Published:Updated:

கார்கி - சினிமா விமர்சனம்

சாய் பல்லவி
பிரீமியம் ஸ்டோரி
சாய் பல்லவி

சாய் பல்லவியின் பலம், சினிமாவிற்கான எந்தப் பூச்சுகளும் இல்லாத எளிமையான தோற்றம்.

கார்கி - சினிமா விமர்சனம்

சாய் பல்லவியின் பலம், சினிமாவிற்கான எந்தப் பூச்சுகளும் இல்லாத எளிமையான தோற்றம்.

Published:Updated:
சாய் பல்லவி
பிரீமியம் ஸ்டோரி
சாய் பல்லவி

தர்க்கங்களால் ஆன சட்டத்திற்கு முன் மட்டுமல்ல, தனிமனிதர்களின் நியாயத்திற்கு முன்னாலும் எல்லாரும் சமமே என்பதை உரக்கப் பேசும் படமே இந்த ‘கார்கி.'

அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டியாய் அப்பா, இட்லி மாவு விற்கும் அம்மா, பள்ளிக்குச் செல்லும் தங்கை என எளிய குடும்பம் சாய்பல்லவியுடையது. ‘தானுண்டு தன் டீச்சர் வேலையுண்டு' என அமைதியாய் வாழ்ந்துவரும் அவரின் இயல்பை ஒரே நாளில் குலைத்துப் போடுகிறது சிறார் பாலியல் வன்முறை வழக்கில் தந்தையின் கைது. ஊராரின் வெறுப்பு ஒருபுறம், கழுகுக்கண்களோடு துரத்தி எஞ்சியிருக்கும் நிம்மதியையும் சிதைக்கும் அறமற்ற ஊடகங்கள் மறுபுறம், சாமானியர்களை எளிதில் அண்டவிடாமல் மிரட்சிக்குள்ளாக்கும் சட்ட அமைப்பின் அதிகாரம் ஒருபுறம்... இத்தனைக்கும் நடுவே சாய் பல்லவிக்கு உறுதுணையாய் இருப்பது, ‘தன் தந்தை குற்றமற்றவர்' என உள்ளிருந்து ஒலிக்கும் மனச்சாட்சியின் குரல் மட்டுமே! அதை இறுகப் பற்றிக்கொண்டு களமிறங்கும் சாய் பல்லவிக்கு வெற்றி கிடைத்ததா இல்லையா என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறது கதை.

கார்கி - சினிமா விமர்சனம்

சாய் பல்லவியின் பலம், சினிமாவிற்கான எந்தப் பூச்சுகளும் இல்லாத எளிமையான தோற்றம். அதுவே கதைக்கு ஒரு நம்பகத்தன்மையைத் தந்துவிட, மீதியை தன் அபார நடிப்பாற்றல் வழியே கடத்தி கனம் சேர்க்கிறார். மிகை நடிப்பு - போதாமை இரண்டிற்கும் நடுவிலான மெல்லிய கோட்டில் நடந்து கார்கிக்கு உயிரூட்டும் சாய் பல்லவியே படத்தின் ஆதாரம்.

காளி வெங்கட்டின் சினிமாப் பயணத்தில் இது முக்கியமான படம். ‘கையை விட்டுப்போக என் கைல என்ன சார் இருக்கு?' என்கிற வசனம்தான் அவரின் கதாபாத்திரத்திற்கான ஒருவரிச் சுருக்கம். அதை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார். ‘பெனிக்ஸ் ஜெயராஜ்' வேடத்தில் வரும் பிரதாப்பும் கவனிக்க வைக்கிறார். திருநங்கை சுதா, ஐஸ்வர்ய லஷ்மி, ஆர்.எஸ்.சிவாஜி, சரவணன், ஜெயபிரகாஷ் என மற்றவர்களும், இக்கட்டான நிலையில் நாம் கடந்துவரும் பலதரப்பட்ட மனிதர்களை அச்சு அசலாய்ப் பிரதிபலிக்கிறார்கள்.

கார்கி - சினிமா விமர்சனம்

கோவிந்த் வசந்தா பின்னணி இசையில், ‘மாசறு பொண்ணே', ‘யாத்ரி' பாடல்களில் நிகழ்த்தும் தீவிரம் நம்மை உடைத்துப் போடுகிறது. எளிய வர்க்கத்தினரின் உலகை இயல்பு மாறாமல் உண்மைக்கு நெருக்கமாய்க் காட்டுகிறது ஸ்ரையந்தி - பிரேம்கிருஷ்ணா அக்கடு இணையின் ஒளிப்பதிவு.

சிறார் மீதான வன்முறைகள் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையில் வெளிவந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில் அது தொடர்பாக முக்கிய உரையாடலைத் தன் படம் மூலம் தொடங்கி வைக்கிறார் இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன். அதைப் படமாக்கிய விதத்திலும் முதிர்ச்சி தெரிகிறது. திருநங்கைகளுக்கான வெளியும் அது குறித்த வசனங்களும் நச்! பாராட்டுகள்!

இன்றைய தகவல் யுகத்தில் தந்தையின் கைதை மறுநாள் செய்தித்தாள் பார்த்துத் தெரிந்துகொள்வது, நீதிபதியிடம் பேட்டி எடுக்க முயலும் பத்திரிகையாளர், ‘‘உங்க அப்பா கைது ஆகிட்டாரு, உடனே ஊரைக் காலி பண்ணிட்டுப் போங்க’’ என்று காவல்துறையே சொல்வது என்று ஆங்காங்கே சின்னச் சின்ன சறுக்கல்கள். ஆனாலும் சமூக அவலத்தின் கோர முகத்தை சமரசமில்லாமல் காட்டியதற்காகவே குறைகளைப் பொறுத்து கார்கிக்குக் கைகொடுக்கலாம்.