ஆயிரம் ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் கும்பலாக நின்றாலும் படத்தில் தனித்து தெரிவார் தவசி.
மதுரை வட்டார வழக்கு, ஆச்சர்யப்படுத்தும் உடல்மொழி, தீர்க்கமான பார்வை, முரட்டு உடல் வாகு, மிரட்டும் மீசை என கம்பீர தோற்றம்.
அப்படிப்பட்ட பெருமைவாய்ந்த சிறந்த துணை நடிகரான தவசி, இன்று மருத்துவமனை அறையில் தனியே படுத்திருந்தும் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.
நீர் உருஞ்சப்பட்ட வாழை இலை போல சுருண்டு கிடக்கிறார். சினிமாவில் வள வளவென்று பேசி நடித்தவருக்கு இன்று பேச முடியவில்லை. கையெடுத்து கும்பிடுகிறார்.
கிராமத்துக் கோயில் பூசாரி, குறி சொல்லும் கோடங்கி, கட்டப்பஞ்சாயத்து செய்யும் பந்தா பார்ட்டி, வேலை வெட்டிக்குச் செல்லாமல் மந்தையில் படுத்துக் கிடக்கும் ஊருக்கு நாலு பேரில் ஒருவர் என நாம் கிராமத்தில் பார்த்த கேரக்டருக்கு அப்படியே பொருந்திப் போனவர் தவசி.

30 வருடங்களாக திரைப்படத்துறையில் இருந்தும் கடந்த 10 வருடங்களாகத்தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி வந்தார் தவசி. அதிலும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் அவருடைய நடிப்பும், வசனம் வெளிப்படுத்திய விதமும் மக்களை ரொம்பவும் ஈர்த்தது. 'கருப்பன் குசும்புக்காரன்' என்ற ஒற்றை வார்த்தை, அனைவராலும் இன்றும் உச்சரிக்கப்படுகிறது. நாட்டில் நடக்கும் பல சம்பவங்களில் பொருத்தி பார்க்கப்படுகிறது.
இப்படி, படத்தில் ஓரிரண்டு காட்சிகளில் மனதில் பதியும்படி வந்துவிட்டு சென்ற தவசி, தற்போது புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி மெலிந்து உருமாறி மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசையால் குடும்பத்தை கூட கவனிக்காமல் தேனி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு சென்றவர், கும்பலில் ஒருவனாக அவ்வப்போது நடித்த மன திருப்தி அடைந்த நிலையில் பாரதிராஜாவின் 'கிழக்கு சீமையிலே' படத்தில் அறிமுகம் ஆனார். அதிலிருந்து நடிக்கத் தொடங்கியவர், 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சில வருடங்களாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.
ஆண், பெண் என இரண்டு பிள்ளைகளோடு மனைவி அங்கம்மாள் திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறையில் வசித்து வந்தார்.
நடிப்பதில் கிடைத்த வருமானம் சென்னையில் தங்குவதற்கும், சாப்பிடுவதற்குமே போதுமானதாக இருந்திருக்கிறது. சேமிப்பு என ஏதுமில்லை.

இந்த நிலையில்தான் கடந்த வருடம் வாகன விபத்தில் காயமடைந்தார். அதற்கு அப்போது சிகிச்சை எடுத்து வரும்போதுதான் அவருக்கு உணவுக்குழாயில் புற்று நோய் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இருந்த பணத்தை வைத்து இதற்கு முன்பு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்திருக்கிறார். எந்த முன்னேற்றமும் இல்லை. காசும் காலியாகிவிட்டது.
இந்த நிலையில்தான் திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏவும் திரைப்படத்துறையை சேர்ந்தவரும் டாக்டருமான சரவணன் ஞாபகம் வந்துள்ளது. மதுரை சரவணா மருத்துவமனைக்கு கடந்த 11-ம்தேதி கொண்டு வந்து சேர்த்துள்ள்னர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மிக மோசமான நிலையில் சேர்க்கப்பட்ட தவசிக்கு டாக்டர் சரவணன் சிகிச்சை அளித்து வந்தார். இதைத் தொடர்ந்து தவசியின் மோசமான நிலை பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. நடிகர் சசிக்குமார், சிவகார்த்திகேயன், சூரி, ரோபோ சங்கர் என திரைப்படத்துறையை சேர்ந்தவர்களும், அவர் மீது அன்பு கொண்ட முகம் தெரியாத பலரும் அவர் குடும்பத்தினருக்கு உதவி வருகிறார்கள்.

குடும்பத்துக்குத் தேவையான அளவு கூட வருவாயை தேடித்தராமல் கடந்த 30 ஆண்டுகளாக குடும்பத்தை மறந்து சினிமா சினிமா என்று வாழ்ந்தவரை, பத்துக்கு பத்து அளவுள்ள மருத்துவமனை அறை முடக்கியுள்ளது. அவர் மனைவியும், மகளும், உறவினர்களும் அருகிலிருந்து கவனித்து வருகிறார்கள்.
"முன்பை விட இப்போது அவரிடம் முன்னேற்றம் தெரிகிறது. தொடர் சிகிச்சை அளித்து வருகிறோம். அவர் மீண்டு வந்து மக்களை முன்பு போல் மகிழ்விக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்'' என்கிறார் டாக்டர் சரவணன். அப்பா மீண்டு வந்துவிடுவார் என நம்பிக்கையோடு மருத்துவமனையிலேயே காத்திருக்கிறார் மகள்!
கருப்பன் குசும்புக்காரன். மீண்டு வருவான்!
நடிகர் தவசிக்கு உதவ முன்வரும் வாசகர்கள் `help@vikatan.com’ என்ற மெயில் ஐ.டி-க்கு தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம். உங்கள் உதவிகளை விகடன் ஒருங்கிணைக்கும்.