வில்லனாக அறிமுகமாகும் தினேஷ்!

விஜய் டி.வியின் பட்டறையில் உருவான பலரும் இன்று திரைத்துறையில் முன்னணி நாயகர்களாக வலம் வருகிறார்கள். சந்தானம், சிவகார்த்திகேயன், லொள்ளு சபா ஜீவா, மிர்ச்சி செந்தில் என இப்பட்டியலில் மேலும் ஒருவர் இணைந்து இருக்கிறார். அவரது பெயர் தினேஷ்.

இவர் விஜய் டி.வியில் மகான், பிரிவோம் சந்திப்போம் என இரண்டு தொடர்களில் நாயகனாக நடித்தவர். சினிமாவின் மீது  கொண்ட காதலால், திரைத்துறையில் எப்படியாவது கால்பதிக்க வேண்டும் என்ற கனவுகளோடு சென்னை வந்தவர் தினேஷ்.

விஜய் டி.வியின் நிகழ்ச்சி தயாரிப்புத் துறையில் ஈடுபட்டு வந்தார். விஜய் டி.வியின் 'மகான்' தொடரில் ஸ்ரீராகவேந்திராக நடித்து ரஜினிகாந்தின் வாழ்த்துக்களைப் பெற்றார். அதைத் தொடர்ந்து 'பிரிவோம் சந்திப்போம்' தொடரில் காதல் நாயகனாக வலம் வந்து பிரபலமாக பேசப்பட்டார். இப்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கும் வந்துவிட்டார்.

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'திருமணம் என்னும் நிக்ஹா'. ஜெய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் தினேஷ். திரைத்துறையில் கிடைத்த முதல் வாய்ப்பு அழுத்தமான கதாபாத்திரம் என்பதாலும், கதையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரம் என்பதாலும் சந்தோஷமாக இருக்கிறார் தினேஷ்.

அனீஸ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரணக்கொடூரமான வில்லன்களை பார்த்துவிட்ட தமிழ் சினிமாவில் நாயகன்களுக்கு நிகராக வில்லன்களும் ஸ்மார்ட்டாக இருப்பதே தற்போதைய ட்ரெண்ட் என்பதால், தானும் ஒரு முக்கியமான இடத்தை பிடிப்போம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் தினேஷ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!