
அவங்க ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருப்பாங்க. எல்லாமே உளவியல் தொடர்பானவை. அதுல ஐந்து சிறுகதைகள் என்னை ரொம்பவும் பாதிச்சது
‘பாரதி’, ‘பெரியார்’, ‘ராமானுஜன்’ ஆகியோரின் சுயசரிதை படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஞானராஜசேகரன் ஐ.ஏ.எஸ். நீண்ட வருட இடைவெளிக்குப் பின், எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் ஐந்து சிறுகதைகளை ‘ஐந்து உணர்வுகள்’ ஆந்தாலஜியாகத் தயாரித்து இயக்கியிருக்கிறார்.
‘`எழுத்தாளர் சூடாமணி மெமோரியல் டிரெஸ்ட்டில் உள்ள நண்பர் பாரதி, ‘சூடாமணியின் கதைகளை நீங்க படமாக்கினா என்ன?’ன்னு என்னைக் கேட்டார். அப்படித்தான் இந்த முயற்சி தொடங்கியது.

அவங்க ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருப்பாங்க. எல்லாமே உளவியல் தொடர்பானவை. அதுல ஐந்து சிறுகதைகள் என்னை ரொம்பவும் பாதிச்சது. 1975-80 காலகட்டங்களில் நடந்த கதை இது. மகாகவிபாரதி, ‘எந்நாளும் இன்பமே, துன்பமில்லை எனக்கு’ன்னு நினைச்ச மாதிரி ஒரு விசால குணம் சூடாமணி அம்மாவிடமும் உண்டு. அவங்களோட எழுத்துகள் முழுவதும் வாசிக்கும்போது, பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும்கூட, ஆண்களை வெறுக்கல. ஆண்களின் மேன்மையையும் போற்றியிருக்காங்க. இது எனக்குப் பிடிச்சிருந்தது. ஐந்து கதைகளுமே குழந்தைகளையும் பெண்களையும் மையப்படுத்தின கதைகள். ஆரம்பத்துல யூடியூபுக்கோ, ஓ.டி.டி-க்கான படமாகவோ பண்ணலாம்னுதான் ஆரம்பிச்சேன். ஆனா, படமாக்கின பிறகு, ‘இது தியேட்டருக்கான படம்’னு இந்தப் படத்தைப் பார்த்தவங்க உணர்ந்தாங்க.
சின்னத்திரை, பெரிய திரையில் நன்கு பரிச்சயமான சுஜிதா, ஸ்ரேயா அஞ்சன், ஸ்ரீரஞ்சனி, சத்யபிரியா, சாந்தி வில்லியம்ஸ், ஷைலஜா செட்லூர், சஹானா, பேபி நிஷான்னு கதைக்கான ஆட்களை நடிக்க வச்சிருக்கேன். கடந்த லாக்டௌன் சூழல்ல படமாக்கிட்டேன். சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கார். என்னுடைய எல்லாப் படங்களுக்குமே லெனின்தான் எடிட்டிங்கை கவனிச்சிருக்கார். இதிலும் அவர்தான். ஒருமுறை அவரைச் சந்திக்கும்போது ஸ்ரீகாந்த்தேவாவைச் சந்திச்சேன். ‘உங்க படங்களுக்கு இசையமைக்க விரும்புறேன்’ன்னார். அதனால அவர் இந்தப் படத்துக்கு இசையமைச்சிருக்கார்.’’




``பயோபிக் படங்கள்தான் உங்க பலம். இப்ப ஓ.டி.டி பிளாட்பாரம் வந்த பிறகு பயோபிக் படங்களின் வரவுகள் அதிகரிச்சிருக்கே..?’’
‘`நான் பண்ணின பயோபிக்கிற்கும் இப்ப வர்றதுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு. ஒருவர் வாழ்க்கையைப் படமா எடுக்கும்போது குறைநிறைகள், விமர்சனங்கள் எல்லாம் இருக்கணும். பாரதியார், பெரியார் வாழ்க்கை வரலாற்றை அப்படித்தான் படமா எடுத்தேன். பாரதியைப் பொறுத்தவரை அவரைப் பத்தின தரவுகள் ரொம்பக் குறைவாக் கிடைச்சது. அவரைப் பத்தி மத்தவங்க சொன்ன வாய்மொழித் தகவல்களையும் பயன்படுத்திக்கிட்டேன். பெரியாருக்கு ஆதாரபூர்வமாப் பதிவு செய்யப்பட்ட நிறைய தகவல்கள் இருந்தன. கணிதமேஜை ராமானுஜன் பற்றிய படத்தில் சம்பவங்கள் குறைவு. இப்படி ஒவ்வொரு பயோபிக்கும் ஒருமாதிரிதான் இருக்கும். ஆனால் ஒரு மனிதரின் வாழ்க்கையைப் படமா எடுக்கும்போது அவர்மீதான விமர்சனங்களை மறைச்சுட்டு, முழுக்க புனிதப்படுத்திடக்கூடாது. அதேமாதிரி, இப்போ பயோபிக் சினிமாக்கள்னு வரும் படங்கள் மசாலா சேர்த்துவருது. பயோபிக் படங்கள் மசாலா சினிமாக்கள் அல்ல!”



``ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான ‘தலைவி’ பார்த்தீங்களா?’’
‘`பார்த்தேன். ஒரு முழுமையான படமா இல்லை. ஜெயலலிதா பத்தி நமக்குத் தெரிஞ்ச விஷயங்களை கலர்ஃபுல்லா பண்ணியிருக்காங்க. ‘தலைவி’யில் ஒரு வழக்கமான சினிமாவில் உள்ள நடனம் மாதிரியான காட்சிகள் எல்லாம் வச்சிருக்காங்களே தவிர, ஆழமான விஷயங்கள் இடம்பெறாதது எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமா இருந்துச்சு. ‘லிங்கன்’, ‘சாப்ளின்’ படங்கள் எல்லாம் கதாபாத்திரங்களின் உள்மனதிற்குள் போயிட்டு, அவங்க ஏன் வெளியே இப்படி நடந்துகிட்டாங்க என்பதற்கான விடை இருக்கும். என்னோட ‘பாரதி’, ‘பெரியார்’ ரெண்டிலும் பலர் அறியாத விஷயங்களும் வச்சிருப்பேன். ஒரு பயோகிராபியில நமக்குத் தெரியாத விஷயங்களும் இருக்கணும். ‘பெரியார்’ பார்த்துட்டு கலைஞர் என்னைக் கூப்பிட்டு, ‘வரலாற்றுப் பிழை இல்லாமல் நேர்மையா பண்ணியிருக்கீங்க’ன்னார். அதை மிகப்பெரிய பாராட்டா கருதுறேன்.’’