Published:Updated:

`அன்புச்செல்வன்' - கௌதம் மேனனுக்கே தெரியாமல் அவர் நடிப்பதாக வெளியான போஸ்டர்... பின்னணி என்ன?

அன்புச்செல்வன்

"தற்போது பார்த்தால், திடீரென, வேறொரு இயக்குநரை வைத்துத் தயாரிப்புத் தரப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளது. இது குறித்து என்னிடம் எதுவுமே விவாதிக்கவில்லை." - கௌதம் மேனன்

`அன்புச்செல்வன்' - கௌதம் மேனனுக்கே தெரியாமல் அவர் நடிப்பதாக வெளியான போஸ்டர்... பின்னணி என்ன?

"தற்போது பார்த்தால், திடீரென, வேறொரு இயக்குநரை வைத்துத் தயாரிப்புத் தரப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளது. இது குறித்து என்னிடம் எதுவுமே விவாதிக்கவில்லை." - கௌதம் மேனன்

Published:Updated:
அன்புச்செல்வன்
இயக்குநர் கௌதம் மேனன் இன்று பதிவு செய்த ஒரு ட்வீட்டால், சமூக வலைதளம் தொடங்கி கோலிவுட் வரை அதிர்வலைகள் கிளம்பியிருக்கின்றன. இயக்குநர் பா.இரஞ்சித், நடிகர் விஷ்ணு விஷால் உட்படப் பல பிரபலங்கள், 'அன்புச்செல்வன்' என்ற புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர், கௌதம் மேனன் நாயகனாக, ஒரு காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகவும், இந்தப் படத்தை செவன்டி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வினோத் குமார் என்பவர் இயக்குவதாகவும் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சொல்லப்பட்டிருந்தது. கௌதம் மேனன் இயக்கிய 'காக்க காக்க' படத்தில் சூர்யாவின் கதாபாத்திரப் பெயர் 'அன்புச்செல்வன்'. அதே பெயரை வைத்து கௌதமே போலீஸாக நடிக்கிறார் என்பதால் அந்த போஸ்டர் வைரலானது.
அன்புச்செல்வன்
அன்புச்செல்வன்

ஆனால், அந்த போஸ்டர் வெளியான பிறகு, கௌதம் மேனன் பதிவுசெய்த ட்வீட் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. "இது எனக்கே அதிர்ச்சியாகவும், புதிய செய்தியாகவும் இருக்கிறது. நான் நடிப்பதாகச் சொல்லப்படும் இந்தப் படம் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. இதன் இயக்குநர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நபரை நான் சந்தித்தே இல்லை. இதன் தயாரிப்பாளர் பல பிரபலங்களை வைத்து இந்தப் படத்தின் போஸ்டரை ட்வீட் செய்ய வைத்துள்ளார். இப்படியெல்லாம் சுலபமாகச் செய்ய முடிகிறது என்பதே அதிர்ச்சியாகவும், பயமூட்டுவதாகவும் இருக்கிறது" என்று கௌதம் தன் கருத்தை வெளியிட, படத்தின் போஸ்டரை வெளியிட்ட பிரபலங்கள் தற்போது தங்களின் பதிவுகளை நீக்கிவருகின்றனர்.

கௌதம் மேனன்
கௌதம் மேனன்

இந்த விவகாரம் குறித்து கௌதம் மேனனிடமே பேசினோம். "எனக்கே இது குறித்து யார், என்ன படம் என்று தெரியவில்லை. திடீரென காலையில் விஷ்ணு விஷால் இதை ட்வீட் செய்திருந்தார். தயாரிப்புத் தரப்பு இதைச் செய்திருக்கிறது. அந்தத் தயாரிப்பாளரை எனக்குத் தெரியும். கடந்த 2017-ம் ஆண்டு ஜெய் என்ற இயக்குநரின் படத்தில் அவர் தயாரிப்பில் சிறிது நாள்கள் நடித்தேன். ரொம்பவே நல்ல கதை அது. நான் ஒரு போலீஸ் பாத்திரத்தில் இன்வெஸ்டிகேட் செய்வது போன்ற திரைக்கதை. அந்த இயக்குநர் ஜெய்தான் முதலில் என்னிடம் கதை சொல்லிவிட்டு, தயாரிப்பாளருடன் வருகிறேன் என்று கூறி மூன்று மாதங்கள் கழித்து ஒரு தயாரிப்பாளருடன் என்னிடம் வந்தார். படம் ஆரம்பித்து நான்கு நாள்கள் மட்டுமே ஷூட் செய்தோம். பின்பு அந்தத் தயாரிப்பாளர் பணம் கொடுக்காததால் படம் நின்றுவிட்டது. இயக்குநர் ஜெய், வெவ்வேறு தயாரிப்பாளர்களிடம் இதைக் கொண்டு செல்வதாகக் கூறினார். என்கூடவேதான் அவர் இருந்தார். மிகவும் அற்புதமான ஸ்க்ரிப்ட் அவருடையது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சம்பவங்களெல்லாம் 2016 இறுதி மற்றும் 2017-ல் நடந்தவை. இப்போது, 2021-ல், மூன்று மாதங்களுக்கு முன்பு, அதே பழைய தயாரிப்பாளர் என்னை மீண்டும் அழைத்து இந்தப் படத்தை மீண்டும் எடுக்கவிருப்பதாகத் தெரிவித்தார். கொஞ்சம் நிதிப் பிரச்னையால் தாமதம் என்று காரணம் சொன்னார். அதேபோல, படத்தின் இயக்குநரையும் மாற்றிவிட்டதாக அதிர்ச்சி கிளப்பினார். உடனே நான், ஜெய்யிடம்தான் நான் கதை கேட்டேன், உங்களை அழைத்துவந்ததுமே அவர்தான். இந்தக் கதைக்காக அந்த இயக்குநர் பெரும் உழைப்பைப் போட்டுள்ளார். உண்மைச் சம்பவங்களை ஆராய்ந்து இதை உருவாக்கியுள்ளார். எனவே இயக்குநரை மாற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை என்றேன். ஆனால், நான் நடித்தே ஆகவேண்டும் என புரொடியூசர் கவுன்சிலில் புகார் அளித்தார்கள். அதன்பிறகு, ஜெய் இதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை என்றால் நான் நடித்துக் கொடுக்கிறேன் என்றேன். ஆனால், தயாரிப்பாளர் ஜெய் மீது குற்றம் சுமத்தி போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்தார். பின்பு நான் எனக்குத் தெரிந்த அதிகாரிகள் மூலம் ஜெய்யை வெளியே கொண்டுவந்தேன். அதே புரொடியூசர் கவுன்சிலிலும், இயக்குநர் சங்கத்திலும் ஜெய் மூலமாகவே ஒரு புகாரைப் பதிவு செய்தோம். தன்னுடைய கதையை அனுமதியின்றி தயாரிப்புத் தரப்பு பயன்படுத்துகிறார்கள் என்று ஜெய் புகாரளித்தார். துரதிர்ஷ்டவசமாக, ஜெய் அப்போது இயக்குநர் சங்கத்தில் மெம்பராகவில்லை. அவர் உடனே உறுப்பினராக நானே பணமும் கொடுத்தேன்.

கௌதம் மேனன் - அன்புச்செல்வன் பட போஸ்டர்
கௌதம் மேனன் - அன்புச்செல்வன் பட போஸ்டர்

இதெல்லாம் மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்தவை. தற்போது பார்த்தால், திடீரென, வேறொரு இயக்குநரை வைத்துத் தயாரிப்புத் தரப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளது. இது குறித்து என்னிடம் எதுவுமே விவாதிக்கவில்லை. விஷ்ணு விஷால் உள்ளிட்ட பிரபலங்களிடமும் நான் அப்ரூவ் செய்த போஸ்டர்கள் என்று பொய் சொல்லித்தான் போட வைத்திருக்கிறார்கள். அப்போது ஜெய் தொடங்கிய படத்தின் பெயர் 'வினா' என்பதாகத்தான் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. இப்போது வேறொரு இயக்குநர், படத்தின் பெயர் 'அன்புச்செல்வன்' என்று மாற்றியிருக்கிறார்கள். இது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது.

நான் சூர்யாவுடன் தொடங்கிய 'துருவ நட்சத்திரம்' படம் டிராப் ஆனது. அதன்பிறகு அதே சூர்யா நடிப்பதாக பத்து நாள்களில் நான் வேறொரு போஸ்டரை அவர் அனுமதியின்றி வெளியிட முடியுமா? நான் என்பதால் இப்படியான காரியங்களைச் சுலபமாகச் செய்கிறார்கள்" என்று ஆதங்கப்பட்டார்.

இது குறித்து 'அன்புச்செல்வன்' படத் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் ஒருவருக்கே இப்படி நடந்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.