``மேட் மேக்ஸின் அடுத்த ரெண்டு பார்ட்டுக்கான கதை ரெடி!" - வார்னர் ப்ரோஸ் கதவைத் தட்டும் மில்லர்
ஏற்கெனவே வார்னர் ப்ரோஸ் நிறுவனத்துடன் மேட் மேக்ஸின் தயாரிப்பு நிறுவனமான கென்னடி மில்லர் புரொடக்ஷன்ஸ் `ஃப்யூரி ரோட்' படத்தின் விநியோகத்தில் ஏற்பட்ட ஒரு கணக்கு வழக்கில் முரண்பட்டு பிரிந்து நிற்கிறது.

எதிர்காலத்தில், மனித இனம் தன் அழிவின் விளிம்பில் சந்திக்கும் சிக்கல்களைப் பற்றி விவரிக்கும் கதைகளைப் `போஸ்ட் அப்போகாலிப்டிக்' படங்கள் என்பார்கள். இந்த ஜானர் படங்களின் முன்மாதிரிகளில் ஒன்றுதான் `மேட் மேக்ஸ்' தொடர்.

ஜார்ஜ் மில்லர் உருவாக்கிய `மேட் மேக்ஸ்' தொடருக்கு ஒரு தனி ரசிகக் கூட்டமே உள்ளது. அதிலும், கடைசியாக டாம் ஹார்டி நடிப்பி வெளிவந்த `ஃப்யூரி ரோட்' எக்கச்சக்க ஆஸ்கர்களைக் குவித்தது. கச்சிதமான நடிப்பு, நேர்த்தியான ஒளிப்பதிவு, சவுண்ட் மிக்ஸிங், கலை இயக்கம் மற்றும் வண்ணக்கலவை என எல்லாவற்றுக்கும் மேலாக அசாத்தியமான ஆக்ஷன் காட்சிகள்தான் அப்படத்தின் டாப் நாட்ச். இதுவரை நான்கு பாகங்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது மில்லர், இந்தத் தொடரின் அடுத்த இரண்டு பாகங்கள் குறித்த அறிவிப்பைப் பற்றி மறைமுகமாக தற்போது வெளியிட்டுள்ளார்.
அண்மையில் ஒரு ஆஸ்திரேலிய சினிமா இணையதளத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய மில்லர், `` `மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட்' அடுத்த இரண்டு பாகங்களுக்கான திரைக்கதை வாய்ப்போடுதான் நிறைவுபெறும். நாங்களும் அதற்கான எழுத்துப் பணியை முடித்துவிட்டோம். தற்போது படத்தின் விநியோகஸ்தரான வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தின் கண்ணசைவிற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறோம்" என்றார். ஏற்கெனவே வார்னர் ப்ரோஸ் நிறுவனத்துடன் மேட் மேக்ஸின் தயாரிப்பு நிறுவனமான கென்னடி மில்லர் புரொடக்ஷன்ஸ், `ஃப்யூரி ரோடு' படத்தின் விநியோகத்தில் ஏற்பட்ட ஒரு கணக்கு வழக்கில் முரண்பட்டு பிரிந்து நிற்கிறது.

அதனால், அந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும்வரை இதற்காக காத்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து மேலும் பேசிய மில்லர், ``இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை யாரும் வில்லன் இல்லை. நான் வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தைக் குறையும் கூறவில்லை. அதனுடைய முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியால்தான் அத்தனை சிக்கலும் ஏற்பட்டது. அவர் பதவி விலகியபின் எங்கள் சிக்கலுக்காக யாரும் பொறுப்பேற்க முன்வரவில்லை. அதனால்தான் நாங்களும் வேறுவழியின்றி நீதிமன்றத்தை நாடவேண்டிய சூழல் ஏற்பட்டது" என்று விளக்கமளித்தார்.