Published:Updated:

“என் மனசாட்சி உறுத்துச்சு!” - ஜெமினி கணேசன் #AppExclusive

Gemini Ganesan

நடிகர் ஜெமினி கணேசன் 1990-ம் ஆண்டு விகடனுக்கு அளித்த சிறப்புப் பேட்டி உங்களுக்காக!

“என் மனசாட்சி உறுத்துச்சு!” - ஜெமினி கணேசன் #AppExclusive

நடிகர் ஜெமினி கணேசன் 1990-ம் ஆண்டு விகடனுக்கு அளித்த சிறப்புப் பேட்டி உங்களுக்காக!

Published:Updated:
Gemini Ganesan

ஜெமினி கணேசன் சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி ரோட்டிலிருக்கும் தன் வீட்டு வரவேற்பறையில், தொளதொள பனியனோடு, காலை நேர வாக்கிங்கை முடித்துவிட்ட களைப்பில் அமர்ந்திருந்தார், நடிகர் ஜெமினி கணேசன்.

எழுபத்து மூன்று வயதைத் தாண்டிவிட்ட போதிலும் காதல் மன்னனின் முகத்தில் கவர்ச்சியின் மிச்சம் இன்னும் இருக்கிறது. லேசாய் அவரைப் பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்று காதல், கல்யாணம் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தோம்.

“அதையெல்லாம் இப்போ ஏன் ஞாபகப்படுத்தறே... ஐம்பத்து நாலு வருஷம் ஆச்சுதே” என்றவர், “இன்றைய இளம் தலைமுறையினருக்காக...” என்று நாம் கேட்டதும்...“நான் நன்றாகப் படிப்பேன். டாக்டராக வேண்டும், பெரிய பெரிய சாதனைகள் புரிய வேண்டும் என்று சின்ன வயதிலேயே எனக்கு நெஞ்சு நிறைய ஆசைகள். அது நிறைவேறாமலேயே போயிடுத்து. எனக்குப் பதினோரு வயசிருக்கும் போதே என் அப்பா ராமசாமி காலமாகிவிட்டார். என் ஆசைகளுக்கு விழுந்த முதல் அடி அது. நான் ஒரே பிள்ளை, வசதியான குடும்பம்.அம்மா கங்காம்மாள்தான் என்னை வளர்த்து ஆளாக்கினார். நல்லா படிக்க வைத்தார். பி.எஸ்ஸி. (கெமிஸ்ட்ரி) முடிச்சேன். நிறைய மார்க் வாங்கியிருந்தேன். மேற்கொண்டு டாக்டருக்குப் படிக்கணும்னு முயற்சி மேற்கொண்டேன். அந்த நேரத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த என் சிறிய பாட்டி பாகீரதி இறந்துட்டார். அதனால், மேற்கொண்டு படிக்க வேண்டாம்; வேலைக்குப் போ என்று அம்மா சொல்லிவிட்டார்” என்று சோகப் பெருமூச்சுவிட்டவர், தொடர்ந்தார்...

‘‘அப்புறம் பாருங்க... திருச்சியைச் சோந்த ஃபேமஸான கான்ட்ராக்டர் ராஜ கோபால்னு ஒருத்தர், எங்கள் குடும்பத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தார்” என்று நிமிடத்தில் சட்டென சோகத்திலிருந்து சந்தோஷத்துக்கு மாறினார் ஜெமினி. “என்னை அவருக்குப் பிடிச்சுப் போச்சு; ‘நிறையப் படிக்க வைக்கிறேன். பையனுக்குப் படிப்பு மேல உள்ள ஆசையை நான் நிறைவேற்றி வைக்கிறேன்’னு சொன்னார்.

“என் மனசாட்சி உறுத்துச்சு!” - ஜெமினி கணேசன்
“என் மனசாட்சி உறுத்துச்சு!” - ஜெமினி கணேசன்

படிக்க வைப்பாருங்கற நம்பிக்கையிலேதான் நான் பொண்ணு பார்க்கப் போனேன். படிக்க முடியாத சூழ்நிலையா இருக்கேங்கற வருத்தம் ஒரு பக்கம்; பாட்டி இறந்த கவலை ஒரு பக்கம். பொண்ணு பார்க்கப் போய் உட்கார்ந்தப்போகூட இதே நினைவுதான். அந்தச் சோகத்திலேயும் பொண்ணோட வசீகரமான முகம் என்னைப் பளிச்சுன்னு கவர்ந்திருச்சு. மஹாலட்சுமி மாதிரி இருந்தார். மேலே படிக்க வைக்கறதா வேறே சொன்னாளா... பட்டுன்னு கல்யாணத்துக்குச் சம்மதிச்சுட்டேன்.

1940 ஜூன் மாதம் 30-ம் தேதியன்று, திருச்சியில் உள்ள பெண் வீட்டிலேயே திருமணம் நடந்தது. அப்போ எனக்கு 19 வயசு. என் மனைவி அலமேலுவுக்குப் பதினாலரை வயசுதான். என் மனைவியின் பெயர் அலமேலுதான்னாலும் எல்லோரும் பாப்ஜின்னுதான் கூப்பிடுவாங்க. இன்னைவரைக்கும் அவள் பாப்ஜிதான். என்னோட இந்த வாழ்க்கை, வசதி, நிம்மதி, சந்தோஷம் எல்லாத்துக்கும் அவள்தான் காரணம். தங்கமானவ; பொறுமைசாலி; அதிர்ந்து பேச மாட்டா. அவளைப் பேச வைக்கறதுக்குள்ளயே எனக்குப் பெரும்பாடாகிவிடும்.

கல்யாணத்துக்கப்புறம் திருச்சியில் ஒரு ஸ்கூலில் ஆசிரியராக வேலை பார்த்தேன். அதன்பின், சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்டியன் காலேஜ்ல லெக்சரர் வேலை கிடைச்சது. திருச்சியிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தோம். வாழ்க்கை சந்தோஷமாகவே போய்க் கிட்டிருந்தது. லெக்சரரா இருந்தப்பவே சினிமா மேலே ஆர்வம் ஏற்பட்டுது. ஜெமினி ஸ்டுடியோவில் சேர்றதுக்காக முயற்சி பண்ணினேன். அங்கே வேலை கிடைச்சுது. நடிகர்-நடிகைகளைத் தேர்வு செய்யற குழுவிலே வேலைக்குச் சேர்ந்தேன். அப்புறமா நானே நடிகனானது, ஆர்.கணேஷ் என்ற என் பெயர் நன்றி விசுவாசத்தால ‘ஜெமினி கணேஷ்’னு ஆனது எல்லாம்தான் நல்லா தெரியுமே!” என்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

“உங்களோட ஒரு ஸைடைப் பத்திச் சொல்லிட்டீங்க. ‘காதல் மன்னன்’னு இன்னொரு பக்கம் இருக்கே. அதைப்பத்தி சொல்லலியே?” என்றதும், “அட, போப்பா! அதெல்லாம் ஒரு விளையாட்டு மாதிரி. இப்போ எதுக்கு அந்த வம்பெல்லாம்?” என்றபடி எழுந்தவரைச் சமாதானப்படுத்தி உட்கார வைத்தபின், மடைதிறந்த வெள்ளமெனப் பேச்சை ஆரம்பித்தார்.

“என் மனசாட்சி உறுத்துச்சு!” - ஜெமினி கணேசன்
“என் மனசாட்சி உறுத்துச்சு!” - ஜெமினி கணேசன்

“என் மனைவிக்கு வீடு, குழந்தைகள்... இதைத் தவிர, வேறெந்த நினைவுகளும் கிடையாது. நானோ கொஞ்சம் வேகமானவன். சினிமாவுக்கு வந்ததுக்கப்புறம் பொம்பளைங்க ஆசைப்படறாங்களேன்னு ‘அப்படி இப்படி’ப் போனேன். அதுவே ஒரு பழக்கமாகி, என்னைக் காதல் மன்னனாக்கிடுச்சு. இதுக்காக நான் பிளான் பண்ணி எதுவும் செய்யலை. அது மட்டுமில்லே... நான் போற அந்தப் பாதை தவறானதுன்னும் குடும்பத்துக்கு, மனைவிக்கு துரோகம் பண்றேன்னும் என் மனசாட்சி உறுத்துச்சு. அந்த உறுத்தல் காரணமா, மனைவி - மக்கள் மேலே நான் ரொம்ப ரொம்ப அன்பு செலுத்த ஆரம்பிச்சேன். செய்யற தவறுக்கெல்லாம் இது ஒரு பிராயச்சித்தம்னு நினைச்சுப் பேன். அப்படி அவங்க மேலே அன்பும் கவனமும் செலுத்தினதாலதான் குடும்பம் சந்தோஷமா இருக்கு. டாக்டராகணும்னு நான் ஆசைப்பட்டது நிறைவேறாம போனதால், என் மகள்களை டாக்டர்களாக்கினேன். மகள்களெல்லாம் காதல் கல்யாணம்தான். எல்லோரும் சந்தோஷமா குடும்பம் நடத்தறாங்க.பெரிய சாதனையெல்லாம்கூட செஞ்சுட்டு வர்றாங்க. எல்லாமே பார்த்துட்டேன். முழுமையான வாழ்க்கை வாழறதா எனக்கொரு திருப்தி!” என்று நிஜமான மகிழ்ச்சியோடு சொன்னார் ஜெமினி கணேசன்.

- புல்லட் அங்கிள்

(16.11.1994 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)