தள்ளிப் போகிறது 'பிரியாணி'?

செப்டம்பர் 6-ம் தேதி வெளியாவதாக இருந்த 'பிரியாணி', அந்த தினத்தில் வெளியாகாதாம். செப்டம்பர் மாத இறுதியில் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்களாம்.

கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி மற்றும் பலர் நடிக்க, வெங்கட்பிரபு தயார் செய்து வந்த படம் 'பிரியாணி'. யுவன் இசையில் வெளிவரும் 100-வது படம் இது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று நடைபெறுவதாக இருந்தது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் 'பிரியாணி' படம் செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து இருந்தார்கள்.

ஆனால், 'பிரியாணி' படத்தின் பணிகளை மிகவும் மெதுவாக நகர்த்தி வருகிறாராம் வெங்கட்பிரபு. 'பிரியாணி' இசையின் மாஸ்டர் காப்பியை சோனி நிறுவனத்திடம் அளித்து விட்டார்கள். இசை வெளியீடு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளிவர வாய்ப்பில்லையாம்.

ஆகஸ்ட் மாத இறுதியில் இசையையும், செப்டம்பர் மாத இறுதியில் படத்தினையும் வெளியிட இருக்கிறார்கள். செப்டம்பர் 6-ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', விஷால் நடித்துள்ள 'மதகஜராஜா' ஆகிய படங்கள் வெளிவருவது உறுதியாகி இருக்கிறது.

'சகுனி', 'அலெக்ஸ் பாண்டியன்' ஆகிய படங்கள் கார்த்திக்கு சறுக்கியுள்ளதால், 'பிரியாணி'யை நம்பித்தான் இருக்கிறார் கார்த்தி. எனவே, 'பிரியாணி' ரசிகர்களுக்கு 'கமகம'க்க வேண்டும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார் கார்த்தி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!