ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பியா 'ஐ'?

நடந்து முடிந்த 'ஐ' படத்தின் இசை வெளியீட்டினைத் தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அதிரடிகள் நெட்டில் ஹிட் அடிக்கத் தொடங்கிவிட்டன. அர்னால்டு  ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

பல்வேறு சர்ச்சைகள் இந்த நிகழ்ச்சியில் அரங்கேறினாலும் இசை வெளியீடும், படத்தின் புரமோஷனும் அதிரிபுதிரியாக ரீச் ஆனதில் மகிழ்ச்சியில் இருக்கிறது ‘ஐ’ படத்தின் தயாரிப்பு தரப்பு. இதனால் படத்தின் தெலுங்குப் பதிப்பின் பாடல்களை ஜாக்கிசானை வைத்து வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

 
ஏற்கெனவே ‘ஐ’ படத்தின் டீஸர் திருட்டுத்தனமாக நெட்டில் வெளியானது. இசை வெளியீடு முடிந்த அடுத்தநாளே ‘ஐ’ படத்தின் கதையும் நெட்டில் பரவியது. அந்தக் கதையையும், படத்தின் டீஸரையும் ஒப்பிட்டு ‘ஐ’ படம் 1939-ல் ஹாலிவுட்டில் வெளியான ‘தி ஹன்ச்பேக் ஆஃப் நோட்ரி டேம்’ படத்தின் அப்பட்டமான காப்பி என்றும் 1986-ல் வெளியான ‘தி ஃபிளை’ படத்தின் தழுவல் என்றும் சமூக வலைதளங்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தின் டீஸரில் இருக்கும் பெரும்பாலான காட்சிகள் மேற்சொன்ன இரண்டு படங்களிலும் இருப்பதுதான் சந்தேகங்களுக்கான காரணம். ஆனால், ‘ஐ’ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் இது ஒரிஜினல் படைப்புதான் என்றும் உலக அளவில் தமிழர்களைத் தலைநிமிரச் செய்யப்போகும் ஒரு படம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘ஐ’ படம் வருகிற தீபாவளி அன்று திரைக்கு வருகிறது.  ஒரிஜினல் படைப்பாக தலை நிமிரச் செய்யுமா? காப்பி அடிக்கப்பட்ட படமாக தலைகுனிய வைக்குமா? என்பது தீபாவளிக்குத் தெரிந்துவிடும்.
 
- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!