Published:Updated:

``அந்த செளக்கிதார்போல, இந்தக் `கூர்கா'வும் எல்லோரையும் மகிழ்விக்கட்டும்!'' - கரு.பழனியப்பன்

கரு.பழனியப்பன்
கரு.பழனியப்பன் ( 'கூர்கா' இசை வெளியீட்டு விழா! )

சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியாகவிருக்கும் படம், 'கூர்கா'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. விழாவின் சுவாரஸ்யங்கள் இங்கே!

சாம் ஆண்டன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான '100' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து யோகி பாபுவை லீடு ரோலாக வைத்து இவர் இயக்கியிருக்கும் படம், 'கூர்கா'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. படக்குழுவினரோடு எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்தார்த், கரு.பழனியப்பன், எஸ்.பி.பி.சரண் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
'கூர்கா' இசை வெளியீட்டு விழா

முதலில் பேசிய கரு.பழனியப்பன், "லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ரவீந்திரன், இப்படத்தைத் தயாரிச்ச 4 மங்கீஸ் ஸ்டூடியோவைச் சேர்ந்த கிஷோரைப் பற்றிச் சொல்லிகிட்டே இருந்தார். ஒரு தயாரிப்பாளரைப் பற்றி இன்னொரு தயாரிப்பாளர் இப்படி முகம் மலரப் பேசுவது, தமிழ் சினிமாவில் புதிய செய்தி. இதைக் கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாகிடுச்சு. ஏன்னா, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாடி இதே மேடையில திரு.ரவீந்திரன் சந்திரசேகரை ராஜராஜ சோழனோடு ஒப்பிட்டுப் பேசியிருந்தேன். அவர் நிறைய பணம் வெச்சிருந்து, ஒரு படம் எடுக்காம சின்னச் சின்ன படங்களுக்கு வாய்ப்பு தருவார். இன்னைக்கு ராஜராஜனைப் பற்றித்தான் நாடு முழுக்கப் பேசிக்கிட்டிருக்கிறதுனால இதைச் சொல்றேன்.

இதை முதன்முதல்ல பேசினது நான்னு நினைவுபடுத்துக்கிறேன். ஆனா, இன்னைக்கு நிலைமையில எடுத்துக்க வேண்டியது ராஜராஜனை இல்லை. அவருடைய காலம் முடிஞ்சிடுச்சு. இது என்ன காலம்ங்கிறதை வரலாற்று ஆசிரியர்கள் முடிவு பண்ணிக்கட்டும். வாழும் நாம எதை முடிவு பண்ணணும்னா, தஞ்சாவூர்ல மீத்தேன் எடுத்துக்கிட்டிருக்காங்கடா. அதை முதல்ல திரும்பிப் பாருங்க. ராஜராஜனை அப்புறம் பார்த்துக்கலாம். காரணம், நம் நிலத்தை யார் பறித்தார்கள் என்பது முக்கியம் இல்லை. இன்னைக்குக் கண் முன்னாடி ஒருத்தன் பறிச்சுக்கிட்டே இருக்கான். அவனைக் கவனிக்காம, இன்னும் ராஜராஜனைப் பற்றிப் பேசிக்கிட்டிருக்கிறது முக்கியம் இல்லை. தொடர்ந்து இதைப் பற்றிப் பேசுற சித்தார்த், மயில்சாமி போன்றவர்கள்லாம் மேடையில இருப்பது மகிழ்ச்சி.

கூர்கா இசை வெளியீட்டு விழா
கூர்கா இசை வெளியீட்டு விழா

வரலாற்றில் 30 கோடி மக்கள் வாழ்ந்த இந்தியாவில் சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்தது 3 லட்சம் பேர்தான். இந்தச் சூழல்ல குரல் கொடுக்கிறது ரொம்பவே அவசியம். கூர்கா ஓர் இனத்தின் பெயராக இருந்தால்கூட, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூர்காங்கிறவங்க வாட்ச்மேன். இந்தக் கூர்கா ஏன் முக்கியம்னா, 'வாட்ச்மேன்'ங்கிறவன் பிரமாதமா என்டர்டெயின் பண்றவன்னு தெரியும். கடந்த ஐந்தாண்டு காலமாக சௌக்கிதார்கள் நம்மை என்டர்டெயின் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. இன்னும் ஐந்து வருடங்கள் பண்ணுவாங்க. அதைப்போல, இந்தக் 'கூர்கா' நம்மை என்டர்டெயின் பண்ணும். நம்ம 'இடுக்கன் வருங்கால் நகுக'னு இன்னும் அவங்களைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே இருக்கோம். இவ்வளவு பிஸியா இருக்கிற யோகி பாபுவைக் கூட்டிக்கிட்டு வந்து 35 நாள் நடிக்க வெச்சது, சாம் ஆண்டனுடைய சாதனை. ஏன்னா அவர் நடிச்சுக்கிட்டிருந்த மற்ற படங்கள்ல இருந்து என்ன பொய் சொல்லிட்டு வந்தார்னு, யோகி பாபுவுக்கு மட்டும்தான் தெரியும். இதைவிட, இன்னும் இந்தக் குரலால் தமிழர்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கும் எஸ்.பி.பி இவர்களை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி.

ஒருபோதும் அவர் என்னால், நான் செய்தேன், நான்னு அவர் சொல்லி நான் கேட்டதே கிடையாது. இவ்வளவு பணிவோடு இருப்பது, வாழும் உதாரணமா இருப்பது எஸ்.பி.பி அவர்கள்தான். இன்னைக்கு அவர் வந்ததுனாலதான் மயில்சாமி ரொம்பப் பணிவாகிட்டார். நானும், அவரும்தான் சௌக்கிதார்களைப் பற்றிப் பேசிக்கிட்டிருந்தோம். சமீபத்துல ஒரு அமைச்சர், தமிழ்நாட்டுல தண்ணீர்ப் பஞ்சமே கிடையாதுனு சொல்லிருக்கார்.

இதுதான் எல்லா பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தி. அப்படியே கீழே, 'தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க எடப்பாடி பழனிசாமி அவசரக் கூட்டம்'னு இன்னொரு செய்தி. இன்னொண்ப்னு என்னன்னா, அதே அமைச்சர் அதில் கலந்துகொள்கிறார்னு துண்டுச் செய்தி. சௌக்கிதார்லாம் காமெடினு சொன்னா, இப்போ தெரியுதா உங்களுக்கு! அந்த செளக்கிதார்கள்போல, இந்தக் கூர்காவும் எல்லோரையும் மகிழ்விக்கட்டும்'' என்றார், கரு.பழனியப்பன்.

தொடர்ந்து பேசிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம், "நான் இந்த மாதிரி நிறைய விழாக்கள்ல கலந்துக்கிறது இல்லை. நான் இப்போ வந்ததுக்கு முக்கியமான காரணம், என் வீட்டுப் பையன் கிஷோர். நான் மெட்ராஸ்ல இருக்கிறதே ரொம்பக் கம்மி. நிறைய இடங்களுக்குப் பயணப்பட்டுக்கிட்டிருக்கேன். இப்போ வெளிவர்ற படங்களைப் பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது. பாட்டுப் பாட மட்டும்தான் தெரியும். ரொம்ப அமைதியான ஆள் கிஷோர். என்கிட்ட இதை அவர் சொன்னவுடனே வர்றேன்னு சொல்லிட்டேன். இந்தப் படத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் வெற்றி கிடைக்கணும். ஏன்னா, ஒரு நிர்வாகம் வெற்றி பெற்றால், நிறைய பேருக்கு சோறு கிடைக்கும். சினிமாவைப் பொறுத்தவரை யாருமே சோம்பேறியா இருக்க முடியாது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ராஜ் ஆர்யனுக்கு வாழ்த்துகள். என்னைப் பத்தி நிறையபேர் பெரிய பெரிய விஷயங்களா சொல்லியிருக்காங்க. அதுக்குத் தகுந்த மாதிரி நானும் வளரணும்னு கடவுளை வேண்டிக்கிறேன்.

கூர்கா இசை வெளியீட்டு விழா
கூர்கா இசை வெளியீட்டு விழா

எந்த மேடையில பேசினாலும் பொதுவான விஷயம் பேசுவேன். உங்களுக்கு நிறைய வாட்டர் பாட்டில் கொடுத்திருக்காங்க. அதை அப்படியே விட்டுட்டுப் போயிடாதீங்க. தண்ணி இல்லைன்னாகூட பாட்டிலைக் குப்பையில போட்டுடுங்க. தங்கம், வைரத்தைவிட தண்ணிதான் விலை மதிப்பு இல்லாததா ஆகிடுச்சு. தண்ணீர்ப் பற்றாக்குறை ரொம்ப அதிகமாகிடுச்சு. அதுக்குக் காரணமும் நாமதான். அதனால, ரொம்பக் கவனமா தண்ணீரைப் பயன்படுத்துங்க. வீட்டுல தட்டுல சாப்பிடுறதைவிட இலையில சாப்பிடுங்க. தண்ணீரைச் சேமிக்க இப்படிப் பல வழிகள் இருக்கு. நம்மளோட அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் ரொம்ப அவசியம். எல்லோருக்கும் நன்மை நடக்கும். மொத்தப் படக்குழுவுக்கும் வாழ்த்துகள்." எனப் பேசி முடித்தார், எஸ்.பி.பி.

அடுத்த கட்டுரைக்கு