அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் சர்வதேச அளவிலான 80வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது.
சர்வதேச அளவில் நடைபெறும் இந்த விருது விழாவுக்கு ஏராளமான திரைப்படங்கள் விருதுகளுக்காகப் பல பிரிவுகளில் விண்ணப்பித்திருந்தன. இந்நிலையில் தற்போது 'கோல்டன் குளோப்' விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியல் (இறுதி பரிந்துரைப் பட்டியல்) வெளியாகியுள்ளது. இதில் ஆங்கிலம் அல்லாத பிற மொழிக்கான 'சிறந்த திரைப்படம்' என்னும் பிரிவில் ராஜமௌலியின் 'RRR' திரைப்படம் நாமினேட்டாகியுள்ளது. மேலும், 'சிறந்த பாடல்' பிரிவில் 'RRR' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலும் நாமினேட்டாகியுள்ளது.

அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதம் நடைபெறும் 95-வது ஆஸ்கர் விருதுகள் போட்டியில், சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் போட்டியிட இந்தியா சார்பில் குஜராத்தித் திரைப்படமான 'Chhello Show' (The Last Film Show) அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டது. இதில் 'RRR' திரைப்படம் தேர்வாகாமல் போனதால் அந்தப் படத்தை, தனிப்பட்ட முறையில் பல்வேறு சர்வதேச விருது நிகழ்வுகளில் இடம்பெறச் செய்யத் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் ராஜமொளலி. குறிப்பாக, ஆஸ்கர் விருதுகள் போட்டியிலும் இடம்பெறச் செய்ய ஓப்பன் கேட்டகரியில் 'For your consideration (FYC)' என்ற விளம்பர யுக்தி மூலம் திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நபர்களுக்கு 'RRR' திரைப்படத்தைத் தொடர்ந்து திரையிட்டுக் காட்டி வருகிறார். மேலும், ஆஸ்கர் நாமினேஷனுக்காக 'RRR' திரைப்படத்தை மொத்தம் 15 பிரிவுகளில் விண்ணப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ராஜமொளலி தனது ட்விட்டர் பக்கத்தில், "கோல்டன் குளோப் விருதுகளுக்காக இரண்டு பிரிவுகளில் 'RRR' திரைப்படத்தைப் பரிந்துரைத்ததற்காக கோல்டன் குளோப்ஸின் தேர்வுக் குழுவிற்கு நன்றி. 'RRR' படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.