கட்டுரைகள்
சினிமா
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

ஜெமினி கணேசன் 100: நூறாண்டு காணும் காதல் மன்னன்!

ஜெமினி கணேசன் 100
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெமினி கணேசன் 100

சுப குணராஜன்

கணபதி சுப்ரமணியன் சர்மா என்கிற பிறப்பு நாம கரணமும், ரத்ன கண்ணு ராமசாமி ஐயர் கணேசன் என்ற பதிவுப்பெயரும் கொண்டவர்தான் தமிழ் சினிமாவில் 1947 முதல் 2002 வரை ஏறத்தாழ இருநூறு படங்களுக்கும் மேலாக நடித்த ஜெமினி கணேசன் பிறந்து சரியாக நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. புதுக்கோட்டையின் பிரபலமான வழக்கறிஞர் நாராயணசாமி ஐயர்– சந்திரம்பாள் தம்பதிகளின் மகன் வழிப் பேரன். இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், மெட்ராஸ் பிரசிடென்சி சட்டப் பேரவையின் முதல் பெண் உறுப்பினருமான முத்துலட்சுமி ரெட்டி இவரின் சொந்த அத்தை. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் போன்றோருடன் இணைந்து தேவதாசி தடைச் சட்டம் உருவாகக் காரணமாக இருந்த முத்துலட்சுமி ரெட்டியின் தாய், ஜெமினியின் பாட்டி. புதுக்கோட்டைக் கல்லூரியில் பி.ஏ முடித்துவிட்டு, சென்னை கிறித்தவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகவும் ( Tutor ) பணியாற்றியவர், பின்னர் ஜெமினி ஸ்டூடியோவில் நடிகர்களைத் தேர்வு செய்யும் இயக்குநராகப் ( Casting Director ) பணியில் சேர்ந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள்

தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதியான இருதுருவ நாயகர்களின் இருப்பினை ஓரளவில் அசைத்துப் பார்த்த ஆளுமை ஜெமினி. ஐம்பதுகள் தொடங்கி எழுபதுகளின் இடைக்காலம் வரை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிவாஜி, எம்ஜிஆர் எனும் பேராளுமைகளிடையே தனக்கான ஓர் இருப்பைச் சாத்தியமாக்கிக் கொண்டவர் அவர்.

ஜெமினி அவரது சினிமா பிரவேசம் தொடங்கி இறுதிவரை பிற பிரபல நாயகர்களுடன் இணைந்து நடிப்பதைத் தொடர்ந்து மேற்கொண்டவர். சிவாஜியுடன் பதினைந்து படங்கள் வரையும் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடனும் ‘முகராசி’ படத்தில் நடித்துள்ளார். அது தவிர அவருக்கு மிக இளையவர்களான ஜெய்சங்கர், ஏவிஎம் ராஜன் போன்றோருடனும் அவர் நடிக்கத் தயங்கியதில்லை. இதன் பொருள் அவர் தன்னை தனித்த நாயகனாக நிலை நிறுத்திக்கொள்ளும் முனைப்பற்றவர் என்பதல்ல; தமிழ் சினிமாவின் இருதுருவ நாயக இருப்பு தொடர்ந்து நிலைபெற்றுவிட்ட ஒன்று என்பதால், துருவங்களாக உருப்பெறாதவர்கள், அந்த முனைப்பை முன்னிறுத்துவது பயன் தராது என்பது கருதிய நிலைப்பாடே.

ஜெமினி கணேசன் திரைப்படங்களின் இன்னொரு முக்கியமான கூறு அவரது படங்களின் கதைக்களங்கள். பெண் மையக் கதைகளைக் கொண்டவை என்பது. கதைக்களமும் காட்சிகளும் பெண்களை மையமிட்டதாய் அல்லது முதன்மைப்படுத்தியதாய் இருக்கும்போது, அந்தக் களத்திலிலுள்ள நாயகன் அந்தக் காட்சியின் இயல்பில் இயைந்துவிடுபவனாக இருத்தலே அந்தக் காட்சிக்குச் சிறப்பு. காட்சிகளுக்கான தேவையளவை மீறாத இருப்பை / நடிப்பை வழங்கும் நடிகராக ஜெமினி இருந்தார்.

ஜெமினி கணேசன் 100: நூறாண்டு காணும் காதல் மன்னன்!

நடிப்பு

ஜெமினியின் நடிப்பு பாணி தமிழ் சினிமாவில் தனித்துவமானது. அநேகமாக தமிழ் சினிமாவில் நாடக மேடை அனுபவமின்றி திரைப்படங்களில் நடித்த முதல் நாயக நடிகர் ஜெமினி கணேசனே என்று கூறலாம்.

எம்ஜிஆர் , சிவாஜி எனும் பேராளுமைகளின் நடிப்பு பாணி குறித்த விவாதம் பலவேளைகளில் ஜெமினியைத் தொட்டு நகரும். சிவாஜி கணேசனின் நடிப்பு பாணி பல பரிமாணங்கள் கொண்டது. அந்த நடிப்பு முறையின் எதிர்நிலையில் இயங்கியவர்கள் எம்ஜிஆரும்,ஜெமினியும். ஆனால் அவற்றிடையே நுட்பமான வேறுபாடுகளைக் காண முடியும். எம்ஜிஆரின் திரைவெளி இருப்பு பெரும்பாலும் அசைவுகளால் ( Movement ) நிர்மாணிக்கப்படும். அவர் உள் நுழைவதும், வெளியேறுவதும் ஓட்டமும் நடையுமாக இருக்கும். திரைவெளியில் இருக்கும்போது கவனம் அவரை விட்டு விலகாத வண்ணம் உடலசைவுகளை, நகர்வுகளை நிகழ்த்தியபடி இருப்பார். ஆனால் ஜெமினி இதற்கு மாறாக அதே தளத்தில் குறைந்த அசைவுகளால் இயங்குபவர். அவரது இருப்பு காட்சியின் இயல்பை எந்தவகையிலும் குலைப்பதாய் இருக்காது. எம்ஜிஆர், ஜெமினி ஆகியோரின் நடிப்பு முறையை ‘நடிக்காத நடிப்பு’ ( Non Acting ) என வகைப்படுத்தலாம். ஆனால் அவர்களிடையே இருக்கும் நுட்பமான வேறுபாட்டினை வகைப்படுத்த எம்ஜிஆருடைய நடிப்பை இயலாமையின் வெளிப்பாடாகவும், ஜெமினி அவர்களுடையது ‘நடிக்க முற்படாமை’ என்றும் சொல்லலாம்.

ஜெமினி கணேசன் 100: நூறாண்டு காணும் காதல் மன்னன்!

காதல் மன்னன்

தமிழ் சினிமாவில் காதல் மன்னன் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது ஜெமினி கணேசன்தான். இந்தப் பட்டம் அவருக்கு திரைப்படங்களில் அவர் ஏற்ற பாத்திரங்களால் கிடைத்ததா அல்லது அவரது சொந்த வாழ்க்கையின் தடங்களால் உருவானதா என்பது தீர்மானமாகச் சொல்ல முடியாத ஒன்று. அவரது திரைப்படப் பாத்திரங்களில் மிஸ்ஸியம்மா (1955), வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958) போன்ற மிகச் சில படங்களில் மட்டுமே அவர் காதலிக்கும் இளைஞராக நடித்திருக்கிறார். அவரது மிகப் பெரும் வெற்றிப் படங்களான கல்யாணப் பரிசு, களத்தூர் கண்ணம்மா, கற்பகம் போன்றவற்றில் மணமான, மனைவியை இழந்தவராகவே நடித்துள்ளார். இவை தவிர்த்த பெரும்பாலான வெற்றிப் படங்களான பாசமலர் போன்றவற்றில் அவர் இரண்டாம் நாயகனே. எனவே திரைப்படங்களைவிட அவரது சொந்த வாழ்க்கையே இதற்கான முதன்மையான காரணத்தை வழங்கியிருக்கக்கூடும் எனக் கருத வாய்ப்புள்ளது.

ஜெமினி கணேசன் திரைப்படங்களில் நடிகராக அறிமுகமானது, ஜெமினி ஸ்டூடியோ தயாரிப்பான `மிஸ் மாலினி’ (1947) படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில். அந்தப் படத்தின் கதாநாயகி அப்போதே மிகப் பிரபலமான புஷ்பவல்லி, இந்திய சினிமாவின் பேரழகு நடிகையரில் ஒருவராக வலம் வந்தவர். ஜெமினி கதாநாயகனாக அறிமுகமான ‘மனம் போல் மாங்கல்யம்’ (1953) திரைப்படத்தின் கதாநாயகி சாவித்திரி. இவர்கள் இருவருமே ஜெமினியின் ‘காதல் இணையர்கள்’ ஆனார்கள். தனது பத்தொன்பதாவது வயதில், குடும்ப உறவில் அலமேலு ( என்கிற ) பாப்ஜியை மணந்தவர் ஜெமினி. ஆனால் அவரது உறவு பாப்ஜி, புஷ்பவல்லி, சாவித்திரி என முடிவுறவில்லை. பாப்ஜியுடனான மணவுறவில் பிரபல மருத்துவர் கமலா செல்வராஜ், ஜெயா ஸ்ரீதர் உள்ளிட்ட நான்கு பெண்களையும், புஷ்பவல்லியுடனான காதலுறவில் பிரபல இந்தி நடிகை ரேகா மற்றும் ராதா என இருபெண்களையும், சாவித்திரியுடனான உறவில் சாமுண்டீஸ்வரி, சதீஷ் இரு பிள்ளைகளையும் பெற்றவர் ஜெமினி.

ஜெமினி கணேசன் 100: நூறாண்டு காணும் காதல் மன்னன்!

சாகாவரம் பெற்ற ஜெமினியின் பாடல்கள்

ஜெமினியின் திரை இருப்பை முழுயடையச் செய்தது அவரது பாடல் காட்சிகள். அதிலும் காதல் காட்சிகளில் அவரது ‘இயல்பு’ சற்று துலக்கமாகிவிடும். அவரது இயல்பும், பின்னணிக் குரல்களும் அப்படியே பொருந்தின. அவரது திரைப்பாடல்களை சாகாவரம் பெறச் செய்தது தமிழின் ஆகச் சிறந்த இரண்டு குரல்களின் அரிய பங்களிப்பால். முதலாவது ஏ எம் ராஜா. ஜெமினி கதாநாயகனாக அறிமுகமான ‘மனம் போல் மாங்கல்யம்’ படத்தின் ‘மாப்பிள்ளை டோய்’ தொடங்கி ‘பாட்டுப் பாட வா, பார்த்துப் பேசவா’ (தேன் நிலவு) ஊடாக ஏராளமான பாடல்களால் ஜெமினியின் திரை இருப்பை உறுதிசெய்தவர். இரண்டாவது முக்கியமான பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ். அவரது பாடல்களை என்றும் ஜெமினியின் முகத்தோடு மட்டுமே பொருத்திக்கொள்ளும் பழகிய மனங்கள். ஜெமினியின் நல்வாய்ப்பு இந்த இருவரது குரல்களும் அவருக்கே என உருப்பெற்றதான தனித்தன்மை... அதிராத ஆண் குரல்கள். ‘காலங்களில் அவள் வசந்தம்’ (பாவ மன்னிப்பு) ‘வளர்ந்த கலை மறந்து விட்டாள்’ (காத்திருந்த கண்கள்) ‘மயக்கமா கலக்கமா’ (சுமைதாங்கி) ஆகியவை தமிழ் சினிமாவின் பொக்கிஷங்கள். தமிழ் சினிமாவின் சாகாவரம் பெற்ற இன்னொரு குரலான எஸ் பி பாலசுப்ரமணியம் முதலில் பாடிய பாடலான ‘இயற்கையென்னும் இளைய கன்னி’யும் (சாந்தி நிலையம்) ஜெமினிக்காகப் பாடப்பட்டது என்பது சந்தர்ப்பவசமானது இல்லை எனவே தோன்றுகிறது. தமிழ் சினிமாவின் அழியாப் பெட்டகமான அரிய குரல்களாலும், பாடல்களாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர் காதல் மன்னன்.

அறுபதுகளின் இறுதியில் முடிவிற்கு வந்த அவரது நாயக நடிப்பில், அவரே தயாரித்து நடித்த படம், பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘நான் அவனில்லை.’ ஜெமினி இயக்கிய ஒரே படம் ‘இதயமலர்.’ ஆனால் சமகாலம் அவரை நினைவில் கொள்ளும்படியானவை முதிய பாத்திரங்களை ஏற்று நடித்த ‘உன்னால் முடியும் தம்பி’, `அவ்வை சண்முகி’, ‘மேட்டுக்குடி’ ஆகியவை. பின்னிரண்டு படங்களும் அவரது நடிப்பாளுமையின் நகைச்சுவைப் பரிமாணங்களை மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியவை. ‘அவ்வை சண்முகி’க்காக முதலில் கமலஹாசன் சிவாஜியையே தொடர்பு கொண்டாராம், அவர்தான் “ஜெமினிதான் அந்தப் பாத்திரத்திற்கு சரியாக வருவான். அவனையே போடு’’ என்றாராம்.

திரைவெளியிலும், வாழ்வுவெளியிலும் தனது கட்டமைந்துவிட்ட பிம்பத்தை நேசித்தவராக வாழ்ந்தவர் ஜெமினி. எம்ஜிஆர், சிவாஜி என்னும் இரு ஆளுமைகள் குறித்த உரையாடல்கள் நடைபெறும் போதெல்லாம் அங்கே தவிர்க்கமுடியாமல் வந்துவிடக்கூடியவர் அவர்.