சினிமா
Published:Updated:

இது காக்கிச்சட்டைக்குப் பின்னால் இருக்கும் கதை!

சமுத்திரக்கனி
பிரீமியம் ஸ்டோரி
News
சமுத்திரக்கனி

இன்பர்மேஷன், எமோஷன்னு ரெண்டு விஷயம் இருக்கு. என்கிட்ட இருக்கிற இன்பர்மேஷனை உணர்வுபூர்வமாகக் கடத்தியிருக்கேன்

“சினிமாவில் காவல்துறை பற்றிய பிம்பம் எப்படி வந்திருக்குன்னு தொடர்ச்சியாக யோசிச்சுக்கிட்டே இருந்தேன். இங்கே ‘சிங்கம்’ சூர்யா மாதிரி நாயக பிம்பத்தோட கிளம்பி மக்களுக்கு நல்லது செய்வது மாதிரி காட்சிகள் தொடருது. உழைக்கும் காவல்துறைங்கிற வர்க்கம் ஒண்ணு, அரசாங்கத்தின் நேரடி முகமா இருக்கிற இன்னொரு காவல் முகம்னு ரெண்டு இருக்கு.

இது காக்கிச்சட்டைக்குப் பின்னால் இருக்கும் கதை!

இப்போது இருக்கிற காவல்துறைச் சட்டம் ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்டது. அவர்கள் காவலர்களைப் பொதுச் சமூகத்திற்கு எதிரான மனநிலையில் உருவாக்குறாங்க. அதிகாரம் என்ன சொல்லுதோ, அதை மட்டுமே கேட்கிற மனநிலை கொண்ட காவலர்களை உருவாக்குவதுதான் நோக்கம். முற்றிலும் அதிகாரத்திற்கு இசைவா இருக்கிறது மட்டுமே அவங்க கடமை. கண்ணு தெரியாமல் யாரும் போராடினாலும், உரிமைக்காக யார் போராடினாலும், அந்தக் கோரிக்கைகள் பற்றி அவங்களுக்கு அக்கறை கிடையாது. அவங்க வேலை, போராட்டத்தைக் கலைப்பது மட்டும்தான். அதிகாரத்தோடு இருக்கிற காவலர்களையும் அதிகாரமற்ற காவலர்களையும் அவங்க நிலை பற்றி மனிதாபிமானத்தோடு பேச முயற்சி செய்திருக்கேன். அதுதான் ‘ரைட்டர்’ ” தீர்மானமாகப் பேசுகிறார், அறிமுக இயக்குநர் ஃபிரங்க்ளின் ஜேக்கப். பா.இரஞ்சித்தின் பிரதான சீடர்.

இது காக்கிச்சட்டைக்குப் பின்னால் இருக்கும் கதை!
இது காக்கிச்சட்டைக்குப் பின்னால் இருக்கும் கதை!

``கனம் பொருந்திய படைப்பாக இருக்கும் போலிருக்கே..?’’

“இன்பர்மேஷன், எமோஷன்னு ரெண்டு விஷயம் இருக்கு. என்கிட்ட இருக்கிற இன்பர்மேஷனை உணர்வுபூர்வமாகக் கடத்தியிருக்கேன். இந்தச் சமூகத்தில் காவல் துறையின் பங்கு என்ன என்பது பற்றி, பாதிக்கப்பட்ட அல்லது அங்கே உழல்கிறவர்களை வைத்தே சொல்லியிருக்கேன். நல்லவனா, கெட்டவனா என்பதைக்கூட இங்கே சூழல்தான் தீர்மானிக்கிறது. அம்பேத்கர் சொன்னது மாதிரி, நீ அடிமைங்கிறதை அவங்களுக்கு உணர்த்துவதுமாதிரியே சொல்லியிருக்கேன். காவல் துறையின் சமூக வன்முறையின் அத்தனை சாத்தியங்களையும் போலி என்கவுன்டர்களையும் நடத்துகிற காவல்துறையின் பிரச்னைகளையும் பேசியிருக்கேன். உண்மையையும் அசல் வாழ்க்கையையும் சொல்லியிருக்கேன். வன்முறையை இந்தப் படத்திலிருந்து யாரும் பழகிக்க முடியாது. ஆனா, அதன் உண்மைத்தன்மை இதில் வெளிவந்திருக்கு. காவல்துறை அமைப்பு பற்றிச் சில கேள்விகளை எழுப்புகிறேன். கோளாறுகளைக் கொஞ்சம் வெளிக்காட்டியிருக்கோம். இதில் இருக்கிற உண்மைகளை நீங்கள் உணர்ந்தாலே போதுமானது.”

இது காக்கிச்சட்டைக்குப் பின்னால் இருக்கும் கதை!
இது காக்கிச்சட்டைக்குப் பின்னால் இருக்கும் கதை!

``சமுத்திரக்கனியை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?’’

“தயாரிப்பாளர் பா. இரஞ்சித் தான் அவரைக் கைகாட்டினார். ‘எப்படிப் பார்த்தாலும் இந்த ரைட்டர் ரோலுக்கு அவரை விட்டால் வேறு ஒருவரைக் கற்பனை செய்ய முடியவில்லை’ என்றார். போய் கதை சொன்னேன். என் கையில் வைத்திருந்த பைண்டிங்கைக் கேட்டு வாங்கி இரண்டே மணிநேரத்தில் படித்துவிட்டு, கூப்பிட்டு ‘இந்த ரைட்டர் நான்தான்’ என்றார். அன்று தோளில் போட்ட கையை இன்றுவரை எடுக்கவே இல்லை. 34 நாள்களில் படத்தை முடித்துவிட அவரே காரணமாக இருந்தார்.

சினிமாவில் சமூக மாற்றங்கள் செய்யலாம் என நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால், நமது கருத்துகளை நேர்மையாகப் பதிவு செய்ய நினைக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிச் சொல்லும்போது கொஞ்சம் தீவிரம் இருக்கத்தான் செய்யும். கொஞ்சம் ரத்தம் கசியத்தான் செய்யும். வேடிக்கைகளில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை. இங்கே மிக நியாயமாக நிகழவேண்டியது நிகழாமல் இருக்கிறது. இங்கே சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் இருக்கிறோம். என் வரையில் அதைச் சொல்லலாம் என நினைத்தேன்.

போலீஸின் பணி முக்கியமானது. குற்றவியல் சட்டத்தின் அத்தனை செக்‌ஷன்களையும் அவர்களும் நீதிபதிகளுமே விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள். சிலர் கேஸ் கட்டுகளைப் படித்துப் பார்த்தேன். ஒரு வழக்கைச் சித்திரிப்பதில் ரைட்டருக்கே ரோல் இருக்கிறது. ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தைப் படித்துப் பார்த்தால், அவர்கள் அப்படிச் சொன்னார்கள் எனவும் சொல்ல முடியாது, சொல்லவில்லை எனவும் சொல்ல முடியாது. வழக்கின் நுட்பங்களைப் பார்த்து மிரண்டுவிட்டேன். கடுமையாக உழைத்திருக்கிறார் சமுத்திரக்கனி.”

இது காக்கிச்சட்டைக்குப் பின்னால் இருக்கும் கதை!
இது காக்கிச்சட்டைக்குப் பின்னால் இருக்கும் கதை!

``மற்ற கதாபாத்திரங்கள் எப்படி அமைந்தன?’’

“58 வயதை ஒட்டிய கதாபாத்திரத்தில் வருகிறார் கனி. இரு மனைவிகள். முதல் மனைவிக்குக் குழந்தை இல்லாமல், இன்னொரு மனைவியைத் திருமணம் செய்துகொள்பவர். வாழ்வியல் சார்ந்த போலீஸ்காரரின் அவதிகளையும் பாடுகளையும் இதில் வகைப்படுத்தியிருக்கேன். லிசி ஆண்டனியும் மகேஸ்வரியும் நடித்திருக்கிறார்கள். பிரதீப் கே.ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறான். நான் இரஞ்சித்தோடும், அவன் கேமராமேன் முரளியோடும் சேர்ந்தே வளர்ந்தோம். காவல்துறை, அதற்கான நிலப்பரப்பு என அவனது கேமரா மொழி சிறப்பாக வந்திருக்கிறது. கோவிந்த் வஸந்தா இசையமைப்பாளர். பாடலில் கதையை நகர்த்திட்டுப் போவதிலும் பின்னணியிலும் பெரும் பங்கிருக்கு. எல்லாக் கஷ்டங்களையும் மீறி வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையையும் விதைக்கிறேன். உண்மையைச் சொல்லும்போது அதன் விளிம்பு வரை சென்று எட்டிப்பார்க்கும் ஒரு முனைப்பு எனக்கு இருந்தது. நேர்மை ஜெயிக்குமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், நியாயம் கண்டிப்பாக உலகத்திற்குப் புரியும். இனிமேல் வாழ்க்கையைப் பிரதிபலித்தால்தான் சினிமா பேசப்படும் என நினைக்கிறேன்.”