Published:Updated:

ஜம்ப் கட்டில் ஒரு செல்லுலாய்டு புரட்சி!

 ழான் லுக் கொதார்த்
பிரீமியம் ஸ்டோரி
ழான் லுக் கொதார்த்

சமரசமற்ற படைப்பாளியான அவர், ‘வாழ்க்கையும் சினிமாவும் வேறு வேறல்ல’ என அடிக்கடி சொல்வார். சில சமயங்களில், ஒரு சினிமாவுக்குள் தன் வாழ்க்கை சிக்கிக் கொண்டதாகக் கூறுவார்.

ஜம்ப் கட்டில் ஒரு செல்லுலாய்டு புரட்சி!

சமரசமற்ற படைப்பாளியான அவர், ‘வாழ்க்கையும் சினிமாவும் வேறு வேறல்ல’ என அடிக்கடி சொல்வார். சில சமயங்களில், ஒரு சினிமாவுக்குள் தன் வாழ்க்கை சிக்கிக் கொண்டதாகக் கூறுவார்.

Published:Updated:
 ழான் லுக் கொதார்த்
பிரீமியம் ஸ்டோரி
ழான் லுக் கொதார்த்

தன் படைப்புகளால் உலகையே அதிரவைத்த பிரெஞ்சு சினிமா மேதையும், ‘ஜம்ப் கட்’ எனும் படத்தொகுப்பு உத்தியைப் பயன்படுத்திக் காட்சி மொழியில் கலகத்தை ஏற்படுத்தியவருமான ழான் லுக் கொதார்த் மறைந்திருக்கிறார். ஜெனிவா ஏரியின் மீதிருக்கும் ரோலி நகரில் தன் 91-ம் வயதில் அமைதியாக இந்த உலக வாழ்வைத் தானே முறித்துக்கொண்டார். ஆமாம், அவர் மரணம் அவரே எடுத்துக்கொண்ட முடிவு.

உடனே பலரும் இது தற்கொலையா என யோசிக்கலாம். அவர் அப்படிப்பட்ட கோழை அல்ல. கடைசி நொடிவரை எந்த நோயும் அவரை நெருங்கவில்லை. ஆனால், அவரே தன் மரணத்தைத் தேர்வு செய்துகொள்ளும் உரிமையை இயற்கை கொடுத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ‘இந்த வாழ்க்கை போதும்’ என முடிவெடுத்த பின் அவர் சுவிஸ் அரசிடம் சொல்லி மருத்துவர் மூலம் தன் மரணத்தைத் தானே தீர்மானித்துக்கொண்டார். இப்படிப்பட்ட அமைதியான மரணங்களுக்கு சுவிஸ் அரசு சட்டபூர்வ வழி செய்திருக்கிறது. உண்மையில் அவர் மரணம்கூட அவர் படங்கள்போல ஓர் அதீத புனைவுதான்.

ஜம்ப் கட்டில் ஒரு செல்லுலாய்டு புரட்சி!

கொதார்த்தை மானசீக குருவாக வரித்துக் கொண்ட சிஷ்யர்களைப் பட்டியலிட்டால், அவர் பெருமையை உணரலாம். இன்று உலக சினிமாவின் உன்னத இயக்குநர்களாகப் போற்றப்படும் குவாண்டின் டோராண்டினோ, மார்ட்டின் ஸ்கார்சிஸ், அலேக்ஜாண்டிரோ இனாரிட்டு மற்றும் நம்ம ஊர் அனுராக் காஷ்யப் போன்றோர் அவரை மானசீக குருவாக வரித்துக்கொண்ட ஏகலைவன்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், கொதார்த் உலக இயக்குநர்களின் டான்.

காட்சி மொழிக்குள் கவிதையையும் அரசியலையும் ஒன்றிணைத்து சினிமாவை சமூகப் படைப்பாக மாற்றிய மிகப்பெரிய வித்தகர் கொதார்த். 60 ஆண்டுகளுக்கு முன் இவர் தன் சினிமாக்களில் ஆரம்பித்த குறியீடு, நான் லீனியர் வாய்ஸ் ஓவர் போன்ற அம்சங்கள் இன்று நம் கோலிவுட் வரை வந்து சேர்ந்துள்ளன. அவர் சினிமாக்களில் கொண்டு வந்த உத்திகள் பார்வையாளர்களை அதிர வைத்த அதேசமயம், அவர்களை ஆர்வத்துடன் பார்க்கவும் சிந்திக்கவும் வைத்தன.

கொதார்த் தனிநபர் அல்ல, அவர் ஒரு இயக்கம். அந்த இயக்கத்தின் பெயர் நியூவேவ். அந்தப் புதிய அலை சினிமா இயக்கத்தில் அவரைத் தவிர பிரான்சுவா த்ரூபோ, எரிக் ரோமர், கிளாத் ஷப்ரோல், ழாக் ரிவெட் ஆகிய இன்னும் நான்கு பேர் முக்கியமானவர்கள். அனைவருமே இயக்குநராகும் கனவுடன் திரைப்படச் சங்கங்கள், உலக சினிமாக்கள், இலக்கியங்கள் என்று திரிந்தனர். விளைவு... நியூ வேவ் எனும் சினிமாப் புரட்சி.

ஓவியங்களின் வரலாறு படித்தவர்களுக்கு டாடா யிஸ்டுகள் என்ற கலகக் கும்பல் பற்றித் தெரியும். இந்த கும்பல் பிரான்ஸில் நடக்கும் ஓவியக் காட்சிகளுக்குள் நுழைந்து, காட்சிக்கு வைக்கப் பட்ட ஓவியங்களை உடைத்து பெயின்டுகள் ஊற்றிக் கலவரம் செய்தார்கள். அந்த ஓவியங்களில் கலைத்தன்மை இல்லை, அரசியல் இல்லை என விமர்சனம் செய்தனர். அதன்பிறகுதான் ஐரோப்பாவில் நவீன ஓவியங்கள் கவனம் பெறத் தொடங்கின. அதுபோல சினிமாவில் கலகம் செய்து அந்தக் கலையில் களையெடுக்க இந்த ஐவரும் விரும்பினர். அதன்மூலம் உலக சினிமாவின் போக்கை திசைதிருப்ப முடிவெடுத்தனர்.

ஆந்த்ரே பச்ன் என்பவர் குருவாக இருந்து தான் நடத்திய பத்திரிகையில் இவர்களை விமர்சனக் கட்டுரைகள் எழுத வைத்தார். அப்போதைய பிரபல இயக்குநர்களின் கலைப்படங்களைக் குப்பை என விமர்சித்து எழுதினார்கள் இவர்கள். சினிமா என்பது அதுவரை ஒரு நாவலை வரிசை மாறாமல் அப்படியே படம் பிடித்துக் கதை சொல்லும் ஊடகமாகவே இருந்தது. ‘இது பார்வையாளனை, அவன் உணர்ச்சிகளை ஏமாற்றும் போலி வித்தை. நல்ல சினிமா என்ற பெயரில் பார்வையாளனுக்கு நடத்தப்படும் மூளைச் சலவை. சினிமா என்பது காட்சி அனுபவம். அதன்வழியே பார்வையாளனைச் சிந்திக்க வைப்பதுதான் உண்மையான கலை’ எனக் கூறினர். ‘செட்கள், ஆடம்பர அலங்காரங்கள், நடிகர்களின் முகங்களை விடவும் சினிமாவுக்கு காமிரா கோணங்களும் படத்தொகுப்புமே முக்கியம். வெறுமனே ஒரு இளம்பெண்ணையும் துப்பாக்கியையுமே வைத்துக்கொண்டு நல்ல சினிமா அனுபவத்தைத் தங்களால் கொடுக்க முடியும்’ என சவால் விடுத்தனர்.

இந்த விமர்சனத்தால் கடுப்பான அன்றைய இயக்குநர்கள், ‘உங்களுக்கெல்லாம் பேசத்தான் தெரியும். முடிந்தால் படம் எடுத்துக் காண்பியுங்கள்’ என இவர்களை நோக்கி சவால் விட்டனர். கொதார்த்தும் அவரது புதிய அலை நண்பர்களும் இந்த சவாலை ஏற்றனர். தங்கள் படத்துக்கான திரைக்கதையும் எழுதினர். ஆனாலும் தயாரிப்பாளர் கிடைக்க வேண்டுமே! ஆளுக்கொரு பக்கம் பணத்தைத் திரட்டவும் தயாரிப்பாளரைத் தேடியும் அலைந்தனர். கொதார்த் ஒரு அணைக்கட்டில் வேலைக்குப் போனார். த்ரூபோ தன் பணக்காரக் காதலியை மணம் முடித்து மாமனாரைத் தயாரிப்பாளர் ஆக்க திட்டம் வகுத்தார். இப்படித்தான் த்ரூபோவின் முதல் படம் ‘400 உதைகள்’, நியூவேவ் இயக்கத்தின் முதல் படமாக 1959-ல் கான் திரைப்பட விழாவில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இதைப் பார்த்து பழைமைவாதிகள் வாயடைக்க, இரண்டாவது படமாக கொதார்த்தின் ‘பிரெத்லெஸ்’ 1960-ல் வெளியானது. ‘புதிய அலை உருவாகிவிட்டது’ என அனைவரும் வியந்து பாராட்டினர். அந்தப் படம், அதுவரையிலான 66 வருட சினிமா வரலாற்றைப் புரட்டிப்போட்டது. கொதார்த் சொன்னது போலவே அவரது படம் சொல் புதிது சுவையும் புதியதாக இருந்தது. மரபான காட்சிக் கோணங்களை அவர் உடைத்தார். இஷ்டப்போக்கில் காமிராவைத் தோளில் போட்டுக்கொண்டு பாத்திரங்களின் உடல்மொழிகளை அவர் பின்தொடர்ந்து காட்சிப்படுத்தினார். அதைக் கவித்துவமாக எடிட் செய்து கூடுதல் மெருகேற்றினார். அப்படி அவர் உருவாக்கிய படத்தொகுப்பு முறையை அனைவரும் ‘ஜம்ப் கட்’ என வியந்து போற்றினர். வரிசையாகக் கதைசொல்லும் சினிமா மரபை உடைத்து காட்சி மொழிகளில் கலகத்தை உண்டு பண்ணி வரிசைகளை மாற்றினார். நடுவிலிருந்து கதையைத் தொடக்கி, கதையின் தொடக்கத்தையும் முடிவையும் பார்வையாளர்களே தீர்மானிக்க விட்டுக்கொடுத்தார். இந்தப் புதுமையான முறையால் சினிமாவிலிருந்து கதை பின்னுக்குப் போய், காட்சி அனுபவம், காட்சி மொழி, தொழில்நுட்பம் ஆகியவை முதன்மை பெற்றன. அவர் தொடக்கி வைத்த இந்த நான் லீனியர் சினிமாதான் இன்று உலகம் முழுக்க வணிக சினிமாவாகவும் கொண்டாடப்படுகிறது.

ஜம்ப் கட்டில் ஒரு செல்லுலாய்டு புரட்சி!

அன்று தொடங்கிய அவரது சினிமாப் பயணத்தின் 60 ஆண்டுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கலைப் படைப்புகளை உருவாக்கினார். அவரின் நண்பர்கள் அனைவரும் பரிசோதனை முயற்சிகளிலிருந்து விலகி, கமர்ஷியல் படங்கள் எடுக்கப் போய்விட்டனர். ஆனால், கொதார்த் கடைசிப் படம் வரையிலும் சமரசம் இல்லாமல் இயக்கிவந்தார். அவர் உருவாக்கிய ஒவ்வொரு படமும் இப்போதும் சினிமா கற்கும் மாணவர்களுக்குப் பாடங்களாக இருக்கின்றன.

தீவிர இடதுசாரி ஆதரவாளரான அவர், இந்தக் கருத்தாக்கத்திலிருந்து கடைசிவரை பின்வாங்கவில்லை. வாழ்நாள் முழுக்க ஏகாதிபத்திய அரசியலுக்கு எதிராகப் படங்களை இயக்கிவந்த கொதார்த்துக்கு, ஆஸ்கர் விருதுக் கமிட்டி சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருதை 2010-ல் கொடுக்க முன்வந்தபோது அவர்களின் அழைப்பை அவர் நிராகரித்தார்.

சமரசமற்ற படைப்பாளியான அவர், ‘வாழ்க்கையும் சினிமாவும் வேறு வேறல்ல’ என அடிக்கடி சொல்வார். சில சமயங்களில், ஒரு சினிமாவுக்குள் தன் வாழ்க்கை சிக்கிக் கொண்டதாகக் கூறுவார். அவரது மரணம் எனும் க்ளைமாக்ஸ் காட்சியும், அவரே எழுதிய சினிமாக் காட்சிபோல அமைந்துவிட்டது. சினிமா எனும் மாயப்புதிருக்குள் அவர் மறைந்துபோனார் என்றும் இதைச் சொல்லலாம்.