Published:Updated:

"காசு வாங்காம வைத்தியம் பார்ப்பார் என் டாக்டர்... உங்களுக்கும் பார்ப்பார்!" - 'விவசாயி' கிஷோர்

முதலில் நான் ஒரு விவசாயியாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினேன். எனக்கு நிரந்தரமான தொழில் விவசாயம்தான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பாசக்கார அப்பா, பரிதவிக்கும் அண்ணன், நியாயமான வில்லன், கச்சிதமான கதாநாயகன் என எல்லா கதாபாத்திரத்திலும் அலட்டிக்கொள்ளாது அசரடிப்பவர் நடிகர் கிஷோர். 44 வயதிலும் சேஸிங் ஃபைட்டில் ஃபிட்டாக திரையில் பொறி பறக்கவைக்கும் கிஷோரிடம், மனஅழுத்தத்தை அவர் எதிர்கொண்ட விதம் மற்றும் ஃபிட்னஸ் குறித்த கேள்விகளை முன்வைத்தோம்.

செல்லப்பிராணியுடன் நடிகர் கிஷோர்
செல்லப்பிராணியுடன் நடிகர் கிஷோர்

"நடிப்பு, விவசாயம்... இரண்டையும் எப்படிக் கையாள்கிறீர்கள்?"

மாடு வளர்க்கும் நடிகர் கிஷோர்
மாடு வளர்க்கும் நடிகர் கிஷோர்

"நான் ஒரு விவசாயியாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினேன். போட்டோகிராபி மேல ஆர்வம் இருந்த காரணத்தால் பயிற்சி வகுப்புக்குப் போனேன். அங்கே கிடைத்த நண்பர்கள் மூலமாகத்தான் எனக்குச் சினிமா வாய்ப்பு கிடைத்தது. சினிமா வாய்ப்புகள் அதிகம் வர ஆரம்பித்த பிறகும் விவசாயத்தை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். என்னால் முடிந்தவரை இரண்டையும் சரியாகக் கையாண்டு வருகிறேன். பயிரிடும் காலத்தில் நிலத்தில் வேலை இருந்ததால், அப்போது வந்த சில பட வாய்ப்புகளைத் தவறவிட்டிருக்கிறேன். காரணம், அந்த நேரங்களில் அதிகமான நாள்கள் படப்பிடிப்புக்குச் செல்லமுடியாது. என் சூழலைப் புரிந்துகொள்பவர்களின் படத்தில் நிச்சயம் இருப்பேன். எனக்கு நிரந்தரமான தொழில் விவசாயம்தான்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

" 'விவசாயி கிஷோர்' என்று சொல்லும்போது எப்படி உணர்கிறீர்கள்?"

"விவசாயி என்று மற்றவர் சொல்லிக் கேட்கும்போது எனக்குள் தன்னம்பிக்கை மலர்கிறது. தோட்டத்தில் விவசாயியாக இருக்கிறபோது, 'நமக்கு மேலும் யாரும் இல்லை, கீழும் யாரும் இல்லை. எல்லோரும் சமம்' என்பதை என்னுடைய நிலம்தான் எனக்கு உணர்த்தியிருக்கிறது. என் தோட்டத்தில் இருக்கும் புழுவும் பூச்சிகளும் போல நானும் ஓர் உயிரினம், அவ்வளவுதான். அங்குதான் என் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது. நடிகர் என்பது என் வாழ்க்கையின் மற்றொரு பரிமாணம்... அவ்வளவுதான். சரியாக வாழவேண்டிய வாழ்க்கை என்று நான் நினைப்பது விவசாய வாழ்க்கையைத்தான். இயற்கையுடன் சேர்ந்து நாம் வாழும் வாழ்க்கை வேறுமாதிரியான ஓர் உலகத்தைக் காட்டும். வருமானத்திற்காக மட்டும் விவசாயம் பார்க்கக் கூடாது."

"இயற்கை விவசாயத்தைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?"

குடும்பத்தினருடன் நடிகர் கிஷோர்
குடும்பத்தினருடன் நடிகர் கிஷோர்

"நாம் வாழ்வதற்கு இந்த பூமியில் எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே போல பூச்சிகளும் புழுக்களும் வாழ உரிமை இருக்கிறது. பின்பு ஏன் ரசாயன பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்க வேண்டும்? அப்படி ரசாயனம் தெளித்ததைச் சாப்பிடுவதும் நாம்தானே! நிலத்தில் மண்புழு இருந்தால் மண் அதிகமான வளமுடன் இருக்கிறது என்று அர்த்தம். ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் மண்புழுவும் நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்ந்து அழிந்துவிடுகின்றன. இதனால் உர நிறுவனங்களுக்குத்தான் லாபமே தவிர, விவசாயிகளுக்கு அல்ல. இயற்கை விவசாயத்தைச் சுயநலத்துக்காக மட்டும் செய்யவில்லை. நாம் இப்போது உபயோகப்படுத்தும் மண்ணை, எதிர்கால சந்ததியினருக்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டுப் போகப்போகிறோம். அதை ஆரோக்கியமானதாகக் கொடுக்கலாமே என்ற எண்ணத்தில் இயற்கை விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன்."

"உங்கள் இளமையின் ரகசியம் என்ன?"

"தினமும் யோகா, தியானம் கட்டாயம் செய்துவிடுவேன். இதுபோக விவசாய வேலைகளைச் செய்யும்போதே, உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி கிடைத்துவிடுகிறது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்திலும் பயிற்சி செய்வேன். இளமை என் முகம் என்றால் அதன் கண்கள் உடற்பயிற்சியும் தியானமும்தான். உணவுப் பழக்கவழக்கங்களும் மிக அவசியமானது. அதையும் முறையாகப் பின்பற்றி வருகிறேன்."

"பொதுவாக 40 வயதைக் கடக்கும்போது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த பயம், யோசனை இருக்கும். உங்களுக்கு எப்படி?"

"என் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து நான் எதுவும் யோசிக்க முடியாது. அதுபற்றி பிள்ளைகள்தான் முடிவுசெய்ய வேண்டும். சொல்லப்போனால் நானே என் பிள்ளைகளிடம் இருந்துதான் அதிகமாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னுடைய எதிர்காலத்தை நான் எப்படி நிர்ணயித்தேனோ, அதுபோல என் பிள்ளைகளும் அவர்கள் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். 'நீ இப்படி ஆகணும், இதுதான் படிக்கணும்' என்று நம் எண்ணங்களை அவர்களுக்குள் திணிக்கக்கூடாது. பிள்ளைகளே என்னிடம் 'எனக்கு இப்படி ஆகணும்னு ஆசை' என்று சொன்னால் அப்பா என்ற முறையில் அதைத் தவறாமல் மறுக்காமல் நிறைவேற்றி வைப்பேன்."

"மனஅழுத்ததுக்கு எப்படி தீர்வு தேடுகிறீர்கள்?"

"என் வாழ்க்கையில் அதிகமான மனஅழுத்தங்கள் வந்ததே இல்லை. அதுவும் நடிக்கும்போது மனஅழுத்தம் என்ற வார்த்தையைக்கூட என்னால் உணர முடியாது. நடிப்பதை எப்போதுமே எளிமையான வேலையாகத்தான் பார்க்கிறேன். மனஅழுத்தத்தைப் போக்குறதுக்கான ஒரே வழி, அதை நம்மிடம் அனுமதிக்கவே கூடாது என்பதுதான். அப்படியும் மனசுக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்னோட வயல்தான் எனக்கு மருத்துவர். இயற்கைதான் காசு வாங்காமல் வைத்தியம் பார்க்கும். "

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு