Published:Updated:

``விஷால் ஏன் நிதியுதவி எதுவும் பண்ணலை தெரியுமா?'' - ஆர்.கே.செல்வமணி

ஆர்.கே.செல்வமணி
News
ஆர்.கே.செல்வமணி

``எந்த சினிமாக்காரனும் திடீர்னு வானத்துல இருந்து குதிச்சவங்க கிடையாது. மக்களான உங்ககிட்ட இருந்து வந்த பிரதிநிதிகள்தான். எல்லாருமே ஒரு ஜான் வயித்துக்காகத்தான் உழைக்குறாங்க.''

சினிமா ஷூட்டிங் விரைவில் தென்மாவட்டங்களில் தொடங்க வாய்ப்பிருக்கிறது எனப் பேச்சுகள் வரும் நிலையில் ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் பேசினேன்.

``இந்த இக்கட்டான நேரத்துல மக்கள்ல சிலர் சினிமா ஷூட்டிங்கிற்கு என்ன அவசரம்னு கேட்டுட்டு இருக்காங்க. ஆனா, இந்த லாக்டெளன் நேரத்துல 24 மணி நேரமும் பல தளங்களின் வழியா சினிமாவைத்தான் பார்த்துட்டிருக்காங்க. தியேட்டர் இல்லாமலே இது நடந்துட்டிருக்கு. மக்களை ஓரளவுக்கு சினிமாதான் சந்தோஷமா வெச்சிட்டிருக்கு. அதனால, இந்த சினிமா மேல கொஞ்சம் அன்பும், அபிமானமும், அனுதாபமும் வெச்சிக்கிட்டா நல்லா இருக்கும். சினிமால இருக்குற எல்லாரும் கோடீஸ்வரன் கிடையாது. 50 பேர்தான் கோடீஸ்வரனா இருப்பான். மீதி இருக்கவங்க தினசரி கூலிங்க. தினமும் ஷூட்டிங் போனாதான் வீட்டுல உலை கொதிக்கும். எல்லாரையும் ரஜினி, கமல், விஜய், அஜித்தா நினைச்சிட்டிருக்காங்க. பழைய நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், நாகேஷ் மேல அன்பும், அபிமானமும் வெச்ச மாதிரி இப்ப இருக்குற சினிமாக்காரங்க மேலயும் வெச்சா நல்லாயிருக்கும். எந்த சினிமாக்காரனும் திடீர்னு வானத்துல இருந்து குதிச்சவங்க கிடையாது. மக்களான உங்ககிட்ட இருந்து வந்த பிரதிநிதிகள்தான். எல்லாருமே ஒரு ஜான் வயித்துக்காகத்தான் உழைக்குறாங்க.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இயற்கைப் பேரிடர் காலத்துலதான் முகம் தெரியாத பல மனிதர்களின் நல்ல உள்ளத்தைப் புரிஞ்சிக்க முடியும். கொரோனா வைரஸ் காலத்துலயும் இது நடந்திருக்கு. தினக் கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வேலை முடக்கத்தின் காரணமா ரொம்பவே பாதிச்சிருக்கு. சாதாரண மனுஷன்ல இருந்து டாடா பிர்லா வரைக்கும் சகமனிதர் ரொம்ப முக்கியம்னு எல்லோருக்கும் உணர்த்தி இருக்கு. நடிகர்கள் பலரும் உதவிகள் செஞ்சாங்க. இன்னும் சிலர் எந்த மாதிரியான உதவினு கேட்டு செஞ்சாங்க. பணம் இருந்தும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க முடியாம சிலர் கஷ்டப்பட்டாங்க. இதனால, ரஜினி சார் எங்களோட பேசிட்டு சில பொருள்களை வாங்கிக் கொடுத்தார்.

ரஜினி
ரஜினி

இந்தியா முழுக்க 6 திரைப்பட சம்மேளனம் இருக்கு. இந்த அமைப்புகள்லாம் இணைந்து இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு அமைச்சிருக்கோம். இதுல இருக்குற 90,000 தொழிலாளர்களுக்கு பிக் பஸாரோட 1,500 ரூபாய் கூப்பன் கொடுத்திருக்கோம். எல்லாரும் ஒரே நேரத்துல போனா பொருள்கள் வாங்குறதுல சில இடர்பாடுகள் இருக்கும்கிறதால ஒவ்வொரு யூனியனைச் சேர்ந்தவங்களுக்கும் குறிப்பிட்ட தேதியிட்டு பொருள்கள் வாங்க வழி செஞ்சோம். தவிர, இந்த கூப்பன் வாங்காம மிஸ்ஸானவங்க ஜூன் 15-க்குப் பிறகு வாங்கலாம்னு சொல்லியிருக்கோம்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்தீர்களே... என்ன சொன்னார்?

`` 'நாங்களும் சினிமா ஷூட்டிங்லாம் சீக்கிரம் ஆரம்பிக்கணும்னுதான் நினைக்கிறோம். ஆனா, பொது இடங்கள்ல ஷூட்டிங் ஆரம்பிச்சு இதுல இருந்து யாருக்காவது கொரோனா பரவினா சிக்கலாகிடும். மக்களுக்கும் சினிமாக்காரங்க மேல அதிருப்தி ஏற்பட்டுடும். உதாரணத்துக்கு ரஜினி - கமல் படத்தோட ஷூட்டிங் நடந்து அதனாலதான் அந்த ஏரியா மக்களுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டிருக்குனு நியூஸ் வந்தா நல்லா இருக்காது. அதனாலதான் ஷூட்டிங் ஆரம்பிச்சாலும் ரொம்ப கவனமா இருக்கணும்'னு சொல்லியிருக்கார்.

நாங்களும் பொறுமையா எல்லா சோதனைகளையும் பண்ணிட்டுதான் ஷூட்டிங்கை ஆரம்பிப்போம். அரசு தரப்புல அறிவிப்பு வந்தா சின்ன பட்ஜெட் படங்களுக்கான ஷூட்டிங்தான் முதல்ல தொடங்கும். அதுக்குப் பிறகுதான் பெரிய பட்ஜெட் படங்களோட வேலைகள் நடைபெறும். லாக்டௌன் முடிஞ்சதுக்கப்புறம்தான் எதுவா இருந்தாலும் சொல்ல முடியும். போக, செப்டம்பர் வரைக்கும் ஷூட்டிங் போக வேண்டாம்னு பெரிய பட்ஜெட் படங்களின் நடிகர்களும் சொல்லிட்டாங்க. அதனால, இப்ப சீரியல் ஷூட்டிங்கிற்காக அனுமதி கேட்டுட்டு இருக்கோம். ஒரு குறிப்பிட்ட வீட்டுக்குள்ளயோ, இல்ல இண்டோர் அரங்கத்துலயோ ஷூட்டிங்குக்கு அனுமதி கிடைச்சிட்டா போதும். இருந்தாலும் மக்கள் நிறைய நடமாடுற இடத்துல ஷூட்டிங் நடக்காம இருக்குறதுதான் நல்லது. ஏன்னா, வேடிக்கைப் பார்க்க வர்ற மக்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது."

முன்னாள் நடிகர் சங்க செயலாளர் விஷால் தரப்புல இருந்து ஏதாவது உதவிகள் வந்ததா?

விஷால்
விஷால்

``முதல் போன் விஷால்கிட்ட இருந்துதான் வந்தது. எல்லாத்தையும் பத்தி விசாரிச்சார். `சில காரணங்களால என்னோட அக்கவுன்ட் ஃப்ரீஸ் ஆகியிருக்கு. எல்லாம் சரியானதும் என்னால முடிஞ்ச நிதியுதவி பண்றேன்'னு சொல்லிருக்கார்."

இந்த இக்கட்டான சூழல்ல முதல்வர் நிதியுதவிக்கு ஃபெப்சி அமைப்பின் சார்பா நிதியுதவி கொடுத்திருக்கீங்களே?

``ஃபெப்சி அமைப்பில் இருக்கிற 25,000 உறுப்பினர்கள்கிட்ட இருந்து ஒரு ரூபாய் திரட்டினோம். அதுல இருந்து வந்தது தவிர, 23 சங்கங்களும் இருக்கு. அதுல இருந்து 50,000 கொடுத்தாங்க. இப்படி மொத்தமா 10,25,000 ரூபாய் கிடைச்சது. இது எல்லாத்தையும் ஃபெப்சி அமைப்பின் ட்ரஸ்ட் மூலமா திரட்டினோம். மக்களுக்கு உதவும் விஷயத்துல ஒவ்வோர் உறுப்பினரின் பங்கும் நிச்சயமா இருக்கணும்னு நினைச்சு இதை செஞ்சு முடிச்சோம். இந்த இக்கட்டான சூழல்ல ஒவ்வோர் உறுப்பினரும் எங்களுக்கு ஆதரவா இருந்தாங்க."

காப்புறுதி மாதிரி இயற்கைப் பேரிடரைச் சமாளிக்க ஏதாவது முன்னேற்பாடுகள் பண்ற எண்ணம் இருக்கா?

``நிச்சயமா இருக்கு. இந்த மாதிரியான நேரத்துல திரைத்துறையைச் சேர்ந்த எல்லோரும் தானா முன் வந்து உதவி செய்றாங்க. இருந்தாலும் இது மாதிரியான பேரிடரைச் சமாளிக்க சின்ன நடிகர்கள்ல ஆரம்பிச்சு பெரிய நடிகர்கள் வரைக்கும் தங்களோட சம்பளத்துல ஒரு சதவிகிதத்தை ட்ரஸ்ட்டுக்கு நன்கொடையா கொடுக்கணும்கிற தீர்மானத்தை நிறைவேற்றப்போறோம். இது கட்டாயம் பெரிய தொகையா வரும். அதாவது நூறு ரூபாய் சம்பளம் வாங்குறவர் ஒரு ரூபாயும், ஆயிரம் வாங்குறவர் நூறு ரூபாயும், கோடி ரூபாய் சம்பளம் வாங்குறவர் லட்ச ரூபாயும் கொடுக்கணும்கிற மாதிரி ஏற்பாடு பண்றோம். திரைத் தொழிலாளர்கள் நலனுக்காக இதைச் செய்யலாம்னு இருக்கோம்" என்கிறார் ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி.