சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

பாடல் எனது உணர்வு!

அந்தோணிதாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
அந்தோணிதாசன்

படங்கள்: கார்த்திக் அஸ்வின்

தனித்த இசையால், பிடித்த குரலால், மனதைத் தொடும் வரிகளால் மக்களை மகிழ்விக்கும், மக்களின் கலைஞன் அந்தோணிதாசன். சினிமாவில் ‘சொடக்கு மேல சொடக்கு', ‘வண்டியில நெல்லுவரும்...' என உற்சாகம் துள்ளும் பல பாடல்களைப் பாடியவர். இப்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் புது ரூட்டில் பயணிக்கிறார். சசிகுமாரின் 'எம்.ஜி.ஆர் மகன்', லைகா தயாரிப்பில் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் புதிய படம் என அடுத்தடுத்து இரண்டு படங்களுக்கு இசையமைக்கிறார். தவிர, காஜல் அகர்வாலின் `கோஷ்டி', பாபி சிம்ஹாவின் `வல்லவனுக்கு வல்லவன்' எனச் சில படங்களிலும் நடித்துவருகிறார். பன்முகக் கலைஞன் அந்தோணி தாசனிடம் பேசினேன்.

``கிராமிய இசைக் கலைஞர் டு சினிமா... இந்தப் பயணம் எப்படியிருக்கு?’’

‘‘எல்லாமே கடவுள் கொடுத்த வரம். இதெல்லாம் நினைச்சுகூடப் பார்க்கல. ஒவ்வொரு பாடலையும் பாடி முடிச்சதும் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டே இருப்பேன். முடிச்சிட்டு வந்ததும் ‘அந்தப் பாடல் எப்படியாவது படத்துல வந்திடணும்'னு மறுபடியும் கடவுள்கிட்ட வேண்டிட்டே இருப்பேன். அந்தப் பாடலும் வெளியாகி நல்லா இருக்குன்னு பெயர் கிடைக்கும்போதுதான் வெற்றிப் பாடகர் வரிசையில் நிற்க முடியும். இந்த இடத்தைத் தக்க வைக்கிறது சவாலாவும் இருக்கு. ‘திண்டுக்கல் சாரதி'தான் என் முதல் படம். அதுல இருந்து இப்ப வரை நான் சினிமாவில் இருக்கக் காரணம் கடவுள்தான்னு நம்பறேன். ரசிகர்கள் என்னை ஃபோக் மார்லின்னு கூப்பிடுறது சந்தோஷமா இருக்கு.

இதுவரை ரிலீஸான படங்கள்ல பாடினதுன்னு கணக்கெடுத்தா 300 பாடல்களுக்கு மேல இருக்கும். அதுல மலையாளத்துல முப்பது பாடல்கள் இருக்கும். இப்ப தென்னிந்திய மொழிகள் எல்லாத்திலயும் பாடல்கள் பாடிட்டிருக்கேன். சில படங்கள்ல பாடல்களும் எழுதுறேன். இப்ப எல்லா ஜானர்லேயும் பாடுறேன். அடுத்து ஸ்பானிஷ், இந்தியில் பாடவும் முயற்சி பண்ணிட்டிருக்கேன். மக்களை சந்தோஷப்படுத்துற ஒரு பணியைச் செய்றேன். அதை மனநிறைவோடும், சந்தோஷத்தோடும் செய்வேன்!''

பாடல் எனது உணர்வு!

`` ‘எம்.ஜி.ஆர் மகன்' படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?’’

‘‘என்னால இந்தப் படத்துக்கு இசையமைக்க முடியும்னு நம்பி, வாய்ப்பு கொடுத்த பொன்ராம் சாருக்கும், நான் முதலில் இசையமைச்ச ‘வைரி' பட இயக்குநர் விஜய்தேசிங் சாருக்கும் மிகப்பெரிய நன்றிகள். இன்னமும் எனக்கு சரியா இசைக்கருவிகள் வாசிக்கத் தெரியாது. கீ போர்டும் ப்ளே பண்ணத் தெரியாது. சுருதியே பிடிக்கத் தெரியாது. ஆனா, பாடல்களை கம்போஸ் பண்ணியிருக்கேன். என்னோட நண்பர்கள்கிட்ட புரொகிராம் செய்யச் சொல்லி, அதைச் சரிபார்த்து இசையமைக்கறேன். நோபல்ராஜ் மாதிரி என் நண்பர்களாலதான் இது சாத்தியமாகுது. பொன்ராம் சார் என்னை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்துல கூப்பிட்டு ஒரு பாடல் பாட வச்சார். இமான் சாரையும் அப்பதான் சந்திச்சேன். அடுத்து ‘ரஜினி முருகன்'ல ஒரு பாடல் எழுதிப் பாடினேன். ஆனா, அது படத்துல இடம்பெறல. மூணாவதாவும் பொன்ராம் சாரே கூப்பிட்டார். அவர்கிட்ட நான் ‘பாட்டுப் பாடத்தான் கூப்பிட்டி ருப்பீங்க... ஆனா, எனக்கு உங்க படத்துல நடிக்கவும் ஆசையிருக்கு'ன்னு சொன்னேன். அவர் சிரிச்சுக்கிட்டே ‘இந்த பிளானோடதான் வந்தீங்களா... நான் உங்களை இந்தப் படத்தில் இசையமைக்க வைக்கப் போறேனே'ன்னார். அப்படியே திகைச்சுப்போய் நின்னுட்டேன். இன்னமும் எனக்கு எல்லாமே கனவாதான் இருக்கு!''

பாடல் எனது உணர்வு!

``மியூசிக் பக்கம் வந்துட்டீங்க... நடிப்பு தொடருமா?’’

“பத்து வயசில கால்ல சலங்கை கட்டி ஆடினவன். கோமாளியா, கதாநாயகனா, கிராமியக் கலைஞனா அந்த இடத்துல நின்னு ஆட்சி செய்தவன். அதையெல்லாம் ஒப்பிடும்போது இன்னிக்கு சினிமாவுல நான் உழைக்கறது கொஞ்சம்தான். ஆனா, காலங்கள் போகப்போக வயசு போகுதேன்னு நினைப்பு வந்திடுது. அதையும் மீறிப் புதுப்புதுச் சிந்தனைகளோட சாதிக்கறது சந்தோஷமாவும் இருக்கு. நடிக்கணும் என்பது ரொம்ப வருஷத்து ஆசை. பாடகர் ஆனது, இசையமைக்கறது, நடிக்கறது எல்லாமே கடவுள் கொடுத்த வரம். இசையமைப்பாளர் ஆனதை இதுவரைக்கும் என்னால நம்ப முடியல. ‘வல்லவனுக்கு வல்லவன்' படத்துல வில்லனா நடிச்சிருக்கேன். அதுல என்னைப் பார்த்துட்டு விஜய்தேசிங்கு சார், என்னை இசையமைப்பாளர் ஆக்கினார். அதுல நடிக்கவும் வச்சாங்க. அதுல என் மனைவியும் நடிச்சிருக்காங்க. என்னை நம்பி எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதுக்கு நூறு சதவிகிதம் உழைப்பேன். பாடல் எனது உணர்வு. அதனால பாடிக்கிட்டே இருப்பேன். இசையமைப்பேன். சிரிக்க, சிந்திக்க வைக்கற கேரக்டர்கள் அமையும் போது நடிக்கவும் செய்வேன். இப்ப நாலு படங்கள் நடிக்கறேன். அதுல ஒரு படம் சந்தானம் சார் படம். இன்னொன்னு ஹீரோவோட முழு ட்ராவல் பண்ற படமா இருக்கும்.''

``திடீரென உங்க பெயருக்கு முன்னாடி ஆதிக்குரல்னு பட்டம் இருக்கே?’’

“ஆமாங்க. சீனுராமசாமி சார் படத்துல பாடினேன். ரெக்கார்ட்டிங் முடிஞ்சதும் அவர் கொடுத்த பட்டம்தான் ஆதிக்குரல் அந்தோணி தாசன். ‘உங்களுக்கு ஐந்து அடைமொழி வச்சிருக்கேன். எது வேணும்'ன்னாங்க. அதுல செலக்ட் பண்ணினதுதான் இது. விஜய்சேதுபதி சாருக்கு மக்கள் செல்வன், மக்கள் அன்பன்னு பட்டங்கள் கொடுத்தவர் அவர். எனக்கும் அவர் பட்டம் கொடுத்ததில் சந்தோஷமா இருக்கு.

பாடல் எனது உணர்வு!

விஷால் சார் என்னை எப்போ பார்த்தாலும் ‘அடி ஏலா கருவாச்சி இம்புட்டு தூரம்' பாடலைப் பாடச் சொல்லிக் கேட்பார். பாடிக் காட்டுவேன். முழுசாக் கேட்டுட்டு அம்புட்டு சந்தோஷமாவார்'' என்றவர் கணீர்க்குரலில் பாட ஆரம்பித்தார்...

‘அடி ஏலா கருவாச்சி
இம்புட்டு தூரம்...
நீ வந்து வந்து
போறியேடி எனக்கோசரம்.'