Published:Updated:

`இளையராஜாவைச் சந்திக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்!' - புல்லாங்குழல் கலைஞர் அஷ்வினி

அஷ்வினி கெளஷிக்
அஷ்வினி கெளஷிக்

``என்னை அதிகம் கவர்ந்தது இளையராஜா சாரின் பாடல்கள்தாம்."

இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் ஆகியவர்களுக்காகவே இசைக் கச்சேரிகளில் ரசிகர்கள் அதிகளவில் கூடுவார்கள். ஆனால், அஷ்வினி கெளஷிக்கின் புல்லாங்குழல் இசையைக் கேட்க ரசிகர்கள் திரளாகக் கூடுகின்றனர். மேலும், இவரின் இசை நிகழ்ச்சிகள் யூடியூப்பில் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்படுகிறது. 

அஷ்வினி கெளஷிக்
அஷ்வினி கெளஷிக்

பெண் புல்லாங்குழல் இசைக்கலைஞர்கள் குறைவான அளவிலேயே இருக்கின்றனர். அதுவும், கர்னாடக இசைத்துறையில் மட்டுமே! ஆனால், கர்னாடக இசைத்துறை, சினிமா பின்னணி இசை இரண்டிலும் பணியாற்றிவரும் அஷ்வினி, கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற இசைக்கலைஞர். மேடை நிகழ்ச்சிகளில் அதிகளவில் இளையராஜாவின் பாடல்களுக்கே புல்லாங்குழல் இசைக்கிறார். இசைப் பயிற்சியில் இருந்த அஷ்வினியுடன் பேசினோம்.

``பூர்வீகம் பெங்களூரு. வயலின் இசைக்கலைஞரான அக்காவும் நானும்தான் குடும்பத்தில் முதல் தலைமுறை இசைக் கலைஞர்கள். எனக்கு ஆர்வமிருந்த புல்லாங்குழல் இசையைத் தேர்வு செய்தேன். மத்திய அரசின் ஸ்காலர்ஷிப்பில் இசைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. வாரம்தோறும் சென்னை வந்து, என் குருநாதர் டாக்டர் என்.ரமணியிடம் பல ஆண்டுகள் இசையைக் கற்றுக்கொண்டேன்.

அஷ்வினி கெளஷிக்
அஷ்வினி கெளஷிக்

கிருஷ்ண கான சபா, மியூசிக் அகாடமி உட்பட பல்வேறு சபாக்களில், முன்னணி கர்னாடக இசைக்கலைஞர்களுடன் கச்சேரிகளில் புல்லாங்குழல் வாசித்தேன். பிறகு, தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமாவிலும் பணியாற்ற வாய்ப்புகள் கிடைத்தன. அப்போதுதான் பல மொழி சினிமா பாடல்களிலும் புல்லாங்குழல் இசை எப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அதில் என்னை அதிகம் கவர்ந்தது இளையராஜா சாரின் பாடல்கள்தாம்.

அவர் இசையமைத்தப் பாடல்களில் புல்லாங்குழல் இசை சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன. இளையராஜா சாரின் பாடல்களைத் தினமும் பலமுறை கேட்டேன். சினிமா பின்னணி இசையமைப்பிலும் பணியாற்ற ஆசைப்பட்டேன். சினிமாவில் பணியாற்ற கர்னாடக இசை அனுபவத்துடன், சினிமா பின்னணி இசைக்கான கூடுதல் இசை அனுபவமும் ஆர்வமும் தேவை என்பதை உணர்ந்தேன். அதற்காகப் பயிற்சி எடுத்து என்னைத் தயார்படுத்திக்கொண்டேன். கன்னட சினிமா வாய்ப்புகள் யதேச்சையாக எனக்குக் கிடைத்தன" என்கிற அஷ்வினி கெளஷிக், 180-க்கும் மேற்பட்ட கன்னட திரைப்படங்களில் பின்னணி இசையமைப்பு பணிகளில் பங்களிப்பு செய்திருக்கிறார். தமிழ், கன்னட தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளிலும் பணியாற்றிவருகிறார். 

அஷ்வினி கெளஷிக்
அஷ்வினி கெளஷிக்

``இளையராஜா சாரின் பாடல்கள் மீதான பெரிய ஈர்ப்பில் கடந்த ஆண்டு பெங்களூரில் 'இளையராஜா ஆன் இன்சைட்' என்ற பெயரில் கச்சேரி நடத்தினேன். அதில், ராஜா சாரின் பல மொழி பாடல்கள் மற்றும் பின்னணி இசையைப் புல்லாங்குழலில் வாசித்தேன். பெரிய வரவேற்பு கிடைத்தது. பின்னர், எஸ்.பி.பாலசுப்ரமணியம், சங்கர் மகாதேவன், ஹரிஹரன் உட்பட பிரபல பின்னணிப் பாடகர்களுடன் இணைந்து பல மாநிலங்களிலும் கச்சேரிகளில் புல்லாங்குழல் வாசித்திருக்கிறேன். இளையராஜா சாரைச் சந்திக்கும் வாய்ப்பு இதுவரை அமையல. நான் காத்திருக்கும் அந்த வாய்ப்பு நிறைவேறினால், மிகவும் சந்தோஷப்படுவேன். இசைப் பயணத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்கள் கிடைக்க, உற்சாகமாகப் பணியாற்றுகிறேன்" என்கிறார் புன்னகையுடன்.

அடுத்த கட்டுரைக்கு