Published:Updated:

``அண்ணாவ அப்படிப் பார்த்தது செம ஷாக்!'' - ஜீ.வி.பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ

பவானி ஶ்ரீ
பவானி ஶ்ரீ

விஜய் சேதுபதி நடிக்கும் க/பெ ரணசிங்கம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார், ஜீ.வி.பிரகாஷின் தங்கை பவானி ஶ்ரீ. மணிரத்னம், 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கும் படங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆசையோடு சினிமாவுக்கு வந்திருக்கிறார், பவானி ஶ்ரீ.

டைரக்‌ஷன் மேலே உங்களுக்கு விருப்பம் உண்டுனு கேள்விப்பட்டோமே?

பவானி ஶ்ரீ
பவானி ஶ்ரீ

’’சென்னைதான் என்னோட சொந்த ஊர். இங்கேதான் காலேஜ் வரைக்கும் படிச்சேன். காலேஜ் படிக்கும்போதே எனக்கு சினிமா மேல ஆர்வம் இருந்தது. அதனால சினிமாவுக்குள்ளே போகணும்னு நினைச்சேன். அந்தச் சமயத்தில் குறும்படங்கள் இயக்கியிருக்கேன். டைரக்‌ஷன் முயற்சி பண்ணலாம்னு தோணுச்சு. அதனால, ஏ.எல்.விஜய் சார்கிட்ட `இது என்ன மாயம்' படத்துல உதவி இயக்குநரா இருந்தேன். பிறகு இயக்குநர் ப்ரியதர்ஷன் சார்கிட்ட 'சில சமயங்களில்' படத்துல வேலை பார்த்தேன். என்னோட நண்பர்கள் எடுத்த குறும்படத்துல ஹீரோயினா நடிச்சேன். நடிக்குறது பிடிச்சிருந்தது. அதனால, மாடலிங் துறையில் கொஞ்சநாள் வேலை பார்த்துட்டு, இப்போ நடிக்க வந்திருக்கேன்.’’

முதல் படம் வாய்ப்பு எப்படி வந்தது?

கலைராணி
கலைராணி

’’நடிகை கலைராணிகிட்ட நடிப்பு பற்றி கத்துக்கிட்டேன். அவங்க நடிப்பு திறமை எல்லாருக்கும் தெரியும். கூத்துப்பட்டறையில் இருந்திருக்காங்க. என்னோட முதல் பட வாய்ப்பு இவங்க மூலம்தான் அமைஞ்சது. 'அறிமுக இயக்குநர் விருமாண்டி படம் பண்ண போறார்; புதுமுகம் கேட்குறார். நீங்க விருப்பமா இருக்கீங்களா'னு கேட்டாங்க. விருமாண்டி சாரைப் பார்த்தேன், கதையும் சொன்னார். எனக்கு பிடிச்சிருந்தது. அதனால உடனே சம்மதிச்சிட்டேன். படத்துல எந்த மாதிரியான ரோல் பண்றேன்னு இப்போதைக்குச் சொல்ல முடியாது.’’

விஜய் சேதுபதி படத்துல நடிக்கிறது எப்படியிருக்கு?

க/பெ ரணசிங்கம்
க/பெ ரணசிங்கம்

’’அவர்கூட இன்னும் எனக்கு ஷாட்ஸ் வரல. எனக்கு ரொம்ப பிடித்த நடிகர். திரையில் எத்தனை பேர் இருந்தாலும் ஆடியன்ஸை தன் பக்கம் ஈர்க்கிற வல்லமை கொண்டவர். அவர்கூட நடிக்கப் போறோம்னு நினைச்சாலே சந்தோஷமா இருக்கு. இதுவரைக்கும் எனக்கு ஐஸ்வர்யா ராஜேஷ்கூடதான் ஷூட்டிங் நடந்திருக்கு. அவங்களும் நடிப்புல திறமை வாய்ந்தவங்க; நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்.’’

சினிமாவுக்குள்ள வர்றதுக்கு வீட்டுல என்ன சொன்னாங்க?

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

’’நான் எது பண்ணுனாலும் சந்தோஷத்துடன் கடுமையா உழைச்சு பண்ணுனு சொல்லுவாங்க. முக்கியமா என்னோட அண்ணி சைந்தவி எப்போதுமே முழு ஒத்துழைப்பு கொடுப்பாங்க. முதல் முறையா ஷூட்டிங் போறப்போ டென்ஷனா இருந்தேன். ராமநாதபுரத்துலதான் படத்தோட ஷூட்டிங் நடந்தது. அண்ணிதான் என்கூட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தாங்க. எனக்கு என்னவெல்லாம் தேவையோ அதெல்லாம் வாங்கி வெச்சிருந்தாங்க. எனக்கு அவங்க வெயிலில் கஷ்டப்படுறது சங்கடமா இருந்தது. அதனால 'நானே, தனியா என்னைப் பார்த்துக்குவேன் அண்ணி கவலைப்படாதீங்க'னு சொல்லி சென்னைக்கு அனுப்பி வெச்சேன். ரஹ்மான் மாமாகிட்டதான் ஷூட்டிங் போறப்போ சொல்ல முடியல. அவங்க பிஸியா இருந்தாங்க. ஆனா, மாமாக்கு கண்டிப்பா நான் சினிமாவுல நடிக்கிறது தெரிஞ்சிருக்கும். சந்தோஷம்தான்படுவார்.’’

சென்னையில் வளர்ந்த பொண்ணு நீங்க ராமநாதபுரம் வட்டார மொழி பேசி நடித்தது எவ்வளவு சவாலா இருந்தது?

பவானி ஶ்ரீ
பவானி ஶ்ரீ

’’சென்னையைவிட ராமநாதபுரம் ஸ்லாங் முழுசா வேறதான். அதை கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன். அதே மாதிரி ராமநாதபுரம் ஊர்ல இருக்கிற காலேஜ் பொண்ணுங்க அஞ்சு பேர்கூட பழக விட்டாங்க. அவங்களுடைய ஸ்டைல், மாடுலேஷன் எல்லாமே உன்னிப்பா பார்த்தேன். ஷூட்டிங் ஆரம்பிச்சதுக்குப் பிறகு எல்லாம் சரியாகிடுச்சு.’’

இசை குடும்பத்தைச் சேர்ந்த உங்களை பின்னணி பாடகியா எதிர்பார்க்கலாமா?

``அண்ணாவ அப்படிப் பார்த்தது செம ஷாக்!'' - ஜீ.வி.பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ

’’சின்ன வயசுல பாட்டு கத்துக்கிட்டேன். ஆனா, பின்னணி பாடகி ஆகுறளவுக்கு எனக்கு ப்ராக்டீஸ் இல்லை. இத்தனை வருடத்துல அதற்கான பயிற்சி, அனுபவம் எடுத்திருக்கணும்; அதை நான் எடுக்கல. இதெல்லாம் பண்ணாம பாடுறது எந்தளவுக்கு நியாமா இருக்கும்ணு தெரியல. யாராவது ஒரு பாட்டு பாடுங்கனு சொன்னக்கூட கொஞ்சம் யோசிக்கதான் செய்வேன். ஆனா, வீட்டுல நானொரு பின்னணி பாடகியா வரணும்னு ஆசைப்பட்டாங்க. சின்ன வயசுல ஹம்மிங் வாய்ஸ்யெல்லாம் கொடுத்திருக்கேன். ஆனா, நான் சீரியஸா பயிற்சி எடுத்துக்காம விட்டுட்டேன். அதனால, என்னை பாடகியா பார்ப்பது கஷ்டம்.’’

Vikatan

உங்களுக்கும், உங்க அண்ணா ஜி.வி.பிரகாஷுக்குமான அண்ணன் தங்கச்சி பாசம் பற்றிச் சொல்லுங்க?

"நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ். ஜீ.வி அண்ணா இசையமைப்பாளரா இருந்து நடிகரா வந்ததது எங்களுக்கு ஷாக்காதான் இருந்தது. ஏன்னா, இந்தச் சின்ன மாற்றத்தை யாரும் எதிர்பார்க்கல. நடிகரா தன்னை நிலை நிறுத்த கடுமையா உழைக்கிறார். அவருடைய தங்கச்சியா இந்த முயற்சியைப் பார்த்து சந்தோஷப்படுவேன். அண்ணாவுடைய நடிப்புல 'நாச்சியார்' படம் எனக்கு பிடிக்கும்.’’

அடுத்த கட்டுரைக்கு