
குட்டி குட்டியாய்த் திருடிக்கொண்டிருக்கும் நாயகன், பெட்டி பெட்டியாய்த் திருட வங்கிக்குள் நுழையும் கதைதான், `கொரில்லா.’
அதில் ஒரு விவசாயி, ஒரு சிம்பன்ஸி, ஒரு ஹீரோயின் எல்லாம் சேர்த்து, சமூக அக்கறை கொண்ட படமாக எடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர்.
ஜீவா, ஜாலியாக நடித்திருக்கிறார். காமெடி பண்ணுகிறார், காதல் பண்ணுகிறார், கருத்தாய்ப் பேசுகிறார். கண்களையும் காதுகளையும் உறுத்தவில்லை. ஷாலினி பாண்டேவுக்கு முதல் நேரடி தமிழ்ப்படம். அழகாய் இருக்கிறார், அளவாய் நடித்திருக்கிறார். சதீஷ் வழக்கம்போல் டபுள் மீனிங் காமெடிகளை நம்மீது அள்ளி வீசுகிறார். விவேக் பிரசன்னாவுக்குக் கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரம்; ஆங்காங்கே சிரிக்கவைக்கிறார். விவசாயியாக நடித்திருக்கும் மதன்குமார் கவனிக்க வைக்கிறார். யோகிபாபு - சிம்பன்ஸி காம்போவின் காமெடி அள்ளுகிறது. `நான் கடவுள்’ ராஜேந்திரன், ராதாரவி, சுவாமிநாதன் என இன்னும் சில அபிமான நட்சத்திரங்கள் முகம் காட்டுகிறார்கள்.

சிம்பன்ஸி நடித்திருக்கும் படத்துக்கு ஏன் `கொரில்லா’ எனப் பெயர் வைத்தார்கள்? இந்தப் படத்திற்கும் கதைக்கும் ஏன் சிம்பன்ஸி? கொள்ளையர்கள் ஏன் முகமூடியைக் கழற்றிக்கொண்டு கூலாகப் பேட்டி கொடுக்கிறார்கள்? குழந்தைகள் ரசிக்கும் சிம்பன்ஸி படத்தில் ஏன் எக்குத்தப்பு இரட்டை அர்த்த வசனங்கள்? - இப்படி அடிஷனல் ஷீட்ஸ் வாங்கிக் கேள்விகள் கேட்கலாம்.
படத்தில், விவசாயக் கடன் பிரச்னையைப் பற்றிப் பேசி, அதற்கொரு தீர்வும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் டான் சாண்டி. படத்தின் நோக்கம் அதுதான் என்றால், அதற்கான திரைக்கதை இது நிச்சயமாக இல்லை. பணம் மட்டும் வாழ்க்கையென சுயநலமாய் வாழும் நாயகன், மனம் திருந்துவதுதான் கதை என்றால், திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம். சமீபமாக, கைத்தட்டல் பெறுவதற்காகவே `விவசாயி’களைத் தமிழ்சினிமா கையில் எடுக்கிறதோ என்கிற சந்தேகமும் நாளுக்குநாள் வலுக்கிறது.

சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை, சிறப்பு. கஷ்டப்பட்டுக் காட்சிகளின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. ஆர்.பி.குருதேவின் கேமரா, நிறைவாய் படம் பிடித்திருக்கிறது. ரூபனின் படத்தொகுப்பு சில இடங்களில் வேகம் கூட்டியிருக்கிறது.
லாஜிக், மேஜிக் எதுவும் தேவை யில்லை. கொஞ்சம் வாய்விட்டுச் சிரித்தால்போதும் என நினைப்ப வர்களுக்கு, இந்த `கொரில்லா’வைப் பிடிக்கும்!