Published:Updated:

"லேடீஸ் ப்ளீஸ்... கானா பாடாதீங்க... ஏன் சொல்றேன்னா..!?" - ‘கானா’ உலகநாதன்

'கானா' உலகநாதன்
'கானா' உலகநாதன்

"கானா பாடலை யார் வேண்டுமானாலும் பாடலாம். நம்முடைய மனதில் இருக்கும் உணர்வுகளை வார்த்தைகளாக கொண்டுவந்து பாடலாகப்பாடுவதுதான் கானா. சென்னையைத் தாண்டிவிட்டால் கானா மாறிவிடும். `கானா' என்பது சென்னைக்கான பாடல்'' என்கிறார் 'கானா' உலகநாதன்.

மிஷ்கின் இயக்கத்தில் 2006-ம் வருடம் வெளியான `சித்திரம் பேசுதடி' படத்தில் `வால மீனுக்கும்...' பாடலைப் பாடி அதை பட்டித்தொட்டியெல்லாம் பரவச் செய்தவர் `கானா' உலகநாதன். ஏழு வருடங்கள் கர்னாடக இசை, மேற்கத்திய இசை என இசையின் அத்தனை பரிணாமங்களையும் கற்றுத் தேர்ந்தவர். மேலும், `கானா'வை தமிழ் சினிமாவில் பரவலாக்கியவர்களில் முக்கியமானவர். ஆனால், தற்போது அவருக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை என்பதுதான் அவருக்கு இருக்கும் மிகப்பெரிய வருத்தம். அவரிடம் பேசியபோது வலி நிறைய வார்த்தைகள் வந்து விழுந்தன...

TV சேனல்கள் TRP-காக கானா பாடகர்களை பயன்படுத்துகிறதா? - 'Casteless Collective' அறிவு பதில்

"'சித்திரம் பேசுதடி' படத்துக்கு முன்பே வசந்த குமார் இயக்கத்தில் 2004-ம் ஆண்டு வெளியான `மச்சி' படத்தில் `கும்மாங்கோ..' பாடல்தான், என்னை முதன் முதலில் சினிமா உலகத்தில் அறிமுகப்படுத்தியது. பிறகுதான், மிஷ்கின் என்னை `சித்திரம் பேசுதடி' படத்தில் பாடும்படி கேட்டார். எத்தனையோ மேடைகளில் கானா பாடல்களைப் பாடியிருந்தாலும், மியூசிக் ஸ்டுடியோவில் பாடியபோது பதற்றம் இருந்தது. மிஷ்கின்தான் என்னை ஊக்கப்படுத்தினார். `வால மீனுக்கும்..' பாடலில் சோகம், சந்தோஷம் என இரண்டு விதமான ஃபீலிங்கும் இருக்கும்.

அந்தப் படத்தில் மிஷ்கின் முதலில் எனக்கு பஞ்சு மிட்டாய் கலரில் வேஷ்டி, சட்டைக் கொடுத்தார். `இது ரொம்ப அடிக்கிற மாதிரி இருக்கு. வேற கலர் இருந்தா கொடுங்க'னு கேட்டேன். அதற்குப் பிறகுதான் மஞ்சள் கலர் வேஷ்டி சட்டையைக் கொடுத்தார். மஞ்சள் நிறம் ஆரம்பமே அமர்க்களமா இருந்துச்சு. அந்தப் பாடல் வெளியானப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால், என் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி அதை மக்களிடம் கொண்டு சேர்க்கக்கூடிய வாய்ப்பாக அது இல்லை. சில சின்ன பட்ஜெட் படங்களில் வாய்ப்புக் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. மற்றபடி, என்னுடைய பாடல்களை இன்னும் பல மேடைகளில் பாடிக்கொண்டுதான் இருக்கிறேன்'' என்றவர்,

'கானா' உலகநாதன்
'கானா' உலகநாதன்
இப்போதிருக்கும் 'கானா' பாடல்கள் பெரும்பாலும் பெண்களை கிண்டல் செய்வதற்காக மட்டுமே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், பெண்களை மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவது, வர்ணிப்பது இப்போது அதிகரித்துவிட்டது. வேதனையா இருக்கு.
`கானா' உலகநாதன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"நான் ஹார்பரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது வெளிநாட்டவர் ஒருவர் என்னை ஒரு `பாடல் பாடுங்களேன்'னு கேட்டார். அப்போ நானே சில வார்த்தைகளைப் போட்டு பாடி காண்பிச்சேன். அங்கே கிடைத்த பாராட்டும், கைத்தட்டலும் எனக்கு இன்னும் ஊக்கம் கொடுத்தது. சில வருடங்கள் ஹார்பரில் வேலை பார்த்துவிட்டு, திரும்பிவிட்டேன். சென்னை, வியாசர்பாடிதான் நான், பிறந்து வளர்ந்த ஊர். வேலையை விட்டுட்டு வந்தப் பிறகு, எங்க ஜனங்களுடன் பாடல்கள் பாட ஆரம்பித்தேன். அப்படித்தான் முழுநேரப் பாடகனானேன். என்னுடைய ஆத்மார்த்த குரு நித்யா, தேவா போன்றவர்களிடம் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்.

'கானா' உலகநாதன்
'கானா' உலகநாதன்

கானா பாடலை யார் வேண்டுமானாலும் பாடலாம். நம்முடைய மனதில் இருக்கும் உணர்வுகளை வார்த்தைகளாகக் கொண்டு வந்து பாடலாகப்பாடுவதுதான் கானா. சென்னையைத் தாண்டிவிட்டால் கானா மாறிவிடும். கானா என்பது சென்னைக்கான பாடல். அதை வேறு ஊர்காரர்கள் பாடினால் அது ஆத்மார்த்தமாக இருக்காது. நாங்கள் கானா பாடிய காலத்தில், காதல், பிரிவு, அறிவுரை, சகோதரப் பாசம், பெற்றோர் பாசம், நாட்டுப் பற்று இப்படி எத்தனையோ விஷயங்களை சொல்லிப் பாடிவோம். ஆனால், இப்போதிருக்கும் `கானா' பாடல்கள் பெரும்பாலும் பெண்களைக் கிண்டல் செய்வதற்காக மட்டுமே இருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால், பெண்களை மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவது, வர்ணிப்பது இப்போது அதிகரித்துவிட்டது. அதை நினைத்தால் வேதனையா இருக்கு. இப்போது பாடக்கூடிய பலபேர் எனக்குத் தெரிந்தவர்கள்தான். அவர்கள் கானாவை இப்போது இன்னும் பல பேரிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். அந்த வகையில் மகிழ்ச்சி என்றாலும், இளைஞர்களின் மனதை மடைமாற்றும் விதமாக இருக்கக்கூடிய வார்த்தைக் கோவைகளை மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்'' என்றவர், `பெண்கள் 'கானா' பாடாமல் இருந்தால் நல்லது’ என்கிறார். ஏன் என்று கேட்டதற்கு,

"நீங்கள் கவனித்தால் தெரியும். `கானா' பாடல்களைப் பெண்கள் பாடுவது மிக மிகக்குறைவு. இசைவாணி போன்ற ஒரு சில பெண்கள்தான் கானாவைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய கருத்துப்படி, பெண்கள் கானாவைப் பாடாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், கானா பாடல்களைக் கேட்கவரும் ஆட்கள் பெரும்பாலும் கேளிக்கை வார்த்தைகளைப் பேசுவது, தவறான கமென்ட்களைச் சொல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். அதனால் சில நேரங்கள் அந்தப் பெண்கள் மனதளவில் பாதிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
கானா உலகநாதன்

இதையெல்லாம் தாண்டி எங்களால் இதில் சாதிக்க முடியும் என பெண்கள் முன்வந்தால் நிச்சயமாக வரவேற்பேன்'' எனச் சொல்லும் `கானா' உலகநாதன் தற்போது ஐந்து சிறிய பட்ஜெட் படங்களில் பாடி முடித்திருக்கிறாராம். கூடியவிரைவில் அவருடைய ஹிட் பாடல்களைக் கேட்கலாம். அதுமட்டுமில்லாமல் வரும் ஆகஸ்ட் 13ல் `கலைமாமணி விருது' வாங்கவிருக்கிறார் `கானா' உலகநாதன்.

அடுத்த கட்டுரைக்கு