Published:Updated:

குலுகுலு - சினிமா விமர்சனம்

சந்தானம்
பிரீமியம் ஸ்டோரி
சந்தானம்

திரை முழுக்க ஆண்களின் ஆட்சி நடக்கும் இந்தப் படத்தில் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள் அதுல்யா சந்திராவும் நமீதா கிருஷ்ணமூர்த்தியும்

குலுகுலு - சினிமா விமர்சனம்

திரை முழுக்க ஆண்களின் ஆட்சி நடக்கும் இந்தப் படத்தில் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள் அதுல்யா சந்திராவும் நமீதா கிருஷ்ணமூர்த்தியும்

Published:Updated:
சந்தானம்
பிரீமியம் ஸ்டோரி
சந்தானம்

கொஞ்சம் காமெடி, கொஞ்சம் கருத்து என வெளியாகியிருக்கும் படமே இந்த ‘குலுகுலு.'

‘நோ' என்றே சொல்லத் தெரியாமல் யார் என்ன உதவி கேட்டாலும் உடனே ஓடிப்போய்ச் செய்கிற சந்தானம், அழிக்கப்பட்ட பழங்குடியினத்தில் மிஞ்சியிருக்கும் உயிர். கடத்தப்பட்ட தங்கள் நண்பனை மீட்டுத்தருமாறு அவரிடம் வேண்டுகிறார்கள் சில இளைஞர்கள். நகரின் மறுபக்கம் சொத்துப் பிரச்னையில் தங்கையையே கொன்றுவிட வெறியோடு அலைந்துகொண்டிருக்கிறார் ஒரு கொடூர வில்லன். இந்த இரண்டு குழுவும் ஓரிடத்தில் முட்டிக்கொள்ள நேர்கிறது. அதன்பின்னர் நடக்கும் காமெடி கலாட்டா களேபரங்கள்தான் கதை.

குலுகுலு - சினிமா விமர்சனம்

இத்தனை ஆண்டுக்கால சினிமா வாழ்க்கையில் சந்தானம் ஏற்றிடாத வேடம் இது. ஒரு காமெடி பன்ச் இல்லை. ஒரு ஹீரோயிச காட்சி இல்லை. உடல்கேலி, பெண் கிண்டல் போன்ற நச்சுகள் இல்லை. முற்றிலும் மாறியிருக்கும் சந்தானத்தின் அவதாரத்தைப் பார்ப்பதற்கே புதிதாக நன்றாக இருக்கிறது. குலுகுலு படத்தின் வித்தியாச மேஜிக் என சந்தானத்தின் இந்தப் புது அவதாரத்தைச் சொல்லலாம். வாழ்த்துகள் சந்தானம்!

திரை முழுக்க ஆண்களின் ஆட்சி நடக்கும் இந்தப் படத்தில் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள் அதுல்யா சந்திராவும் நமீதா கிருஷ்ணமூர்த்தியும். ஜார்ஜ் மர்யான் அண்ட் கோ சிரிப்பிற்கு கேரன்டி. ஹரீஷ் குமார் தனக்கான எல்லையையும் தாண்டி நடித்திருப்பது போகப் போக அயர்ச்சியூட்டுகிறது. அவரின் நண்பர்களாக வரும் கவி சுந்தரம், மெளரீஷ் தாஸ், யுவராஜ் ஆகிய மூவரும் ஓரிரு இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.

வித்தியாசமான ட்ரீட்மென்ட்டுக்காக மெனக்கெட்டிருக்கிறது தொழில்நுட்பக்குழு. ரகளையான தோற்றத்திற்காக முழுப்படத்திற்கும் வண்ணங்களால் ஒளி சேர்த்திருக்கிறார் விஜய் கார்த்திக் கண்ணன். குலுகுலுவின் பெரிய பலம் சந்தோஷ் நாராயணன். கதை பரபரப்பாக நகரும்போது பல்ஸ் கூட்டி, தொய்வடையும்போது தாங்கி பின்னணி இசையிலும், ‘அம்மா நானா, அன்பரே' எனப் பாடல்களிலும் வித்தை காட்டுகிறார். ஜாக்கியின் கலை இயக்கமும் கவனிக்க வைக்கிறது.

குலுகுலு - சினிமா விமர்சனம்

நாடோடி இனக்குழுக்களின் வழியே மொழி அரசியலின் முக்கியத்துவத்தைப் பேசுவது, ‘நாடுவிட்டு நாடு வந்தவன்கிட்ட கொடுக்க என்னங்க இருக்கும்?' என வசனங்களின் வழியே புலம்பெயர்ந்தவர்களின் வலியை வெளிப்படுத்தியிருப்பது, நிறவெறி எதிர்ப்பு, மெனோபாஸைக் கொண்டாடுவது எனப் பல முக்கியமான மதிப்பீடுகளை பிளாக் ஹியூமர் லேயரில் தந்திருக்கும் இயக்குநர் ரத்னகுமாருக்கு ஒரு அழுத்தமான கைகுலுக்கல். ஆனால் ஒரு இடத்தில் நம்மைத் தொற்றிக்கொள்ளும் குபீர் சிரிப்பு அடுத்த சில காட்சிகளில் சுத்தமாய் காணாமல்போவது மாதிரியான சீரற்ற க்ராப்தான் படத்தின் பிரச்னை. கூடவே லாரி நிறைய ஆள்கள் போன்ற தேவையற்ற விஷயங்கள்.

குலுகுலு கேங் பயணிக்கும் சாலைகள் போல திரைக்கதையும் சீராக இருந்திருந்தால் இன்னமும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கும் இந்தப் படம்.