கமலுக்கு சம்மன் அனுப்பட்டு இருக்கிறதை எப்படிப் பார்க்குறீங்க?"

ஷங்கர்
ஷங்கர்

``போலீஸின் நடைமுறை சம்மன் அனுப்புவதாக இருக்கலாம். ஆனா, இந்தச் சம்பவத்துக்கும் கமல் - ஷங்கருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இது ஒரு விபத்து அவ்வளவுதான். ஒரு பேருந்து விபத்துக்குள்ளாகும்போது, அதோட ஓட்டுநரைக் கைது செய்வது போலத்தான் இதைப் பார்க்கிறேன். பேருந்து சரியில்லாம இருந்திருந்தால் உரிமையாளரைக் கைது பண்ணியிருக்கலாம். எல்லாமே சரியாக இருக்கும்பட்சத்தில் உரிமையாளரைக் கைதுசெய்வது தவறு. மேலும், இதுல அவங்க எல்லாரும் பொறுப்பு எடுத்துட்டு துரிதமான காரியங்களைப் பண்ணாங்க. கமல் சாரைப் பொருத்தவரைக்கும் அவர் ஒரு நடிகர். என்ன நடந்ததுனு தெரிஞ்சிக்குறதுக்காக அங்க இருந்தவங்களை விசாரிக்கும் முயற்சியில் இப்படி பண்ணியிருந்தால் சரி. ஆனா, அவங்க மீது குற்றச்சாட்டு சொல்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. இயக்குநர் ஷங்கரும் அங்கே உயிர்பிழைத்தவர்கள் எப்படி தப்பித்தார்களோ அதே மாதிரிதான் தப்பிச்சிருக்கார். யாரும் யாரையும் அங்கே தள்ளிவிடலை."

``ஷூட்டிங் ஸ்பாட்டில் வேலைபார்க்கிற தொழிலாளர்கள் எந்த அளவுக்கு புரிதலுடன் இருக்கணும்?"

``தொழிலாளர்களுக்கு இரண்டு விதமான விழிப்புணர்வு அவசியம். ஒண்ணு, அவங்களை Equip பண்ணிக்கச் சொல்றோம். அதை அவங்க பண்ணறதில்லை. ரோட்டுல போலீஸ் சீட்பெல்ட் போடச் சொல்லி அறிவுறுத்துவாங்க. யாரும் அதைப் பண்ணாம போலீஸைப் பார்த்தா மட்டும்தான் போடுவாங்க. பல மரணங்களை சீட் பெல்ட் போட்டிருந்தா தவிர்த்திருக்கலாம். ஹெல்மெட் போடுறதும் அப்படித்தான். ஆனா, இதையெல்லாம் சுமையா நினைப்பாங்க. தொழிலாளர்கள் பலரும் பழைய வழிமுறையை ஃபாலோ பண்றதுனால, தற்காப்புக்கான விஷயங்களைப் பண்றதில்லை. உதாரணத்துக்கு, எலெக்ட்ரீஷியன் பலரையும் கையில கிளவுஸ் போட்டு வேலை பார்க்கச் சொன்னா, அதைப் பண்ணறதே இல்லை. சேஃப்ட்டி பெல்ட்கூட யாரும் போடுறதில்லை. கொஞ்சமாவது விபத்துகளைத் தவிர்க்க நாமளும் முயற்சி செய்யலாம். இதையெல்லாம் தொழிலாளர்கள் உணரணும். இதையெல்லாம் இப்போ கட்டாயமாக்கப் போறோம். அதேமாதிரி, எல்லாரையும் இன்ஷுரன்ஸ் எடுக்கச் சொல்லியிருக்கோம். நடக்குற சின்னச் சின்ன விபத்துகள் இதை இன்னும் வேகப்படுத்தியிருக்கு. நூறு சதவிகிதம் இதை மேம்படுத்த முயற்சி பண்றோம்.''

``ஹீரோக்களிடம் எந்த மாதிரியான உதவிகளை எதிர்பார்க்குறீங்க?"

``படம் எடுக்கிறதுக்கான ஸ்டூடியோக்கள் இங்கே குறைவுதான். இந்த நேரத்துல ஹீரோக்களிடம் வைக்கிற வேண்டுகோள் என்னன்னா, `நீங்க விபத்து நடந்து முடிஞ்சதுக்குப் பிறகு கோடி கோடியா பணம் கொடுக்குறனால பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பொருந்தார ரீதியா உதவி கிடைக்குமே தவிர, அந்தக் குடும்பத்தின் அப்பாவையோ, அண்ணாவையோ, தம்பியையோ யாராலும் திரும்பிக்கொடுக்க முடியாது. இங்கே இருந்த ஃபிலிம் ஸ்டூடியோவை டைடல் பார்க்கா மாத்திட்டாங்க. சிலவற்றை ரியல் எஸ்டேட் பண்ணி பில்டிங் கட்டிட்டாங்க. பிரசாத் ஸ்டூடியோ ஒண்ணு மட்டும்தான் இன்னும் இருக்கு. இதைக் காப்பற்ற வேண்டியது அரசின் கடமை. இந்த நேரத்துல அரசுக்கு வைக்கிற வேண்டுகோள், பிரசாத் ஸ்டூடியோவை மட்டுமாவது பாதுகாத்துக் கொடுங்க. அரசு 15 ஏக்கர் நிலத்தை ஸ்டூடியோ கட்டுவதற்காக ஒதுக்கிக் கொடுத்திருக்காங்க. அங்கே நீங்க உங்க பேர்ல அல்லது அப்பா, அம்மா, குழந்தைகள் பேர்ல ஸ்டூடியோ கட்டிக்கொடுத்தா வருங்கால தலைமுறைகளுக்கு உதவியா இருக்கும். பாதுக்காப்பான ஸ்டூடியோவுல தொழிலாளர்களும் இருப்பாங்க. தயவுசெய்து இதைப் பண்ணுங்க. இதை கோரிக்கையா, வேண்டுகோளா முன் வைக்கிறேன். தூக்கணாங்குருவி கூடு கட்டுற மாதிரி 10 கோடி செலவுல நாங்க ஸ்டூடியோவை கட்டியிருக்கோம். அரசின் உதவியோட இதைப் பண்ணியிருக்கோம். உங்களுடைய கடமையா இதைப் பண்ணுங்க."

``ஈ.வி.பி. ஸ்டூடியோவுல தொடர்ந்து விபத்துகள் நடந்துட்டு வருகின்ற நிலையில், இதைத் தடை செய்ய வாய்ப்பு இருக்கா?"

``விபத்துக்கப்புறம் கோடி கோடியா கொடுக்கிற ஹீரோக்களே... முதல்ல இதைப் பண்ணுங்க!" - ஆர்.கே.செல்வமணி

``நாங்க வைக்கிற கோரிக்கையை நடைமுறைக்குக் கொண்டு வரலேன்னா தடை செய்வோம். முன்னாடியெல்லாம் தயாரிப்பாளர்கள் ஸ்டூடியோ வெச்சிருந்தாங்க. அவங்களுக்கு எங்க மேல அபிமானம் இருக்கும். அங்க வேலை பார்ப்பவர்களை அவர்களுக்குத் தெரியும். ஆனா, இப்போ இருக்குற ஸ்டூடியோ உரிமையாளர்கள் தயாரிப்பாளர்கள் கிடையாது. அவங்களுக்கு நம்ம யார்னு தெரியாது. அதனால, எந்தப் பொறுப்பும் இல்லாம யாரோ செத்தா நமக்கு என்னன்னு இருக்காங்க. இது, கண்டிக்க வேண்டிய விஷயம். குறைந்தபட்சம் அங்கே என்ன நடந்ததுனு பார்த்திருக்கணும். முதலுதவிக்கு, மருத்துவமனையில் சேர்க்க உதவி பண்ணியிருக்கணும். எதுவுமே பண்ணாம பொறுப்பில்லாம இருக்காங்க. அதனால, எந்த ஸ்டூடியோவாக இருந்தாலும் பாதுகாப்பு உபகரணங்களை உறுதிசெய்தால்தான் சேர்ந்து வேலைபார்ப்போம்."

அடுத்த கட்டுரைக்கு