Published:Updated:

``ஜெஸ்ஸி காலடில வாழணும்னு கார்த்திக் சொல்றது, உங்களுக்கெல்லாம் எப்படிப் புரிஞ்சது?'' - கெளதம் மேனன்

Trisha
Trisha

`கார்த்திக் டயல் செய்த எண்' மூலம் மீண்டும் வைரலாகியிருக்கிறது சிம்பு - த்ரிஷா - கெளதம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி. சோஷியல் மீடியாக்களில் இந்தக் கூட்டணியின் குறும்படத்துக்கு பாசிட்டிவ், நெகட்டிவ் எனக் கலந்துகட்டி ரெஸ்பான்ஸ்கள் வர கெளதம் வாசுதேவ் மேனனிடம் பேசினேன்.

`` `கார்த்திக் டயல் செய்த எண்' நல்லபடியா முடிச்சாச்சு. அடுத்து நெட்ஃபிளிக்ஸ்காகப் பண்ற ஆந்தலாஜி படத்தோட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் செம பிஸியா போயிட்டிருக்கு. முழுக்க முழுக்க ரிமோட்ல வொர்க் பண்றது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. வெற்றிமாறன், சுதா கோங்ரா, விக்னேஷ் சிவன், நான்னு நாலு பேரும் தனித்தனியா அரை மணி நேரப் படமா பண்ணியிருக்கோம். அந்தப் படத்துக்கான வேலைகள்தான் இப்போ ஃபைனல் ஸ்டேஜ்ல இருக்கு'' என எப்போதும்போல பாசிட்டிவாகப் பேசத்தொடங்கினார் கெளதம் வாசுதேவ் மேனன்.

`` `லாக் டெளன்ல ஷூட்டிங்... ஒரு குறும்படம்... இந்த அனுபவம் எப்படியிருந்தது?''

``நத்திங் இஸ் இம்பாசிபிள் கான்செப்ட்தான். வீட்டுக்குள்ளயே முடங்கியிருந்தாலும் இந்த நேரத்துல இப்படி ஒரு விஷயம் பண்ணலாமேன்னு தோணுச்சு. வெற்றிகரமா பண்ணிட்டோம். `விடிவி- 2' படத்துக்கான ஸ்கிரிப்ட்தான் எழுதிக்கிட்டிருந்தேன். அப்போதான் அதுல இருந்து ஒரே ஒரு சீனை மட்டும் எடுத்து குறும்படமா பண்ணலாம்னு தோணுச்சு. அப்படி ஆரம்பிச்சதுதான் `கார்த்திக் டயல் செய்த எண்.' ஆனா நினைச்ச மாதிரி எதுவும் ஈஸியா இல்ல. புராசஸ் கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது.''

Gautham Menon
Gautham Menon

``குறும்பட ஐடியாவை சொன்னதும் சிம்பு என்ன சொன்னார்?''

``இது ஒரு புது முயற்சிங்கிறதால அவருக்கு சொன்னதும் பிடிச்சிடுச்சு. ஸ்கிரிப்ட்டை அனுப்பினேன். படிச்சிட்டு `பிரதர் இதுல சில விஷயங்கள் இருக்கு. கொஞ்சம் லைனை கிராஸ் பண்ற மாதிரியிருக்கு. இதை இப்படித்தான் பண்ணுவோமா'ன்னு கேட்டார். `ஆமா பிரதர்... ரெண்டு பேரும் ஒரு ஸ்பேஸ்ல இருக்காங்க. அந்த ஸ்பேஸ்ல இருக்கவங்களாலதான் இப்படிப் பேசமுடியும். எல்லா எக்ஸ்கிட்டயும் இப்படிப் பேசிட முடியாது. இவனை ஹேண்டில் பண்ணத்தெரிஞ்ச பொண்ணுதான் ஜெஸ்ஸி. ரொம்ப நாகரிகமாதான் இருக்கும்'னு சொன்னேன். உடனே அவர் `ஆமா, ரொம்ப அழகா இருக்கு. நான் படிச்சதும் அழுதுட்டேன். நான் பண்றேன்'னு சொன்னார். த்ரிஷாவும் ஓகே சொன்னதும் ஷூட்டிங் வேலைகளை ஆரம்பிச்சோம். நான் முன்னாடியே சொன்னமாதிரி ஷூட் பண்றது அவ்ளோ ஈஸியா இல்லை. ஒரு நாள் முழுக்க ரிகர்சல் பண்ணோம். கேமரா எங்க வைக்கலாம்னு டிஸ்கஷன் நடந்துச்சு. ஐபோன்லதான் ஷூட் பண்ணோம்ங்கிறதால ரிக்ல ஐபோனை செட் பண்ணி ரெண்டு பேர் வீட்டுக்கும் அனுப்பினோம். ஒரு நாள் சிம்பு வீட்ல ஷூட், அடுத்த நாள் த்ரிஷா வீட்லனு ரெண்டு நாள்ல ஷூட் முடிச்சிட்டோம். இந்தக் குறும்படம் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான்கிட்ட நான் எதுவும் சொல்லல. எடிட் பண்ணி, டப்பிங் முடிச்சு ஃபைனலாதான் ரஹ்மானுக்கு அனுப்பினேன். `லாக்டெளன்ல ஒரு ஷார்ட் ஃபிலிம் ஷூட் பண்ணியிருக்கேன். டப்பிங்கோட அனுப்பியிருக்கேன். நீங்க பாருங்க'ன்னு அவருக்கு மெசேஜ் பண்ணேன். அவர் `Very good. Very Sweet. We will do it'னு மெசேஜ் அனுப்பினார். 5 நாள்ல பின்னணி இசைலாம் முடிஞ்சு ரஹ்மான் ஸ்டுடியோல இருந்து ஃபைல் வந்துடுச்சு. எல்லாம் சேர்ந்து இந்தக் குறும்படத்தை ஒரு வாரத்துல முடிச்சிட்டோம்.''

Simbu
Simbu

``விடிவி-2 படத்துக்கும் `கார்த்திக் டயல் செய்த எண்'தான் டைட்டிலா?''

``இல்ல. படம் நிச்சயமா வேற பேர்லதான் வரும்.''

``இந்தக் குறும்படத்துல விடிவி டீம் அப்படியே இருந்தது. ஆனா, தாமரை மட்டும் மிஸ் ஆகிட்டாங்களே?''

``ஆமாம். பாடலுக்கான ஸ்பேஸ் இதுல இல்ல. ஒரு யூடியூப் வீடியோவை 3 - 4 நிமிஷத்துக்கு மேல பார்க்க வைக்கிறது கஷ்டம். ஆனா, இந்த 12 நிமிஷ குறும்படத்தை இப்பவரைக்கும் 60 லட்சம் பேருக்கு மேல பார்த்திருக்காங்க. இது பெரிய நம்பர். பாட்டெல்லாம் வெச்சிருந்தா இன்னும் டைம் அதிகமாகியிருக்கும்.''

``குறும்படத்துக்கு வர விமர்சனங்கள், மீம்ஸ்களைப் பார்த்தீங்களா?''

``குட் ஆர் பேட், நான் பாப்புலர் ரிவியூஸ் படிக்கிறதில்ல. நான் 10 பேர்கிட்ட கேட்டு எதுவும் ஷூட் பண்றதில்லை. படம் வெளிய வந்ததும் ரெண்டு, மூணு நாள்ல அதுக்கான ரெஸ்பான்ஸ் என்னன்னு டீம்ல இருக்குறவங்க சொல்லிடுவாங்க. பிசினஸா படம் எப்படிப் போயிருக்குன்ற தகவல்களும் வந்துடும். அவ்ளோதான். என்னோட எல்லா படங்களுக்குமே மிக்ஸட் ரிவியூஸ்தான் வரும். விடிவிக்கும் மிக்ஸட் ரிவியூஸ்தான் வந்தது. என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தக் குறும்படத்துக்கு 80 சதவிகிதம் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்தான் வந்திருக்கு. சிலபேர்தான் இந்தக் கான்செப்ட்டையே புரிஞ்சிக்காம, அல்லது அவங்க மனசுக்குள்ள இருக்க நெகட்டிவிட்டியைப் புகுத்தி குறும்படத்தைத் தாக்கி விமர்சனம் பண்றாங்கன்னு நினைக்கிறேன். அதே போல் நெகட்டிவ் மீம்ஸ்களையும் நான் பார்க்குறதில்லை. என் டீம்ல இருக்கவங்களும் அப்படிப்பட்ட மீம்ஸ்களை எனக்கு அனுப்ப மாட்டாங்க.''

Gautham Vasudev Menon
Gautham Vasudev Menon

``ஒரு எல்லைமீறல் இருக்குன்னு தெரிஞ்சேதான் இந்தக் காட்சியை எழுதினீங்களா?''

``நான் இந்த சீனை ஒரு கவிதை மாதிரிதான் எழுதியிருக்கேன். எடுத்திருக்கேன். கார்த்திக் - ஜெஸ்ஸி ரெண்டு பேருக்குள்ளயும் நல்ல புரிதல் இருக்கு. ஜெஸ்ஸிக்கு நல்ல கணவர் இருக்கார். ஜெஸ்ஸிக்கு, கார்த்திக் என்ன பேசுவான், என்ன சொல்லுவான்னு தெரியும். வாழ்க்கைல ரொம்பத் தெளிவா இருக்கப்பொண்ணு ஜெஸ்ஸி. நம்ம குழந்தை கூட நமக்கு சொல்ல முடியாத ஒரு அட்டாச்மென்ட் இருக்கும்ல அந்தமாதிரிதான் இந்த ரிலேஷன்ஷிப்பும். ஒரு பாண்ட், ஒரு பைண்டிங் இருக்கு. நம்ம குழந்தைக்கு ஒரு பிரச்னைன்னா நாம உடனே போய் உதவுவோம். அதுக்கு வலிச்சா, நமக்கும் வலிக்கும். உலகமே நெகட்டிவா இருக்க சூழல்ல அவனால அவனோட ஸ்கிரிப்ல கான்சென்ட்ரேட் பண்ணமுடியல. எதுவும் பாசிட்டிவா இல்லைன்னும்போது திடீர்னு ஜெஸ்ஸிகிட்ட பேசணும்னு தோணுது. போன் பண்றான். `உன் தோள் வேணும்... உன் கால்ல வாழணும்'னுதான் சொல்றானே தவிர, `உன்னைத்தொடணும், உன் டிரெஸ்ஸைக் கழட்டணும்'னு அவன் சொல்லலை. ஏன் சிலபேர் தப்பா புரிஞ்சிக்கிறாங்கன்னு புரியல. இது லைஃப்ல யாரும் பண்ணாத விஷயம் கிடையாது. அதேசமயம் எல்லோரும் இப்படி போன் பண்ணிப் பேசுங்கன்னும் நான் சொல்லலை. இது மெச்சூர்டான ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்குற ஓர் உரையாடல். இதை எல்லை மீறாம எப்படி ஹேண்டில் பண்றதுனு அவங்க ரெண்டு பேருக்குமே தெரியும்.''

Gautham Menon, Vijay
Gautham Menon, Vijay

``இந்தக் குறும்பட கிரெடிட்ஸ்ல ஐசரி கணேஷ் பெயரையும் போட்டிருந்தீங்க... அவரோட பங்கு இதுல என்ன?''

``நான் கஷ்டப்படுறப்போ துணையா இருந்தவர். அதனாலதான் அவரோட பேரை இந்த ஷார்ட் ஃபிலிம்ல போட்டிருந்தேன். தினமும் போன்ல பேசுவோம். சிம்பு கூட ஒரு படம் பண்றதுனு நிறைய விஷயங்கள் பேசிக்கிட்டே இருப்போம். ஆனா, இப்படியொரு ஷார்ட் ஃபிலிம் நான் எடுக்குறேன்னு அவருக்கே தெரியாது. அவர்கிட்ட சொல்லாமதான் அவரோட பேரை டைட்டில் கார்டுல போட்டிருந்தேன். அப்புறம்தான் அவருக்கு லிங்க் ஷேர் பண்ணி பார்க்கச் சொன்னேன். அவர்மேல நான் ரொம்ப மரியாதை வெச்சிருக்கேன்.''

`` `துருவ நட்சத்திரம்' படத்தை நாங்க எப்ப பார்க்கலாம்?''

``போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் போய்க்கிட்டிருக்கு. எல்லாம் சரியா நடந்தா, இந்த வருஷத்துக்குள்ள படத்தை ரிலீஸ் பண்ணிடலாம்.''

kamal Hassan, Gautham Menon
kamal Hassan, Gautham Menon

``ஜி.வி.பிரகாஷ் படத்துல நடிக்கிறீங்களே... வில்லன் கேரக்டர்தானா?"

``நடிக்கிறது ஈஸியான விஷயமே கிடையாது. கதை, களம், படம் பண்ற அந்த க்ரூ இதெல்லாம் சரியா இருந்தா மட்டும்தான் அந்தப் படத்துல நான் நடிக்கிறேன். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு வெற்றிமாறனோட முன்னாள் அசோசியேட்தான் இயக்குநர். `இந்தப் படத்துல நீங்க நடிச்சா நல்லா இருக்கும்'னு எனக்கு நெருக்கமான சிலரும் சொன்னாங்க. நடிச்சிட்டிருக்கேன். லாக்டெளனுக்கு அப்புறமும் எனக்கான ஷூட் இருக்கு. நல்ல கேரக்டர். நல்ல எக்ஸ்பீரியன்ஸுக்காக மட்டுமேதான் நான் நடிக்கிறேன். ஆனா, இந்தப் படத்துல நான் வில்லனா இல்லையான்னுலாம் எனக்குத் தெரியாது.''

அடுத்த கட்டுரைக்கு