காப்பி அடித்தாரா தமிழ் இசையமைப்பாளர்?

மலையாள சினிமாவில் இந்த ஆண்டு அதிரிபுதிரி ஹிட் அடித்த படம் 'பெங்களூரு டேஸ்’. ஆனால் இப்போது அந்தப் படத்துக்கு புதுச் சிக்கல் வந்துள்ளது.

நிவின் பாலி, துல்ஹர் சல்மான், ஃபஹத் ஃபாசில், நஸ்ரியா நசீம், இஷா தல்வார், பார்வதி மேனன், நித்யா மேனன் போன்ற யூத் கேங் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்கியது மலையாள சினிமாவின் பிரபல ஸ்கிரீன் மற்றும் வசனகர்த்தாவான அஞ்சலி மேனன் என்ற பெண். இப்போது கனடாவின் இசை மேதையான பிரையன் ஆடம்ஸ் தன் பாடல் ஒன்றைக் காப்பி அடித்து இந்தப் படத்தில் என் அனுமதியின்றி அப்படியே பயன்படுத்தி இருக்கிறார்கள் என வழக்குத் தொடர்ந்திருக்கிறார். கனடாவின் வான்கூவர் நகரத்தில் இருக்கும் பிரையன் ஆடம்ஸின் அலுவலகத் திலிருந்து முறையான விளக்கம் கேட்டு படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

மலையாள சினிமாவில் புதுஅலை இயக்குநர்களின் வருகைக்குப் பிறகு மேற்கத்திய ஆல்பங்களின் இசை உருவல்கள் அங்கொன்றும் இங்கொன்றும் பயன்படுத்தப்பட்டுதான் வருகின்றன. இதில் உச்சம் 2012ல் சந்தோஷ் சிவனின் 'உருமி’ படம். லொரீனா மெக்கென்னட் என்ற கனடாவின் பிரபல பாடகரின் ஆல்பத்திலிருந்து ’உருமி’ படத்தின் இசையமைப்பாளர் தீபக்தேவ் பல இடங்களில் பயன்படுத்தி இருந்தார். இப்போதுவரை அதற்கான காப்பிரைட் பிரச்னை கண்டங்கள் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் பிரையன் ஆடம்ஸ் சர்ச்சை.

அவரின் புகழ்பெற்ற 'சம்மர் 69’ என்ற பாடலின் 3.5 நிமிடங்கள் அப்படியே உருவப்பட்டு, 'நம் ஊர் பெங்களூரு’ என்ற பெங்களூர் டேஸ் பாடலில் பயன்படுத்தப்பட்டு இருப்பது யூடியூப் வீடியோ ஆல்பத்தை முதல்முறை கேட்டதுமே புரிகிறது. 1985ம் ஆண்டு வெளியான 'ரெக்லெஸ்’ என்ற அவருடைய பிரபல ஆல்பத்தின் முக்கியப்பாடல் அது.

படத்தின் இசையமைப்பாளர் சென்னை இளைஞர் கோபி சுந்தர். 'பொய் சொல்லப் போறோம்’, 'யாருடா மகேஷ்’ படங்களின் இசையமைப்பாளர். அங்கே இப்போது நம் அனிருத் போல பாப்புலர். ''அவர்கள் குறிப்பிட்டிருக்கும் அந்தப் பாடலை காப்பி பண்ண கனவிலும் நினைக்கவில்லை. அந்த ஆல்பத்தின் 'சம்மர் ஆஃப் 69’ பாடலின் ட்ராக்கும் இந்தப் பாடலும் ஒன்றைப்போல இருக்கும். என் பாடல் வேறு வெர்ஷன் இசையமைப்பைக் கொண்டது. தொழில்நுட்ப விஷயங்கள் தெரியாதவர்கள் வேண்டுமானால் ஒரே மாதிரி இருப்பதாய் சொல்வார்கள்'' என்பது கோபிசுந்தரின் வாதம்.

1975ம் ஆண்டு சட்டப்படி, காப்பிரைட் உரிமம் பெற்ற ஒருவரால்தான் அந்த இசையை பயன்படுத்த வேண்டும் என்பது அவர்கள் தரப்பு வாதம். காப்பியே பண்ணலை என்பது பெங்களூரு டேஸ் படக் குழுவினரின் வாதம்.

கேரளா வரைக்கும் வந்துவிட்ட காப்பிரைட், தமிழ்நாட்டுக்கும் வருவதற்கு ரொம்பதூரம் இல்லை. அலெர்ட் தமிழ் இசையமைப்பாளர்களே!

ஆர்.சரண்

 

   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!