Published:Updated:

ஒரு முறையல்ல, இரு முறையல்ல... 550 முறை ரீ-ரிலீஸான இந்தக் கன்னடப் படத்தைத் தெரியுமா?

ஓம்
ஓம் ( கன்னடப் படம் )

அன்றைய காலகட்டத்தில் நிஜ தாதாக்களாக இருந்தவர்களும் இந்தப் படத்தில் மாஃபியாக்களாக நடித்திருக்கிறார்கள்(!) படத்தில் நடிப்பதற்காக அவர்களை பெயிலில் எடுத்தது சர்ச்சையைக் கிளப்பியது.

ஒரு படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது என்பதே அரிதான விஷயம். அதுவும் ஹவுஸ்ஃபுல் என்பது அரிதிலும் அரிதான விஷயம். ஆனால், ஒரு படம் 550 முறைக்கு மேல் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு அத்தனை முறையும் ஹவுஸ் ஃபுல் ஆகிறது என்பதை என்னவென்று சொல்ல? அதிசயம், அற்புதம்!

80 மற்றும் 90-களில் நிறைய `ஆங்க்ரி யங் மேன்' படங்கள் வெளியாகி ஹீரோயிஸத்தை வளர்த்துக்கொண்டிருந்தன. அந்த நேரத்தில்தான் இந்தியில் ராம் கோபால் வர்மா இயக்கிய `சத்யா' வெளியானது. மும்பையின் நிழல் உலகம், மாஃபியாக்கள் பற்றி பேசிய இப்படம், இந்தியா முழுக்க பெரும் வரவேற்பை பெற்றது. `ஆங்ரி யங் மேன்' வகையறா சினிமாக்கள் வளர்த்துகொண்டிருந்த ஹீரோயிஸத்தை, `சத்யா' போன்ற கேங்ஸ்டர் வகையறா சினிமாக்கள் கைப்பற்றின, காப்பாற்றவும் செய்தன. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என எல்லா மொழிகளிலும் புதுப்புது கேங்ஸ்டர் சினிமாக்கள் உருவாகின. அந்தப் படம் கன்னடத்தில் உருவான படம்தான் `ஓம்'.

ஓம்
ஓம்

1995-ல் வெளியான `ஓம்' படத்தை, கன்னட சினிமாவுலகின் கல்ட் இயக்குநரும் நடிகருமான உபேந்திரா இயக்கியிருந்தார். அதுவரை சாக்லேட் பாய் பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த சிவராஜ் குமார், `ஓம்' படத்தில் கேங்ஸ்டராக அவதரித்தார். கன்னட சினிமா ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், `கல்ட் க்ளாஸிக்' என இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது. ரிலீஸான தேதியிலிருந்து இன்று வரை இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வீதம் 550-க்கும் மேல் இப்படம் ரீ-ரிலீஸாகி வருகிறது. பெங்களூரில் உள்ள கபலி எனும் திரையரங்கில் மட்டும் 30 முறை ரிலீஸாகியிருக்கிறது `ஓம்'. இதைவிட ஆச்சர்யம் என்னவென்றால், ஒவ்வொரு முறையும் அரங்கம் ஹவுஸ் ஃபுல் ஆவதுதான்!

கோவில் பூசாரியின் மகன் சத்யா. ஒரு பெண்ணின் மீதான காதலால், வாழ்க்கை தடம் மாறி, ரௌடியாக மாறுகிறார். அதற்குப் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. அதுவரை வந்த கன்னட சினிமாக்களிலேயே கர்நாடகாவின் நிழல் உலக சாம்ராஜ்யத்தை நிஜத்துக்கு நிறையவே நெருக்கமாகக் காட்டியிருந்த படம் இதுதான். கூடவே, அன்றைய காலகட்டத்தில் நிஜ தாதாக்களாக இருந்த தன்வீர், ஜேதரகள்ளி, கிருஷ்ணப்பா, பக்கினகண்ணு, ராஜேந்திரா ஆகியோரும் படத்தில் மாஃபியாக்களாக நடித்திருக்கிறார்கள்(!). இவர்கள் இப்படத்தில் நடிக்க வேண்டி, பெயிலில் எடுத்துவரப்பட்டது கூடுதல் தகவல். இதனால் படம், பல சர்ச்சைகளை சந்தித்தது. மேலும், இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை தணிக்கைக் குழு நீக்கச்சொல்லி, சான்றிதழ் தர மறுத்தது. ஆனால், எல்லாத் தடைகளையும் கடந்து 1995-ம் ஆண்டு மே, 19-ம் தேதி ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கன்னட சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் எனப் பல சாதனைகளையும் நிகழ்த்தியது.

ஓம்
ஓம்

1995 -1996, கர்நாடக மாநில சினிமா விருதுகளையும் வென்றது. சிறந்த நடிகர், நடிகை, திரைக்கதை ஆசிரியர், ஒளிப்பதிவாளர் என நான்கு விருதுகள். 2015-ம் ஆண்டு ரூபாய் 10 கோடிக்கு, தனியார் சேனல் ஒன்றுக்கு ஒளிபரப்பு உரிமம் விற்கப்பட்டது. 20 ஆண்டுக்கால பழைய படம் ஒன்று, அத்தனை ரூபாய்க்கு விலைபோனதும் அதுவே முதன்முறை. `ஓம்', கன்னட சினிமாவுலகின் எவர்கிரீன் ப்ளாக் பஸ்டர் ஹிட்!

``அமெரிக்காவுல பண்றதை தமிழ்ல ஏன் பண்ண மாட்டேங்கிறாங்கனு ஏக்கமா இருக்கு!" - சித்தார்த்
அடுத்த கட்டுரைக்கு