Published:Updated:

`61 நாள்கள்.. 72 பேர்; ஆப்பிரிக்காவில் சிக்கிய படக்குழு!’ - சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு 

ஆப்பிரிக்காவில் சிக்கிய படக்குழுவினர்
ஆப்பிரிக்காவில் சிக்கிய படக்குழுவினர்

ஆப்பிரிக்க நாடான டிஜிபோட்டி என்ற நாட்டுடன் இணைந்து மலையாளத் திரைப்படக் குழுவினர் முதல் முறையாக திரைப்படம் தயாரிக்கிறார்கள். இதற்கான படப்பிடிப்புக்குச் சென்ற திரைப்படக் குழுவினர் அங்கிருந்து திரும்பி வர முடியாமல் தவித்தார்கள்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக இருப்பது, டிஜிபோட்டி. சோமாலியா நாட்டின் அருகில் அமைந்துள்ள இந்த நாட்டுடன் கலாசார ஒப்பந்தம் செய்துகொண்டு மலையாளத் திரைப்படக் குழுவினர், ‘டிஜிபோட்டி’ என்ற பெயரில் மலையாளத் திரைப்படம் எடுக்கிறார்கள். 

டிஜிபோட்டி சினிமா குழுவினர்
டிஜிபோட்டி சினிமா குழுவினர்

டிஜிபோட்டி நாட்டில் கடந்த 10 வருடங்களாக கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுவரும் ஜாபி சாம் என்பவரின் மனைவி ஸ்வீட்டி ஜாபி தயாரிக்கும் படத்தை எஸ்.ஜே.சினு இயக்குகிறார். கதாநாயகனாக அமித் சக்கலக்கல் என்பவரும் கதாநாயகியாக சிம்லாவைச் சேர்ந்த ஷாகும் ஜெய்ஸ்வால் என்பவரும் நடிக்கிறார்கள்.

சோர்வடைவதில் இருந்து தப்பிக்க வழி! - க்வாரன்டீனில் இருப்பவர்களுக்கு புத்தகம் வழங்கும் காவல்துறை

முக்கிய நடிகர்களுடன் ஜார்ஜ் என்ற 18 மாதக் குழந்தையும் நடக்கிறது. அதனால் அந்தக் குழந்தையின் தாய், பாட்டி மற்றும் திரைப்படக் குழுவினர் என மொத்தம் 72 பேர் டிஜிபோட்டி நாட்டில் சிக்கிக்கொண்டார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக மார்ச் 5-ம் தேதி கேரளாவில் இருந்து 72 பேர் கொண்ட குழுவினர் அங்கு சென்றார்கள். ஏப்ரல் 19-ம் தேதி அவர்கள் படப்பிடிப்பை முடித்து விட்டனர். ஆனால், கொரோனா நோய்த் தொற்று அச்சம் காரணமாக அனைத்து நாடுகளுக்கான விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

உணவுக்காக மட்டும் ஒவ்வொரு நாளும் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலையில் திரைப்படக் குழு இருந்தது. தயாரிப்பாளருக்குச் சொந்தமான ஒரு காட்டேஜில் அனைவரும் தங்கிக் கொண்டார்கள். தங்களை விரைவாக மீட்டுச் செல்லுமாறு அவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்கள். 

திரைப்படக் குழுவினர்
திரைப்படக் குழுவினர்

ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்களை மீட்பதில் சிக்கல் நீடித்தது. இந்த நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் திரைப்படக் குழுவினர் இன்று (5-ம் தேதி) மாலை தனி விமானம் மூலம் கொச்சி வந்து சேருகிறார்கள். 

61 நாள்களுக்குப் பின்னர் சொந்த ஊருக்கு வரும் படக்குழுவினரை வரவேற்க உறவினர்கள் ஆர்வமாக இருந்தபோதிலும், அனைவரும் தனிமைப்படுத்தலுக்குப் பின்னரே வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு